தஞ்சாவூா், நவ. 16–- தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளுக்காகத் தனி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.
இலங்கை நாட்டின் சிங்கள வரலாற்று நூலான ‘மகாவம்சம்’ உள்பட சில நூல்களுக்கு யுனெஸ்கோ அமைப்பு உலகப்பொது நூல் என்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. நாடு, காலம், எல்லைகளைக் கடந்து அனைவருக்கும் பொருந்தக்கூடிய வாழ்வியல் நூலுக்கு மட்டுமே இந்த அங்கீகாரத்தை யுனெஸ்கோ நிறுவனம் வழங்கி வருகிறது. எனவே, உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறள் நூலை யுனெஸ்கோவால் உலக நூலாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் அறிவித்தார்.
இதுதொடா்பாக ஒன்றிய வெளியுறவுத் துறைக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளா்ச்சித் துறை பரிந்துரை செய்தது. இதைத்தொடா்ந்து ஒன்றிய வெளியுறவுத் துறையும் யுனெஸ்கோ அமைப்புக்கு விண்ணப்பம் அனுப்பியது.
ஒரு நூலை உலகப் பொதுநூலாக அறிவிப்பதற்கு என்று பல படிநிலைகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன என்றும், அவற்றை நிறைவு செய்து தந்தால் திருக்குறள்றளுக்கு உலகப் பொது நூல் என்ற தகுதியை வழங்குவது பொதுவான நடைமுறை எனவும் யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகளின்படி, திருக்குறளுக்கு என தனியாக அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். இப்பணியைச் செய்வதற்கான அனுமதியைத் தமிழ்நாடு அரசு, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கியுள்ளது. இதன்படி, தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள சுவடிப்புல வளாகத்தில் திருக்குறளுக்குத் தனியொரு அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.