புதுடில்லி, நவ.11 பூமியைப் போலவே மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையிலான புதிய கோளை வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 4 ஆயிரம் ஒளி ஆண்டு தூரத்தில் அந்த கோள் அமைந்துள்ளது.சூரியனைச் சுற்றி வரும் பூமி உள்ளிட்ட கோள்கள் சூரியக் குடும்பத்தில் அடங்கும். அதேபோல், சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ளநட்சத்திரங்களை சுற்றி வரும் கோள்கள் அல்லது வெளிப்புற கோள்கள் (எக்ஸோபிளானட்ஸ்) என்றழைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பூமியைப் போலவே, மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தன்மையுள்ள புதியகோளை வானியல் விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். சுமார் 4 ஆயிரம் ஒளிஆண்டு தூரத்தில் இந்த கோள் அமைந்துள்ளது.
பூமியின் எடையை இது ஒத்திருப்பதாகத் தெரிகிறது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த கோளை கண்டறிந்துள்ளனர். அதுதொடர்பான தகவல்கள், நேச்சர் அஸ்ட்ரானமி என்ற இதழில் வெளியாகி உள்ளது. ஹவாயிலுள்ள கெக் தொலைநோக்கி மூலம் இந்த கோள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோளுக்கு கேஎம்டி-2020-பிஎல்ஜி-0414 என்று பெயர் வைத்துள்ளனர்.
சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தை போல 2 மடங்கு தூரத்தில் இந்த கோள் அமைந்துள்ளது. வானியல் எழுத்தாளரும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் பட்டம் பெற்ற மாணவருமான கெமிங் ஜாங் கூறும்போது, “இன்னுமொரு பில்லியன் ஆண்டுகளுக்கு பூமிக் கோளில் மனித குலம் வாழ முடியும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பூமியைப் போன்ற கோள் மனிதகுலத்தின் உயிர்வாழ்வுக்கான புதிய வாசலாக இருக்கலாம். இந்த புதிய கோளில் மனிதகுலம் எதிர்காலத்தில் குடியேறும் நிலை வரலாம்” என்றார்.