கேரளா: ஹிந்து அய்.ஏ.எஸ். வாட்ஸ் அப் குழு உண்மை அம்பலமானது!
சம்பந்தப்பட்டவர்கள் பணியிடை நீக்கம்!
திருவனந்தபுரம், நவ.12 அக்டோபர் மாதம் இறுதி நாளில் கேரளாவில் அனைத்து ஹிந்து அதிகாரிகளின் பெயர்கள் இணைக்கப்பட்டு ‘‘ஹிந்து அய்.ஏ.எஸ் அதிகாரிகள் குழு‘‘ ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் குழு குறித்து ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று முழு விவரத்தோடு வெளியிட்டது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி என்னுடைய கைப்பேசியை தீவிரவாதக் குழுவினர் யாரோ ‘ஹேக்’ செய்து இவ்வாறு மோசடியில் ஈடுபட்டனர் என்று கூறி யிருந்தார்.
இந்த நிலையில் அவரது கைப்பேசியை ஆய்வு செய்த போது, அவர்தான் இந்தச் செயலை செய்தார் என்ற உண்மை ஆய்வில் வெளிவரவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கேரளாவில் ‘‘ஹிந்து அய்.ஏ.எஸ். அதிகாரிகள் குழு’’ என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் தனியாக குழு ஒன்று உருவாக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கேரளாவில் தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குநரான கோபால கிருஷ்ணன் என்ற அதி காரியின் கைப்பேசி எண் வாட்ஸ் அப் அட்மினாக இருந்தது.
அரசு நிர்வாகப் பணிகளில் ஈடு படும் உயரதிகாரிகளில் மத ரீதியாக தனிக் குழு அமைத்து இருப்பதாக வெளியான தகவல் கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கி டையே, குறிபிட்ட எந்த ஒரு வாட்ஸ் அப் குழுவையும் தான் துவங்கவில்லை என்று மறுத்துள்ள வணிகத்துறை இயக்குநரான கோபால கிருஷ்ணன் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
உண்மை மறைப்பு!
கோபால கிருஷ்ணன் இது தொடர்பாக அளித்த புகாரில், ‘‘எனது கைப்பேசி எண்ணை அட்மி னாக வைத்து மலையாளி ஹிந்து அதிகாரிகள் மற்றும் மலையாளி முஸ்லீம் அதிகாரிகள் என்ற வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டு இருப்பதாக என்னுடைய நண்பர் என்னிடம் கூறினார். எனக்குத் தெரியாமலேயே எனது எண்ணைப் பயன்படுத்தி இப்படி பல வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
எனக்குத் தெரியாமலே எனது கைப்பேசி எண் ‘ஹேக்’ செய்யப்பட்டு, என்னை அட்மினாக வைத்து வாட்ஸ் அப் குழு உருவாக்கியதோடு, எனது காண்டாக்ட் லிஸ்டில் உள்ள உறுப்பினர்கள் குழுவில் இணைக்கப்பட்டு உள்ளனர்’’ என்று புகாரில் கோபாலகிருஷ்ணன் கூறி யுள்ளார். அய்.ஏ.எஸ். அதிகாரி அளித்த இந்தப் புகாரின் பேரில், காவல்துறை விசாரணை நடத்தியது.
விசாரணையில் உண்மை வெளிவந்தது!
இந்த விவகாரம் தொடர்பான கேரள அரசும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. கேரளாவில் பர பரப்பை ஏற்படுத்திய இந்நிகழ்வு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராஜீவ், ‘‘மத அடிப்படையில் பிளவுகள் மிகவும் கவலைக்குரிய விஷயம். இது தொடர்பாக கேரள அரசு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும். அய்.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு என சில நடத்தை விதிகள் உள்ளன. பொது நிர்வாகத் துறையின் கீழ் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் வருகிறார்கள். விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
இந்நிலையில், திருவனந்தபுரம் காவல்துறை ஆணையர் ஸ்பர்ஜன் குமார் கூறியதாவது: மத குழுவை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட, வாட்ஸ் அப் எண் உடைய அய்.ஏ.எஸ்., அதிகாரியின் கைப்பேசி முற்றிலும், ‘ரீசெட்’ செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில் கைப்பேசி ‘ஹேக்’ செய்யப்பட்டவில்லை என்றும், அவரே குழுவை உருவாக்கி அதில் ஹிந்து அதிகாரிகளின் பெயர்களை வரிசையாக தேர்ந்தெடுத்து இணைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர் சில அரசு ஊழியர்களிடம் ஹிந்து அதிகாரி களின் கைப்பேசி எண்களை வாங்கி அதனை இணைத்ததும் தெரியவந்துள்ளது. தடயவியல் நிபுணர்களால் கண்டறியப்பட்டு, காவல்துறை இயக்குநருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அவர் முழு விவ ரங்களை அறிந்துகொண்டு அரசுக்கு அனுப்பி வைத்தார்.
பணி இடைநீக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக கேரள அரசு உயர்மட்ட விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்குப் பிறகு அய்.ஏ.எஸ். அதிகாரிகள் கோபா லகிருஷ்ணன் மற்றும் என்.பிரசாந்த் ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அய்.ஏ.எஸ். அதிகாரியான கோபாலகிருஷ்ணன் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். 2013 அய்.ஏ.எஸ். பிரிவு அதிகாரியான கோபாலகிருஷ்ணன், திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியராகவும், தேசிய சுகாதரத் திட்டத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.