மதுரை. நவ.13- தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு பேச்சு வழக்கில் தவறை உணர்ந்து நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டதாக தெரியவில்லையே என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கடந்த 3ஆம் தேதி சென்னை யில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய தாக பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு வருத்தம் தெரிவிப்பதாக அவர் அறிவித்தார். ஆனால், நடிகை கஸ்தூரி மீது அவதூறு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் காவல் நிலையத்தில், நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்பிணை கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பிராமணர் சமுதாயத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று தெலுங்கு மக்கள் குறித்து பேசியதாக என்னை முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர், செல்பேசி மூலம் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து வருத்தம் தெரிவித்தேன். ஆனாலும் அரசியல் உள்நோக்கத்துடன் அளித்த புகாரின்பேரில் என் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்தவழக்கில் எனக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது நடிகை கஸ்தூரி வீடியோ கான் பரன்சிங் மூலம் வழக்கு விசாரணையை பார்த்தார். நீதிபதியிடம், கஸ்தூரி பேசிய ஒலிப்பதிவு அடங்கிய பென் டிரைவ் சமர்ப்பிக்கப்பட்டது. ஒலிப்பதிவை நீதிபதி கேட்டார். தொடர்ந்து நீதிபதி, “தெலுங்கு மக்களும் தமிழ்நாட்டின் ஒரு பகுதியினர்தான். வட சென்னை பகுதியில் அதிக அளவில் தெலுங்கு மக்கள் வசிக்கின்றனர். அவர்களை எப்படி பிரித்துப் பேச முடியும்?” என கேள்வி எழுப்பினார்.
அப்போது கூடுதல் அட்வ கேட் ஜெனரல் பாஸ்கரன், குறிப்பிட்ட சமூக பெண்களின் மாண்பை குலைக்கும் வகையில் மனுதாரர் அவதூறு கருத்து தெரிவித்துள்ளார். இது ஜாதிய மோதல்களுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது என வாதாடினார். பின்னர் நீதிபதி, இதுதொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளன? என கேட்டார். அதற்கு அரசுத் தரப்பில், 6 வழக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே மனுதாரர் வழக்குரைஞர், குறிப்பிட்ட சமூகத்தினரை கொண்டு மட்டும் கடந்த 3ஆம் தேதி கூட்டம் நடைபெறவில்லை என தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி தெலுங்கு சமூக பெண்கள் பற்றி அவதூறாக கஸ்தூரி பேசியது பற்றி கூறுகையில், “என் மனுதாரர் தன்னை கல்வியறிவு பெற்றவர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என தெரிவிக்கிறார். ஆனால் அவர் இப்படியொரு கருத்தை தெரிவித்தது ஏன்? இந்த காட்சிப்பதிவை சமூக வலைத் தளங்களில் இருந்து நீக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என சரமாரி கேள்வி எழுப்பினார். இதற்கு மனுதாரர் வழக்குரைஞர், தெலுங்கு மக்கள் அனைவரையும் குறிப்பிட்டு அத்தகைய கருத்து தெரிவிக்கப்படவில்லை. இதற்கு மன்னிப்பு கோரியும் மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தவழக்கில் அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? என வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘மனுதாரர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கோரியதாக தெரியவில்லை’ என்றார். பின்னர் ஆஜரான அரசு வழக்குரைஞர், “பக்கத்து மாநிலங்களுக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் மனுதாரர் பேசியுள்ளார். திருப்பதி கோவிலுக்கு பெரும் பாலான தமிழர்கள் சென்று தரிசனம் செய்கின்றனர். இந்த சூழ்நிலையில் மனுதாரரின் பேச்சு, அவ்வகையான பக்தர்க ளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது” என்றார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை நாளைக்கு (14ஆம் தேதி) ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.