எடியூரப்பா மீது வழக்கு?
பெங்களுரு, நவ.15 நீதிபதி குன்ஹா விசாரணை அறிக்கையில், கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதில் முறைகேடு செய்துள்ளதாக கருநாடக மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது வழக்கு தொடர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று பரவியிருந்த காலத்தில் சீன நிறுவ னங்களிடமிருந்து பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியதில் கர்நாடகத்தின் அப்போதைய முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதன் காரணமாக அரசுக்கு ரூ. 150 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையம் அண்மையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் மேற் கண்ட குற்றச்சாட்டுகள் வெளி யிடப்பட்டுள்ளன. இதனையடுத்து எடியூரப்பா மற்றும் மேனாள் சுகாதாரத்துறை அமைச்சர் பி. சிறீராமலு ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும் அரசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்போர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அணியும் கவச ஆடை, மருந்துகள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை சீன நிறுவனங்களிடமிருந்து பெருமளவில் கொள்முதல் செய்திட, எடியூரப்பா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை சீன நிறுவனங்களிடமிருந்து வாங் கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, உள்ளூர் நிறுவனங்கள் குறைந்த கொள்முதல் விலைக்கு விற்க முன்வந்த போதும், அதைவிடுத்து சீன நிறுவனங்களிடமிருந்து இவையனைத்தும் பெருந்தொ கைக்கு கொள்முதல் செய்யப் பட்டுள்ளன. முற்றிலும் வெளிப் படைத்தன்மையில்லாமல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், குன்ஹா ஆணைய விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய அரசு தீர்மானித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை மட்டுமல்லாது, நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட பிற துறைகளிலும் முந்தைய பாஜக ஆட்சியில் இதுபோல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளனவா என்பதை கண்டறிய விசாரணை விரிவுபடுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.