சென்னை, நவ.15 உதயநிதி ஸ்டாலினின் டீ-சர்ட் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்களை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உதயசூரியன் சின்னம் பொறித்த டி ஷர்ட் அணிய எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு ஆடை விதிகள் வகுக்கக் கோரியும் மேலும் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இரு வழக்குகளும் தலைமை நீதிபதி சிறீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரே விவகாரத்துக்காக எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டு முதலில் தாக்கல் செய்த வழக்கில் இடையீட்டு மனுதாரரைச் சேர்க்க கோரலாம் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து இரு மனுக்களையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுக்களை திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்தனர். அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்கில் இடையிட்டு மனுதாரர்களாக சேர்க்க கோரி மனுத்தாக்கல் செய்ய மனுதாரர்கள் தரப்புக்கு நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு கைப் பட்டை அணிவிக்கும் திட்டம் அறிமுகம்
சென்னை, நவ.15 கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தி தாக்கப்பட்டதன் எதிரொலியாக மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நேற்றிலிருந்து (14.11.2024) நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு டேக் சிஸ்டம் (கைப்பட்டை) கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நோயாளியாக ஒருவர் சேர்க்கப்படும் போதே அவருடன் வரும் உதவியாளருக்கும் சிவப்பு மற்றும் நீல நிறத்திலான டேக் கொடுக்கப் படுகிறது. பெயர், வயது மற்றும் அவர்களுடைய வார்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை கையில் கட்டிக்கொண்டு சென்றால் மட்டுமே மருத்துவமனையில் இருந்து வெளியே அல்லது உள்ளே செல்ல மருத்துவமனை நிர்வாகம் அனுமதி கொடுக்கிறது. ஏற்கனவே சோதனை முறையில் தொடங்கப்பட்ட நிலையில் நேற்று அனைத்து நோயாளிகளுக்கும் அது கட்டாயமாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.