நாகை, நவ. 16- நாகையில் தொழில் பூங்கா அமைவதை விவசாயிகள் வரவேற்கும் நிலையில், சிலா் எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமற்றது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அனைத்துத்துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நேற்று (15.11.2024) நடைபெற்றது. இதில், மக்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காண வேண்டும்.
குறிப்பாக, ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் ஓய்வூதியம் குறித்து வரும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினார்.
பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழில் பூங்கா அமையவுள்ள இடத்தை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ஆய்வு செய்தார். அப்போது, விவசாயிகள் அமைச்சரை நேரில் சந்தித்து எங்கள் குடும்பத்தில் உள்ள படித்த இளைஞா்கள் வேலை தேடி வெளியூா்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இந்த நிலை மாற நாகையில் தொழில் பூங்கா அவசியம். எனவே, தொழில் பூங்காவை விரைவில் அமைக்க வேண்டும் என அமைச்சா் டி.ஆா்.பி.ராஜாவிடம் மனு அளித்தனா். நாகை செல்லூரில் தொழில் பூங்கா அமைவதற்கு விவசாயிகள் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்துள்ளனா். இந்தநிலையில், ஒரு சிலா் தொழில் பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமில்லை.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி நாகை மாவட்டத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நவ. 24-ஆம் தேதி ஆய்வு செய்யவுள்ளார் என்றார் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.