திருச்சி, நவ. 10- பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந் தியல் பட்டயப்படிப்பு (D.Pharm.) மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வினை பயிற்சி மற்றும் பணியமர்த்தும் துறையின் மூலம் MedPlus Pharmacy 24.10.2024 அன்றும் Apollo Pharmacy 26.10.2024 அன்றும் நடத்தின.
43 மாணவர்கள் கலந்து கொண்ட இந்நேர்முகத்தேர்வில் 43 நபர்களும் தெரிவு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்க ளுக்கான பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி 09.11.2024 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை யேற்ற பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை கல்வி ஒன்றால் மட்டும்தான் இச்சமுதாயத்தை மாற்றிக்காட்ட முடியும் என்ற தந்தை பெரியார் அவர்களின் பெயரால் இயங்கும் இக்கல்லூரியில் பயின்ற பட்டயப்படிப்பு மாணவர்கள் பயிற்சியினை நிறைவு செய்வற்கு முன்பே பணிநியமன ஆணை பெறுவது பெருமைக்குரியது என்றும் அதிலும் பெண்களுக்கு தொழில் கல்வி நிச்சயம் வேண்டும் என்ற தந்தை பெரியாரின் வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில் பெண்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பினை தெரிவு செய்திருப்பது மகிழ்ச்சிக்குரியது என்றும் உரையாற்றினார்.
மேலும் பெரியார் கல்வி நிறுவனங்களில் பயிலக்கூடிய மாணவர்களை “வேலை கேட்கமாட்டோம். வேலை கொடுப்போம்” என்ற வெற்றி சிந்தனையோடும் மனிதநேயத்தோடும் தொடர்ந்து உருவாக்கி வருவதால் பல மருந் தியல் நிறுவனங்கள் இக்கல்லூரி மாணவர்களை தெரிவு செய்கின்றனர் என்பதனை பெருமிதத்துடன் தெரிவித்தார்.
MedPlus Pharmacy நிறுவனத் தின் மக்கள் தொடர்பு செய லாக்க அலுவலர் இராஜேஷ் நிறுவனத்தின் செயல்பாடுகள், விதிமுறைகள், பணிவாய்ப்பை பெறுவதனால் ஏற்படும் நன் மைகள், சலுகைகள் மற்றும் பிற வாய்ப்புக்கள் குறித்து வழிகாட்டுதலுரை நிகழ்த்தி பெற்றோர்கள் மற்றும் மாணவர் களின் சந்தேகங்களுக்கு விளக்க மளித்தார். மேலும் இந்நிகழ்வில் மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் 43 பேருக்கு பணிநியமன ஆணையை முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் வழங்கி சிறப்பித்தார். மீதமுள்ள மாண வர்கள் உயர்கல்வியினை தொட ரவிருப்பதாக தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களும் மாணவர்களும் படித்து முடிப்பதற்குள் நல்ல ஊதியத்தில் பணிநியமனம் பெற்றுத் தந்த நிர்வாகத்திற்கும் கல்லூரிக்கும் தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் இயக்குநர் பேரா. எம்.கே.எம். அப்துல் லத்தீஃப் வரவேற்றார். மருந்தியல் பட்டயப்படிப்பின் முதன்மையர் பேரா. கே. சக்தி வேல் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.