தீர்ப்பு நாள் – நவம்பர் 16 (1992)
அரசமைப்புச் சட்டம் பிரிவு 340இன் படி அமைக்கப்பட்ட பி.பி.மண்டல் தலைமையிலான இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், ஒன்றிய அரசின் நேரடி நியமனம் மற்றும் கல்வி நிலையங்கள், பதவி உயர்வு, நீதித்துறை மற்றும் தனியார் துறைகளில் இதர பிற்படுத்தப்பட்டோர்க்கு (ஓபிசி பிரிவினருக்கு) 27 சதவிகித இட ஒதுக்கீட்டை பரிந்துரைத்து 31.12.1980இல் ஒன்றிய அரசிடம் அறிக்கை அளித்தது. பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு, ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நேரடி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளித்திடும் அரசு ஆணையை 13.8.1990 அன்று வெளியிட்டது.
பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, 25.9.1991 அன்று மற்றொரு அரசு ஆணை வெளியிட்டது. அந்த ஆணையில், ஓபிசி பிரிவினரில் ஏழைகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், மேலும், இட ஒதுக்கீடு திட்டத்தில் இதுவரை பங்கேற்காத ஜாதியினருக்கு, அதாவது, உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளித்து ஆணை பிறப்பித்தது.
மேற்குறிப்பிட்ட இரண்டு அரசு ஆணைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு (இந்திரா சகானி வழக்கு அல்லது மண்டல் இட ஒதுக்கீடு வழக்கு), நீதி மன்றம் அந்த ஆணைகளுக்கு தடையும் விதித்தது. நீண்ட விவாதத்துக்கு பிறகு, ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, பெரும்பான்மை நீதிபதிகள் கொண்ட தீர்ப்பு (6-3) 16.11.1992 அன்று வழங்கியது.
தீர்ப்பின் சாரம்:
1. ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு அளித்திட வி.பி.சிங் அரசு 13.8.1990 அன்று பிறப்பித்த ஆணை செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2. உயர் ஜாதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு 10 சதவீதத்தை ஒதுக்கீடு செய்து நரசிம்மராவ் அரசு 25.9.1991 அன்று பிறப்பித்த ஆணை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என தீர்ப்பு அளித்து நீதிமன்றம் ஆணையினை நிராகரித்தது.
3. ஓபிசி பிரிவினரில் முன்னேறிய பிரிவினர் அதாவது கிரிமிலேயர் கண்டறிந்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதில் இருந்து விலக்க வேண்டும்.
4. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது.
5. இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 32 ஆண்டுகள் நிறைவு அடைந்த நிலையில், தற்போது ஒன்றிய அரசின் அனைத்து துறைகளிலும் ஓபிசி பிரிவினர் பிரதிநிதித்துவம் முற்றிலும் கவலை அளிப்பதாகவும் ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஓபிசி பிரிவினர் முழு ஒதுக்கீடும் அடைவது எப்போதும் சாத்தியம் இல்லை என்பதையும், இட ஒதுக்கீடு கொள்கை என்றைக்கும் காகிதத்தில் மட்டுமே இருக்கும் வகையில் அமைந்தது.
உயர்ஜாதி அரியவகை ஏழைகளுக்கு ஒன்றிய அரசு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் நிலையில், உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசு இயற்றிய சட்டம் செல்லும் என தீர்ப்பளித்து விட்டது. ஆகவே, இட ஒதுக்கீட்டில் 50 சதவிகித உச்ச வரம்பு என்பதற்கு எந்த அர்த்தமும் கிடையாது.
ஆகையால், மண்டல் குழு பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் ஓபிசி பிரிவினருக்கு 52 சதவீத இட ஒதுக்கீடு, பதவி உயர்வு, நீதித்துறை மற்றும் தனியார் பிரிவில் இட ஒதுக்கீடு, கிரீமிலேயர் முறையை முற்றிலும் ஒழித்தல், மற்றும் இட ஒதுக்கீடு கொள்கையை நிறைவேற்ற தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை ஆகியவற்றை நடைமுறைப்படுத்த நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
– கோ.கருணாநிதி
பொதுச் செயலாளர்
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு