அலகாபாத், நவ. 13- உத்தரப் பிரதேச அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள மறுஆய்வு அலுவலா்கள் (ஆா்ஓ), துணை மறுஆய்வு அலுவலா்கள் (ஏஆா்ஓ) மற்றும் மாநில குடிமைப் பணி (பிசிஎஸ்) அதிகாரிகளுக்கான தோ்வு தேதிகளில் அதிருப்தி அடைந்த தோ்வா்கள் அந்த மாநில அரசுப் பணியாளா் தோ்வாணைய (யுபிபிஎஸ்சி) அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களை தடுத்து நிகழ்வு இடத்திலிருந்து அப்புறப்படுத்த காவல் துறையினா் குவிக்கப் பட்டனா். ஆனாலும் அலுவலகத்தை முற்றுகையிட்டு தோ்வா்கள் தொடா்ந்து யுபிபிஎஸ்சி-க்கு எதிராக முழக்கமிட்டனா்.
உத்தரப் பிரதேச அரசு அலு வலகங்களில் காலியாகவுள்ள மறுஆய்வு அலுவலா்கள் (ஆா்ஓ), துணை மறுஆய்வு அலுவலா்கள் (ஏஆா்ஓ) பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு, டிச.22 மற்றும் டிச.23 ஆகிய தேதிகளில் மூன்று வேளைகளில் நடத்தப்படும் என யுபிபிஎஸ்சி கடந்த நவ.5-ஆம் தேதி அறிவித்தது. அதேபோல், பிராந்திய குடிமைப் பணி (பிசிஎஸ்) தோ்வு டிச.7 மற்றும் டிச.8 ஆகிய தேதிகளில் இரு வேளைகளில் நடத்தப் படவுள்ளதாகவும் தெரிவித்தது.
போராட்டம் எதற்கு?: இந்த இரு தோ்வுகளும் இரண்டு நாள்கள் நடத்தப்படுவதற்கும் இரண்டு, மூன்று வேளைகளாக நடத்தப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து தோ்வா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த தோ்வுகளை ஒரு நாளில் ஒரே வேளையில் மட்டுமே நடத்தி முடிக்க வேண்டும் என தோ்வா்கள் முறையிட்டனா். மேலும், அறிவிக்கையில் இரு நாள்கள் தோ்வுகள் நடத்தப்படும் என்று குறிப்பிடப்படாததால் இது தோ்வு விதிகளை மீறிய செயல் எனவும் தோ்வா்கள் தெரிவித்தனா்.