சுயமரியாதைக் குடும்பத்தின் கொள்கைச் சீலர்கள்!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கட்டுரைத் தொடர் (12)
நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது எப்படி காலத்தின் தேவையாகவும், கட்டாயமாகவும் உள்ளதோ, அதேபோன்றதுதான்; சுயமரியாதை இயக்கம் என்பதும். சமூக விஞ்ஞானியான தந்தை பெரியாரின் தத்துவமான, பிறவி இழிவு ஒழியவும், அறிவு விடுதலை பெறவும் சமத்துவ, சகோதரத்துவ மனித குல ஒற்றுமையும், ஒருமைப்பாடும் ஏற்படவும் உண்டாக்கப்பட்ட ஓர் அற்புதமான சமூகப் புரட்சி இயக்கமாகும்!
இது உலக அதிசயங்களில் ஒன்று! இதன் கர்த்தா இதைத் தொடங்கும்போது இவ்வியக்கத்திற்கென உரு வாக்கிய தனித்துவ நெறிமுறைகளே அதற்குச் சான்று.
சமூகத்தில் புழங்கும் ஆசைகள்!
முன்காலத்தில் ‘மூவாசை’தான் சமூகத்தில் புழங்கிய ஆசைகள். 1. மண்ணாசை 2. பெண்ணாசை 3. பொன்னாசை.
பிறகு அந்த மூவாசைகளையும் தாண்டிய ஒரு பேராசையாக 4. பதவியாசை வந்தது; வந்தால் போகாத புற்றுநோய் போன்றது.
சூதாட்டங்களை எல்லாம் தாண்டிய பெரும் சூதாட்டம்.
‘இழத்தொறூஉம் காதலிக்கும்’ இணையற்ற போதையே பதவி ஆசை என்ற சூதாட்டம்!
அதிலும் சிக்காது தன் தொண்டர்களை, தோழர்க ளைக் களப் பணியாளர்களாகக் காத்து, அவர்களை ஒப்புவமையற்ற உயர்நிலைக்குக் கொண்டு சென்றவர் நம் தலைவர்.
அந்த நான்கு ஆசைகளையும் தாண்டிய, கண்ணுக்குத் தெரியாத மற்றோர் ஆசை; உடலை அல்ல, உள்ளத்தை, மனதை அரித்துத் தின்னும் ஒரு படுமோசமான, ஆனால், சராசரி மனிதர்களாக வாழும் நம்மில் 99.9% பேரையும் விரும்பியோ, விரும்பாமலோ தொற்றிக்கொள்ளும் புகழாசை – A Craving for Reputation – பொறாமையின் அடிநாதமே அந்த ஊற்றின் பக்க விளைவுகளில் ஒன்றுதான்!
அது காற்றைவிட வேகமானது – பரவுவதில்; நெருப்பை விட ஆபத்தானது – சுட்டெரிப்பதில்!
எல்லைக்கோடு அறியாத, இலக்கு இல்லாப் பயணம் அது!
நாம் செல்லும் பாதை சரியான பாதை என்பதற்குச் சரியான அடையாளம்!
இதிலிருந்து, தான் தப்பியதோடு, தனது தொண்டர்களையும் பக்குவப்படுத்தி, ‘‘முட்டாள்தன எதிர்ப்பாளர்களிடம் கெட்ட பெயர் எடுப்பதை விரும்பி வரவேற்றால்தான், நாம் செல்லும் பாதை சரியான பாதை என்பதற்குச் சரியான அடையாளம் ஆகும்.
அதன் தொடக்க முகம்தான், செய்த உதவிகளுக்கு நன்றியை எதிர்பார்க்கும் மனோபாவத்தையே, அகற்றிய உயர்நிலை மனிதனாக வாழுதல்’’ என்று தம் தொண்டர்களுக்குப் பாடம் எடுத்துப் பக்குவப்படுத்தி, ‘‘துறவிக்கும் மேலானவர்கள் எனது தொண்டர்கள்’’ என்றார்!
அப்படிப் புடம் போட்டவர்கள் எண்ணிக்கை எப்பொழுதுமே குறைவாகத்தான் இருக்கும்; அப்படி இருப்பதும் தவிர்க்க முடியாத (எதார்த்தம்) உண்மையாகும்.
இதைப் புரிந்துகொண்டு, ‘‘முடியுமா? சாதிக்க இயலுமா?’’ என்பன போன்ற தன்னம்பிக்கையற்ற கேள்விகளை நம் தோழர்கள் கேட்கவே கூடாது.
கண்கள் கடலாகின்றன;
பெருமிதத்தால் நெஞ்சம் நிமிர்கிறது!
தன்னலம் தேடும் ஆயிரம் பேர்களால் முடியாத செயலை, தன்னலம் துறந்த ஒரு சிலரே செய்து முடித்து, சமூகக் கலங்கரை வெளிச்சங்களாக வரலாற்றில் முத்திரைப் பதிப்பார்கள், எதையும் எதிர்பாராத என்னருந்தோழர்கள்,
மாயவரம் சுவரெழுத்து சுப்பையா, மூலக்கரைப்பட்டி திராவிடன், சின்னாளப்பட்டி சுப்பிரமணி, சேலம் அப்பாயி, மதுரை மாவட்டம் பெரியகுளம் ச.வெ.அழகிரி, திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவனிதம் கருப்புச்சட்டை பிச்சையன் ஆகியோர் மிகமிக எளிமையானவர்கள் – பொருளாதார வசதியற்றவர்கள். ‘இயக்கத்திடமிருந்தும் ஏதும் கேட்டுப் பெற்று வாழக்கூடாது; நம்மால் முடிந்ததைச் செய்யவேண்டும்’ என்ற எளிமையின் இருப்பிடமான கொள்கை ரத்தினங்கள் பொறித்த கோட்டைகள் என்பதை நினைத்தால், கண்கள் கடலாகின்றன; பெருமிதத்தால் நெஞ்சம் நிமிர்கிறது.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைமை மட்டுமல்ல; தோழர்களும், தொண்டர்களும் அப்படியே!
தலைமை எவ்வழியோ! தொண்டர் அவ்வழி!
80 ஆண்டு பொதுவாழ்வில் கண்டதில்லை!
யாமறிந்த சுயமரியாதைத் தளபதிகளில் அஞ்சா நெஞ்சன் அழகிரியின், இறுதி மூச்சு அடங்கும்வரை, உறுதிமிக்க தன் தலைவன்மீது நீங்காப் பற்றும், வறுமையால் தாக்குண்டாலும், இயக்கத்திடம் கை நீட்டி ஏதும் வாங்காத வளையாத சுயமரியாதைக் குணம், துரோகத்தினைத் ‘தூ’ என்று உமிழ்ந்து விரட்டிய தூய தொண்டுள்ளம்போல் வேறு எவரிடமும் இதுவரை இந்த 80 ஆண்டு பொதுவாழ்வில் கண்டதில்லை.
இயக்கத்திற்கு அவர் கொடுத்தார்;
இயக்கத்திடமிருந்து ஏதும் கொண்டாரில்லை – கொள்கையைத் தவிர!
எனது பொதுவாழ்வில் யான் பெற்ற பெருவாய்ப்பு இச்சாதாரணமானவன் அப்படிப்பட்ட அரும்பெரும் தொண்டு மலைகளை நேரில் அருகில் சென்று அண்ணாந்து பார்க்கும் அரிய வாய்ப்பைப் பெற்றேன் என்பதே முழு மனநிறைவினை அசை போடும் மகிழ்ச்சி ஆகும்!
சுயமரியாதை வாழ்வெனும் சுகவாழ்வு!
மற்ற கட்சிகள், இயக்கங்களில் இல்லாத ஒரு தனிப்பெருமை – இந்தத் தொண்டர்களை, தோழர்கள் கொள்கைச் சிங்கங்களுடன் பல ஆண்டுகாலம் நாங்கள் (தலைமையும், பொறுப்பாளர்களும் அறிவார்கள்) ஒரு குடும்பமாகப் பழகிய பிறகும்கூட, யாரும் யாருடைய ஜாதிபற்றி அறியாத, அறிந்துகொள்ளும் ஆவலே எழாத வாழ்வே எமது சுயமரியாதை வாழ்வெனும் சுகவாழ்வு.
இத்தொண்டறத் தோழர்களின் மற்றொரு தனிச்சிறப்பு என்ன தெரியுமா?
அப்பழுக்கற்ற நாணயம் – நேர்மை!
கறைபடாத காணக்கிைடக்காத தூய தொண்டுள்ளம்.
இதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளம்! ஏராளம் உண்டு!!
திருவாரூர் திராவிடர் கழக
நகரத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சிவசங்கரன்!
1. திருவாரூர் நகராட்சி– உள்ளாட்சித் தேர்தல் கால கட்டத்தில், கலைஞர் அவர்கள் சில வார்டுகளுக்கான தேர்தல் பொறுப்பினை அன்றைய திராவிடர் கழக நகரத் தலைவர் சிவசங்கரன் என்ற முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரிடம் ஒப்படைத்தார். தமது நாணயத்தாலும், நேர்மையாலும் மற்ற கட்சியினர் அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்ட பெருமகன் அவர். அரசியல் சட்ட எரிப்பில் ஓராண்டு தண்டிக்கப்பட்டு, திருச்சி சிறையில் இருந்தபொழுது, தனது துணைவியார் மறைவிற்கும்கூட பரோலில் வெளியே வர மறுத்த கொள்கை உறுதியாளர்.
கலைஞரின் பாராட்டு!
அப்பேர்ப்பட்டவரிடம் தேர்தல் செலவிற்காக ஒரு தொகை அளிக்கப்பட்டது. தேர்தல் முடிந்த நிலையில், தேர்தலுக்காக செலவு செய்யப்பட்ட வவுச்சர், ரசீதுகளுடன் மிச்சத் தொகை சுமார் ரூ.300 அய் கலைஞர் அவர்களிடம் சென்று ஒப்படைத்துத் திரும்ப கிளம்பியபோது, கலைஞர் அவர்கள், அவரது கைகளைப் பற்றிக்கொண்டு, ‘‘சிவசங்கரன் அண்ணன் அவர்களே, தேர்தலில் பலரிடம் செலவுக்குப் பணம் இதற்குமுன் கொடுத்திருக்கிறேன். இப்படி துல்லியக் கணக்குகளுடனும், ரசீதுகளுடனும் மிச்சத் தொகையைத் திருப்பிக் கொடுத்த ஒரே நபர் நானறிந்த வரை நீங்கள்தான். அதுதான் அய்யா தொண்டர் என்பதற்குரிய சரியான அடையாளம்’’ என்று பாராட்டினார்.
இதுமாதிரி பற்பல ஊர்களிலும் பலப்பலர் உண்டு!
கூட்டங்கள் நடத்த பொதுமக்களிடமும், கடைவீதி யில் கடைகளில் வசூலித்தால்கூட ஒழுங்கான கணக்கு வரவு – செலவுகளைக் கூட்டத்தின் இறுதியில் படித்து, கூடிய மக்களுக்கும், நன்கொடை கொடுத்த மக்களுக்கும் அதிசயத்தை உண்டாக்கும் பல ஊர்களைச் சேர்ந்த தோழர்கள் பலர் உண்டு.
போடி திராவிடர் கழகக் கூட்டங்களில் தோழர் ரகுநாகநாதன் மற்றும் பொறுப்பாளர்கள் தொடங்கி பலரும் உண்டு.
கடலூர் முதுநகர் நகர தலைவர் குப்புசாமி!
கடலூரில் முதுநகரில் அதன் நகரத் தலைவராக இருந்தவர் எளிமைமிக்க தோழர் குப்புசாமி அவர்கள். தோணிகளை வைத்துத் தொழில் செய்தவர். அதிகம் ‘‘படிக்காதவர்’’ – ஆனால், ‘விடுதலை’யை பெரியார் பேச்சை, எனது உரையை மனப்பாடமாக – அப்படியே திருப்பிக் கூறும் பட்டறிவுப் பகுத்தறிவாளர், கருப்புச் சட்டையாளர், கட்டுப்பாடு மீறாத கடமை வீரர். கடைவீதி வசூல் செய்வார் – ஒரு நோட் புக்கில்!
தி.க. பேச்சாளர் வர இயலாத சூழ்நிலையில், கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டது. பிறகு, இவரும், செயலாளரும் மற்ற தோழர்களுடன் கடைவீதியில் நோட் புக்கில் உள்ள நன்கொடையாளர்கள் (பெரிய தொகை ஒன்றுமில்லை, ரூ.20, ரூ.10, ரூ.5 இருக்கலாம்) பட்டியலில் கொடுத்ததை, அப்படியே திருப்பிக் கொடுத்து, ‘‘கூட்டம் நடத்தாமல் நாங்கள் வாங்கிக் கொண்டதாக நீங்கள் (நன்கொடையாளர்கள்) யாரும் கருதிவிடக் கூடாது; எனவே, திருப்பிக் கொடுக்கிறோம். மறுமுறை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்பொழுது, உங்களிடமே அந்த நன்கொடையைப் பெற்றுக் கொள்கிறோம்’’ என்பார்.
இதனைக் கண்டு, அத்துணை வியாபாரப் பெருமக்க ளும், நன்கொடையாளர்களும் வியந்து, ‘‘தி.க.காரர்கள் என்றால், இப்படித்தான் இருப்பார்கள்’’ என்று பாராட்டி, மெச்சினார்கள்.
மேலும் எந்த வசூலும் வலுக்கட்டாயப்படுத்தியோ, மிரட்டியோ நன்கொடையாக கேட்கும் பழக்கம் அறியாத ஓர் இயக்கத் தொண்டர்கள், நம் தொண்டர்கள்.
காரணம், நமது தலைவரே ஒரு நாணயத் தொழிற்சாலை (Mint). அதில் வார்க்கப்பட்ட சிறு சிறு நாணயங்கள்தானே நம் தோழர்கள்; வேறு எப்படி இருப்பார்கள்?
நமது சுயமரியாதை வீரர்கள் ஒரு தனி ரகம்!
விதை ஒன்று போட்டால்
சுரை ஒன்றா மாறி முளைக்கும்?
எனவே, நாணயத்திலும், கொள்கைச் சீரியத்திலும், கட்டுப்பாட்டிலும் நமது சுயமரியாதை வீரர்கள் ஒரு தனி ரகம்.
Class by themselves என்ற பாராட்டிற்குரிய வரலாற்றுக்குரியவர்கள்.
எனவேதான், ‘‘துறவிக்கும் மேலானவர்கள்’’ எனது தொண்டர்கள், தோழர்கள் என்றார் பெரியார். துறவு என்றால் பொருள் மட்டுமல்ல, பதவியாசை, புகழாசை துறந்த – விசித்திர வினோத விந்தை மனிதர்கள் அவர்கள்!