ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உணர்வாரா?

Viduthalai
2 Min Read

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஸநாதன தர்மத்தைப் பாதுகாப்பதற்காக ஜனசேனா கட்சிக்குள் ‘நரசிம்ம வாராஹி படை’ என்ற புதிய அணியை தொடங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார். இதேபோல் யுவவாஹினி என்ற அமைப்பைத் தொடங்கி உத்தரப் பிரதேச சாமியார் முதலமைச்சர் தற்போது அவர்களை அடக்க முடியாமல் திணறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இது தொடர்பாக பேசிய பவன் கல்யாண், “ஹிந்து கோயில்களுக்குச் செல்லும்போதும், ஸநாதன தர்மத்தைப் பின்பற்றும்போதும் சில விடயங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நாட்டிற்கு மட்டுமின்றி உலகிற்கே வழிகாட்டும் விளக்காக விளங்கும் ஸநாதன தர்மம் இல்லாமல் நம் நாடு இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை மதிக்கும் அதே சமயம், ஹிந்துக்களின் உணர்வு களை புண்படுத்தும் எந்தவொரு செயலுக்கும் பின்விளைவுகள் ஏற்படும் என்பதையும் உறுதி செய்வோம்.
ஹிந்து மதத்தையோ, ஸநாதன தர்மத் தையோ கேலி செய்யும் வகையில் சமூக வலை தளங்களில் வெளியிடப்படும் பதிவு களை பொறுத்துக்கொள்ள முடியாது. சமூக வலை தளங்களில் ஸநாதனம் குறித்து விமர்சிப்பவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
நரசிம்ம வாராஹி படையில் ஜன சேனானி என்று அழைக்கப்படும் ஜனசேனா உறுப்பினர்கள் ஸநாதன தர்மத்திற்காக அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். இந்த புதிய பிரிவு, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இந்து மத விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான கலாச்சார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்” என்று தெரிவித்தார்.

இதே போல் தான் உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் யுவ வாஹினி என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்.
இந்த அமைப்பு சாமியார் ஆட்சிக்கு வந்தவுடன் உத்தரப்பிரதேச காவல்துறைக்கு உதவுவதாகக் கூறி, இஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை அடித்துத் துன்புறுத்தி வந்தனர். தேர்தல் நேரத்தில் கூட இவர்களை சாமியார் முதலமைச்சரால் அடக்க முடியவில்லை. தேர்தலில் இதனால் உத்தரப் பிரதேசத்தில் நாடாளுமன்றத்தில் தோல்வியைச் சந்தித்தது பாஜக.
பல சமூக விரோதிகளை யுவ வாஹினி அமைப்பில் இணைத்துக் கொண்டு சமூகவிரோத செயல்களில் வெளிப்படையாகவே இறங்கினர். அதே போல் தற்போது பவன் கல்யாணும் சமூகவிரோதிகளுக்கு கதவைத் திறந்து வைத்து அழைப்பு விடுக்கிறார் – காவல்துறையினரின் கைகளும் கட்டப்பட்டுவிடும்.
வட மாநிலங்களில் வேர்ப் பிடித்துக் கொழுத்த ஹிந்து மதவெறிப் போக்கு இப்போது தென் மாநிலங்களுள் ஒன்றான ஆந்திராவையும் தொற்ற ஆரம்பிப்பதாகவே கருத வேண்டும்.

தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திர பாபு நாயுடு கடந்த ஆட்சியில் சிறைப்பட்ட போது அதைக் கைதட்டி ரசித்ததுதான் பிஜேபி யின் மேலிடம் என்பதை மறந்து விடக் கூடாது!
ஆந்திராவில் துணை முதலமைச்சராக இருக்கக் கூடிய பவன் கல்யாண் ஜனசேனா கட்சியைச் சேர்ந்தவர்.
துணை முதலமைச்சராக இருக்கக் கூடியவர் பிஜேபி பாணியில் மதவாதத்தைக் கையில் எடுத்துக் கொள்வதும், ‘‘நரசிம்ம வாராஹிப் படை’’ என்ற வன்முறை அமைப்பை உருவாக்குவதும் ஆந்திர முதலமைச்சருக்குத் தலைவலியைக் கொடுக்கும் என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.
இதனைத் தொடக்கத்திலேயே கிள்ளி எறியாவிட்டால் ஆந்திராவின் அமைதி நிலைக்குக் கேடு விளைவிப்பதோடு தமது தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சிக்கும் ஆபத்தாக முடியும் என்பதை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உணர்வாரா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *