சென்னை, நவ.11- தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.
பிராமணா்களை பாதுகாக்க புதிதாக சட்டம் இயற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கு அருகே கடந்த 3.11.2024 அன்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக தெலுங்கு அமைப்பினா் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அவா்கள் காவல் நிலையங்களிலும் தொடா்ச்சியாக புகார் செய்து வருகின்றனா். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, மன்னர்களுக்கு அந்தப்புர சேவைகள் செய்ய வந்தவர்கள் தெலுங்கர்கள் என்றும், தமிழர்களான பிராமணர்களை, தமிழர்கள் இல்லை என அவர்களால் எப்படிச் சொல்ல முடியும் என கேள்வி எழுப்பியதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை ஏற்பட்டது.
தெலுங்கா்களை அவமரியாதையாக பேசிய நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன்மேம்பாட்டுப் பிரிவுத் தலைவா் அமா்பிரசாத் ரெட்டி வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து, நடிகை கஸ்தூரி தனது கருத்துகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார். இதனிடையே அகில இந்திய தெலுங்கு சம்மேளன பொதுச் செயலா் நந்தகோபால், எழும்பூா் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளித்தார். அதன் பேரில் 4 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக தாக்கீது வழங்க சென்னை போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரி வீட்டுக்கு காவல் துறையினர் நேற்று (10.11.2024) சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.
இதனால் தாக்கீதை அவரது வீட்டு சுவரில் ஒட்டிவிட்டுச் சென்றனர். கைது நடவடிக்கையை தவிர்க்க நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.
மேலும், கஸ்தூரி முன்பிணைக்கு முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அது ஒருபுறம் இருக்க தலைமறைவான நடிகை கஸ்தூரியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.