கென்டக்கி, நவ. 10- அமெரிக்காவில் மூடநம்பிக் கைக்காக பெண்ணொருவர் பெற்ற தாயை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவிலுள்ள கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய டோரிலினா ஃபீல்ட்ஸ் என்னும் பெண்ணே இவ்வாறு தனது தாயைக் கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.
அந்த பெண் மாயமந்திரம், சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளில் ஆர்வம் காட்டி வந்த நிலையில் அவரது தாயாகிய ட்ரூடி ஃபீல்ட்ஸ் அவரைக் கண்டித்துள்ளார். இந்நிலையில், சந்தேக நபர் தனது தாயை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியிருக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, சமீபத்தில் ட்ரூடி ஃபீல்ட்ஸை சந்தித்த ஒருவரிடம் தனது மகள் செய்யும் விடயங்கள் குறித்து அவர் கூறியிருந்த நிலையில், ட்ரூடி ஃபீல்ட்ஸ் கண்டித்தமையினாலேயே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
சம்பவத்தினத்தன்று காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபரின் வீட்டுக்கு காவல்துறையினர் விரைந்த போது சந்தேகநபர் வீட்டுக்குள் பதுங்கியுள்ளார். இதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீட்டுக்குள் வீசி சந்தேகநபரை வெளியே வரவைத்த காவல்துறையினர், உடல் முழுவதும் இரத்தத்துடன் காணப்பட்ட டோரிலினா ஃபீல்ட்ஸை கைது செய்துள்ளனர். மேலும், நடந்த கொடூர நிகழ்வு தொடர்பில் அவரிடம் தீவிர விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகிறனர்.
1,731 சுய உதவி குழுக்களுக்கு
தமிழ்நாடு அரசு ரூபாய் 26 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை, நவ. 10- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.27.64 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மாநில மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நேற்று (9.11.2024) வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மகளிர் சுய உதவிக் குழுக்களின் நிதி ஆதாரத்தை மேம்படுத்தி, அவா்களது பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் தகுதியுள்ள குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்படுகிறது. சமுதாய முதலீட்டு நிதி என்பது ஆறு மாதங்கள் நிறைவடைந்த குழுக்களின் செயல்பாட்டுக்காக அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது.
அந்த வகையில், நிகழ் நிதியாண்டில் இதுவரை 1,209 குழுக்களுக்கு ரூ.1.81 சுழல் நிதியாகவும், 1,731 குழுக்களுக்கு ரூ.25.83 கோடி சமுதாய முதலீட்டு நிதியாகவும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் இயற்கைச் சந்தை:
வாரத்தின் இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தயாரிப்புகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமையும் சந்தைப்படுத்தப்படவுள்ளன.