நியூயார்க், நவ.15 போயிங் கோ நிறுவனமானது, தனது நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது. மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆள்குறைப்பு நடவடிக்கையின் முதல் தொடக்க நிலைப் பணிகளை நிறுவனம் 13.11.2024 முதல் தொடங்கிவிட்டதாகவும், பணியிலிருந்து நீக்கப்படவிருக்கும் ஊழியர்களுக்கு பிங்க் சிலிப் எனப்படும் அறிவிக்கை வழங்குவது தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒருபக்கம், திறமையான ஊழியர்களுக்கு வாய்ப்பு அளிப்பது மற்றும் திறமையான பணியாளர்களை அதிகப்படுத்துவது ஆகிய நடவடிக்கையின் காரணமாக, ஆள்குறைப்பு நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதமே, போயிங் நிறுவனம் 10 சதவீத ஆள்குறைப்பில் ஈடுபடவிருப்பதாக அறிவித்திருந்தது. இது கிட்டத்தட்ட 17,000 ஊழியர்கள் என்கிறது தரவுகள். கடந்த ஜனவரியில் போயிங் விமானம் சந்தித்த விபத்துகள், பெரும்பாலான தொழிற்சாலைகளில் தொடர்ந்து 7 வாரங்கள் நடந்த வேலை நிறுத்தம், பொருளாதார சிக்கல் உள்ளிட்ட பல காரணிகளால் நிறுவனம், ஆள்குறைப்புக்கு தள்ளப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு
தேசியப் பேரிடர் இல்லையாம்!
திருவனந்தபுரம், நவ.15 வயநாட்டின் புஞ்சிரிமட்டம், சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலையில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவு பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிப்பதோடு, ரூ.2,000 கோடி சிறப்பு நிதி தொகுப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு மாநில அரசு கடந்த ஆகஸ்டில் கடிதம் எழுதியது.
இந்நிலையில், டில்லியில் உள்ள கேரள அரசின் சிறப்பு பிரதிநிதியான கே.வி.தாமஸுக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் கடந்த நவம்பா் 10-ஆம் தேதி எழுதிய பதில் கடிதத்தின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அக்கடிதத்தில், ‘நாட்டில் எந்தவொரு பேரிடரையும் தேசியப் பேரிடராக அறிவிக்க தற்போதுள்ள மாநில பேரிடா் மேலாண்மை நிதி (எஸ்டிஆா்எஃப்) மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை நிதியின் (என்டிஆா்எஃப்) விதிமுறைகளில் இடமில்லை.
மாநில பேரிடா் மேலாண்மை நிதியின்கீழ், 2024-2025ஆம் ஆண்டில் கேரள அரசுக்கு ரூ.388 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், ஒன்றிய அரசின் பங்களிப்பான ரூ.291 கோடி இரு தவணைகளாக விடுவிக்கப்பட்டது. இது தவிர மாநில பேரிடா் மேலாண்மை நிதியில் கேரளத்துக்கு ஏற்கெனவே ரூ.394 கோடி இருப்பு உள்ளது. எனவே, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேரளத்திடம் போதிய நிதி கையிருப்பு உள்ளது. அதேநேரம், மாநில அரசின் முயற்சிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு தொடா்ந்து வழங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.