ஜனநாயகத்தில் புல்டோசருக்கு இடம் உண்டா?

Viduthalai
2 Min Read

2019-ஆம் ஆண்டு சட்டத்திற்கு புறம்பாக உ.பி. மாநில அரசு, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டை புல்டோசர் வைத்து இடித்ததற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது – தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் மனோஜ் திப்ரேவால் ஆகாஷ். இவர் ஒரு பத்திரிகையாளர் ஆவார். இவரது வீடு 3.70 சதுர மீட்டர் அளவு பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மொத்த வீடும் புல்டோசர் வைத்து இடிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து, மனோஜ் தரப்பில், “சாலை அமைப்பதில் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி மனோஜ் எழுதிய செய்தித்தாள் கட்டுரையே இந்த இடிப்பிற்கு காரணம்” என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் 6.11.2024 அன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

“சட்டப்படி, புல்டோசர் நீதி என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும். இதை அனுமதித்தால் அரசியல் சாசனம் 300A பிரிவு (சொத்துரிமை) இல்லாமல் போகும்.
எந்தவொரு நாகரிகமான சட்டத்திலும் புல்டோசர் நீதிக்கு இடமில்லை. குறிப்பிட்ட காரணங்களுக்காக மக்களின் சொத்தை ஒரு அரசு அல்லது அரசு சார்ந்த அமைப்புகள் அழிப்பது மிக மிக ஆபத்தானது. ஒரு மனிதனுக்கு இருக்கும் உச்சபட்ச பாதுகாப்பு, அவரது வீடு தான். அதனால், ‘அதை அழித்து விடுவோம்’ என்பது போன்ற பயங்களால் மக்களின் குரல்வளையை நெரிக்க முடியாது. மேலும் பொதுச் சொத்தை ஆக்கிரமிப்பதை சட்டம் அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சட்டத்திற்குப் புறம்பாக மனோஜின் வீட்டை இடித்ததற்காக, அவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக உ.பி. அரசு வழங்க வேண்டும்” என்று அந்த அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
புல்டோசர் நடவடிக்கை குறித்து ஏற்ெகனவே இரண்டு முறை உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களைத் தெரி வித்துள்ளது.
தற்போதும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் சாமியார் முதலமைச்சர் ஜார்க்கண்டில் தேர்தல் பரப்புரைசெய்யும் போது புல்டோசர் ஊர்வலம் போகலாம் என்று ஜார்க்கண்ட் மாநில பாஜக திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறது.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது ஒரு ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.
அரசே சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு சிலம்பம் ஆடக் கூடாது.
சட்டத்தைச் செயல்படுத்தும் முறையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற ஒழுங்கு முறை உண்டு.
முதலில் விளக்கம் (நோட்டீஸ்) கேட்க வேண்டும். அதற்கான போதிய கால அவகாசமும் கொடுக்க வேண்டும். அவற்றை எல்லாம் சற்றும் பொருட்படுத் தாமல் தானடித்த மூப்பாக, புல்டோசரைக் கொண்டு குடியிருக்கும் வீட்டை இடித்துத் தள்ளுவது என்பது – ஒரு சண்டியர்த்தனமாக இருக்கலாமே தவிர, மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட – அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதி மொழி எடுத்து ஆட்சி நடத்துவோரின் செயலாக இருக்க முடியாது – இருக்கவே முடியாது.
எல்லா ஜனநாயக மரபுகளையும் மரணக் குழியில் தள்ளுவதுதானே பாசிசம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *