புதுடில்லி, நவ. 11- நாடாளு மன்றத்தில் ஒன்றிய அமைச்சர்கள் உள்பட ஆளுங்கட்சி உறுப்பினர்கள், ஹிந்தியில் மட்டுமே பேசுகின்றனர். இதனால், தென்மாநிலங்கள் மற்றும் ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது என்று கேரளத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளருக்கு டில்லியில் நேற்று (10.11.2024) அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் ஹிந்தி மட்டுமே பேசும் ஆளுங்கட்சி தரப்பால் தென்மாநிலங்கள் மற்றும் ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. ஆங்கிலத்தை நன்கு அறிந்த ஒன்றிய அமைச்சர்கள்கூட நாடாளுமன்றத்தில் ஹிந்தி மொழியில் பேசுகின்றனர்.
இது ஏதோ தற்செயலாக நிகழ்வதைப் போல் தோன்றவில்லை. இதை திட்டமிட்ட செயலாகவே கருதுகிறேன். நாடாளுமன்றத்தின் நடைமுறை மொழியாக ஹிந்தியை மாற்ற முயற்சி நடைபெறுகிறது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஹிந்தியைத் திணிக்க திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஹிந்தியில் மட்டுமே பேசுகின்றனர். இதில் ஓரிரு அமைச்சர்கள் மட்டும் விதிவிலக்காக உள்ளனர்.
கடந்த காலங்களில் நாடாளு மன்றத்தில் எந்த உறுப்பினராவது ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் அதற்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கும் வழக்கம் இருந்தது. தற்போது அந்த ஆரோக்கியமான நடைமுறை இல்லை. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றத்தில் ஆங் கிலத்தில் பேச முற்பட்டால், ஹிந்தியில் பேச்சைத் தொடருமாறு அவர்களுக்கு சமிக்ஞை அனுப் பப்படுகிறது. அவர்கள் ஹிந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தென் மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஒன்றிய அரசிடம் இருந்து வரும் கடிதங்கள் ஆங்கிலத்தில் இருந்தன. தற்போது அந்த நடைமுறையும் மாற்றப்பட்டுள்ளது. நான் எழுதிய ஒரு கடிதத்துக்கு ஒன்றிய அரசு எனக்கு அனுப்பிய கடிதம் ஹிந்தியில் இருந்தது. அந்தக் கடிதத்துக்கு நான் மலையாளத்தில் பதில் கடிதம் அனுப்பினேன்.
ஹிந்தி மொழிக்கு ஒன்றிய அரசு அதிக முக்கியத்துவம் அளிப்பது ஏன்? நான் கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றச் செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளராக இருந்தேன். அப்போது நாடாளுமன்றத்தில் 80 முதல் 90 சதவீத உரையாடல் ஆங்கிலத்திலேயே இருக்கும். தற்போது அப்படி இல்லை. ஹிந்தியைத் திணிக்கும் கட்சியாகவே பாஜகவை மக்கள் கருதுகின்றனர்.
இந்த விவகாரத்தில் தங்களது முன்னோடிகளின் வழக்கம் என்ன என்று பார்க்குமாறு பாஜக தலைவர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். பாஜகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி நாடாளுமன்றத்தில் எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசி வந்தார். கட்சியில் அவருக்கு மூத்தவரான வாஜ்பாய் ஹிந்தியில் பேசுவதை சமன்செய்யும் வகையில் இது அமைந்திருக்கும். எங்கள் மாநிலம் (கேரளம்), ஹிந்தியை அலுவல் மொழியாகத் தேர்வு செய்யவில்லை. ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான தகவல் தொடர்புக்கு ஆங்கிலம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று 1963-இல் இயற்றப்பட்ட அதிகாரபூர்வ மொழிகள் சட்டம் கூறுகிறது. அச்சட்டம் ஹிந்தியை அலுவல் மொழியாக ஏற்கவில்லை என்றார்.