புதுடில்லி, ஜூலை 28 இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நிலைமையை ஆய்வு செய்வதற்காக எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட் டணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளையும் நாளை மறுதினமும் (ஜூலை 29, 30)அங்கு பயணம் மேற் கொள்கின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ், மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் நேற்று கூறும்போது, “இருபதுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்த வார இறுதியில் மணிப்பூருக்குச் சென்று மாநிலத்தின் நிலைமையை மதிப்பிட உள்ளது” என்றார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர், கடந்த மே 3-ஆம் தேதி முதல் இனக் கலவரத்தால் பாதிக்கப் பட்டுள்ளது. இம்மாநிலத்தை பார்வையிட எதிர்க் கட்சித் தலைவர்கள் சிறிது காலமாக முயன்று வரு கின்றனர், ஆனால் அங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டது. என்றாலும் ராகுல் காந்தி கடந்த மாத இறுதியில் மணிப்பூரில் சில இடங்களுக்குச் சென்றிருந்தார். மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும், அம்மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் பதில்அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந் நிலையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூரில் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.