மைசூரு, நவ.14- மைசூரு மாவட்டம் டி.நரசிப் புராவில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் சித்தராமையா பேசிய தாவது:-
கருநாடகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. அப்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஆபரேஷன் கமலா மூலம் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 17 பேரை பா.ஜனதாவினர் விலைக்கு வாங்கினர். இதன் மூலம் கருநாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்தனர்.
அதேபோல் தற்போதும் கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட் சியை கவிழ்க்க பா.ஜனதாவினர் முயற்சி செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் 50 பேரை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதா தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள். மேலும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 கோடி தருவதாக பேரம் பேசிவருவதாக தகவல்கள் வருகிறது. இதற்கெல்லாம் அவர்களுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. அதை அமலாக்க துறை மற்றும் வருமான வரித்துறையினர்தான் கண்டுபிடிக்கவேண்டும். எடியூரப்பா, விஜயேந்திரா, ஆர்.அசோக் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜனதாவுக்கு இழுக்க பேரம் பேசி வருகிறார் கள். அவர்களது திட்டம் நிறைவேறாது. இவ்வாறு அவர் கூறினார்.