வாஷிங்டன், நவ. 12- அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பன்னாட்டு தலைவர்களுடன் பேச்சு
அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்தவரும், மேனாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நாட்டின் 47ஆவது அதிபராக வருகிற ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார். பதவியேற்பதற்கு முன், பல் வேறு உலக நாடுகளின் தலைவர்களை தொடர்புகொண்டு டிரம்ப் பேசி வருகிறார். அதன்படி இந்திய பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் நேட்டன்யாகு உள்பட 70-க்கும் மேற்பட்ட உலக தலைவர்களிடம் அவர் தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.
இந்த வரிசையில் ரஷ்ய அதிபர் புதினையும் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்போது பல்வேறு பன்னாட்டு பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்துள்ளனர்.
உக்ரைன் போர்
குறிப்பாக, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக ‘வாசிங்டன் போஸ்ட்’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது, ‘அய்ரோப்பிய கண்டத்தில் அமைதிக்கான இலக்கு குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர். மேலும் உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து விவாதிப்பதற்காக தொடர் உரையாடல்களுக்கும் டிரம்ப் விருப்பம் தெரிவித்தார் என டிரம்ப் வட்டாரங்கள் தெரிவித்ததாக அதில் கூறப்பட்டு உள்ளது.
மோசமடைவதை விரும்பவில்லை
புளோரிடாவில் உள்ள தனது விடுதியில் இருந்தவாறே இந்த தொலைபேசி அழைப்பை செய்துள்ள டிரம்ப் ‘உக்ரைனில் போரை தீவிரப்படுத்த வேண்டாம்’ என புதினுக்கு அறிவுறுத்தி உள்ளார். மேலும் அய்ரோப்பாவில் அமெரிக்காவின் ராணுவம் கணிசமாக இருப்பதை அவருக்கு நினைவூட்டியதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்க அதிபராக தான் பதவியேற்கும்போது, ரஷ்யாவின் அத்துமீறலால் உக்ரைனில் மேலும் நிலைமை மோசமடைவதை டிரம்ப் விரும்பவில்லை எனவும், அதனால் போரை முடிவுக்கு கொண்டு வருவதையே அவர் விரும்புவதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
உரையாடல் நடக்கவில்லை
அதேநேரம் டிரம்ப்பின் தொலைபேசி அழைப்பு குறித்த செய்தியை ரஷ்ய அதிபர் மாளிகை கிரெம்ளின் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் கூறுகையில், ‘புதினுக்கும், டிரம்புக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடந்ததாக மேற்கத்திய செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவல்களில் உண்மை இல்லை. அப்படி ஒரு உரையாடல் நடக்கவில்லை. இது முற்றிலும் தவறானவையும், கற்பனையானவையும் ஆகும்’ என தெரிவித்தார்.
இதற்கிடையே பன்னாட்டு தலைவர்களுடனான டிரம்பின் உரையாடல்கள் குறித்து கருத்து தெரிவிக்க டிரம்பின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் மறுத்து விட்டார்.