மகாராட்டிராவில் பா.ஜ.க. படுதோல்வி இமாலய வெற்றியை நோக்கி காங்கிரஸ் கூட்டணி! ‘லோக் போல்’ கருத்துக் கணிப்பு முடிவுகள்

Viduthalai
3 Min Read

மும்பை, நவ.16 மகாராட்டிராவில் அடுத்த வாரம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து லோக்போல் அமைப்பின் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கூட்டணியே இந்த முறை வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
மகாராட்டிர மாநிலத்தில் இப்போது ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக உள்ள நிலையில், அங்கு பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி கட்சிகளை உள்ளடக்கிய மஹா யுதி கூட்டணி ஆட்சியில் உள்ளது.

தேர்தல்: மறுபுறம் அங்குக் காங்கிரஸ்- தாக்ரே சிவசேனா- சரத் பவார் என்சிபி கட்சிகள் களத்தில் இறங்குகின்றன. அங்கு நவ. 20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அதைத் தொடர்ந்து நவ. 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒரு பக்கம் ஆட்சியை எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக கூட்டணி களமிறங்குகின்றது. மறுபுறம் பாஜக கூட்டணியை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கூட்டணி களமிறங்குகிறது. ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது ஒரு பக்கம் என்றால் சினவசேனா மற்றும் என்சிபி தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியவும் இந்த தேர்தல் உதவும் என்று சொல்லப்படுகிறது. மகாராட்டிரா தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், அங்கு எந்த கூட்டணி வெல்லப் போகிறது என்பது குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகளை லோக்போல் அமைப்பு வெளியிட்டுள்ளது.

பாஜக படுதோல்வி: அங்கு கடும் போட்டி இருப்பது போல தெரிந்தாலும் காங்கிரஸின் இந்தியா கூட்டணி எளிதாகப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெல்லும் என்று அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பாஜகவின் மஹா யுதி கூட்டணி ஆட்சியை இழக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

வெற்றி யாருக்கு: அங்கு மொத்தம் 288 இடங்கள் இருக்கும் நிலையில், குறைந்தது 145 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும். இந்த முறை காங்கிரஸ்- தாக்ரே சிவசேனா- சரத் பவார் என்சிபி கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணி எளிதாக 151 முதல் 162 இடங்கள் வரை வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் பாஜகவின் மஹா யுதி கூட்டணி வெறும் 115- 128 வரையிலான இடங்களில் மட்டுமே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகளும் சுயேச்சைகளும் 5 முதல் 14 சீட்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணிக்கு அதிகபட்சமாக 43-46% வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜகவின் மஹா யுதி கூட்டணிக்கு 37- 40% வரையிலான வாக்குகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கு 16- 19% வரை வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்: கடந்த தேர்தலை பொறுத்தவரை பாஜக- ஒருங்கிணைந்த சிவசேனா என்டிஏ கூட்டணியிலும், காங்கிரஸ்- ஒருங்கிணைந்த என்சிபி யுபிஏ கூட்டணியிலும் களமிறங்கியன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போதிலும் பாஜக அதிகபட்சமாக 105 இடங்களில் வென்றது. தொடர்ந்து சிவசேனா 56 இடங்களிலும், என்சிபி 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வென்றன. அப்போது முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் பாஜக- சிவசேனா இடையே மோதல் வெடித்த நிலையில், கூட்டணி முறிந்தது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *