1. ராணிப்பேட்டையை அடுத்து கரியாக்கு டல் கிராமத்தில் உள்ளது அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் கோவில்.
இந்தக் கோவிலில் கந்த சஷ்டி நிகழ்ச்சி நடந்தது. பூஜை நடந்து கொண்டிருந்தபோது சிவலிங்கம் திடீரென ஒற்றைக் கண்ணைத் திறந்ததாம். பக்தர்கள் பரவசம் அடைந்தார்க ளாம்.
இன்னொரு கோவிலில் சிலைக்கு வியர்த்ததாம்; இப்படியெல்லாம் கதைய ளந்துதான் கடவுளைக் காப்பாற்ற வேண்டிய கையறு நிலை!
கடவுள் என்று சொல்லிக் கொண்டிருந்தா லும் அது வெறும் கல்தான் அல்லது உலோகம்தான். அது திடீரென்று கண் திறந்தது என்றோ, வியர்த்தது என்றோ சொல்லுவதெல்லாம் இல்லாத ‘அற்பு தங்களைச்’ சொல்லி பக்தி வியாபாரத்தைப் பெருக்கும் மோசடிதான்!
‘‘நட்ட கல்லும் பேசுமோ’’ என்று சிவ வாக்கியர் பாடினார்.
அது என்ன ஒற்றைக்கண்? இன்னொரு கண் என்னாயிற்று? திறந்த கண் எப்பொழுது மூடியது?
மறுபடியும் எப்பொழுது திறக்கும்? கண்களைத் திறக்கத் தெரிந்த கடவுளுக்குப் பேசத் தெரியாதா? நாலு வார்த்தை நறுக்கென்று பேசி நாத்திகவாதிகளுக்குச் சவால் விட்டிருக்கலாமே!
நாலு அடி எடுத்து வைத்து நடந்து காட்டி, தன் சக்தியை நிரூபிக்கவேண்டியதுதானே! ஏன் சாமியைத் தூக்கிக் கொண்டுவருகிறார்கள்?
கப்சாவுக்கு இன்னொரு பெயர் கடவுளா?
2. இன்னொரு செய்தி, நேற்றைய (9.11.2024) நாளேடு ஒன்றில்… இது நடந்த செய்திதான்.
முருகன் கோவிலில் பூஜைக்கு வைத்த கோவில் தேங்காய், ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போயிற்றாம்!
பகல் கொள்ளை என்று கேள்விப்பட்டி ருக்கிறோம். பக்தியின் பெயரால் இப்படி ஒரு கொள்ளை!
இதைக் கணக்கில் காட்டி வருமான வரியி லிருந்து விலக்குப் பெற்றாலும் பெறுவார்கள்.
பால் இல்லாமல் பசியால் துடிக்கும் பச்சிளம் குழந்தைகள் உண்டு. அவர்கள் மீது இரக்கம் வருவதில்லை. பாழும் கல்லுக்கு இவ்வளவு மவுசு! ‘‘பக்தி வந்தால் புத்தி போகும்’’ என்று தந்தை பெரியார் கூறியதைக் கல்லில் செதுக்கி வையுங்கள்.
3. மற்றொரு செய்தியைப் படித்தால், அட அறிவுக் ‘கொழுந்து’களே, பகுத்தறிவு என்று ஒன்று இருக்கிறது என்பதை மறந்தே போய்விட்டீர்களா? என்று கேட்கத் தோன்றுகிறது.
குஜராத்தில் நடந்த ஒன்று. தொழில் அதிபர் ஒருவர் அதிர்ஷ்ட கார் (CAR) ஒன்றை அடக்கம் செய்ததோடு நிற்கவில்லை. இறுதி சடங்கும் நடத்தி இருக்கிறார். இதில் 1,500 பேர் பங்கேற்றார்களாம்.
சடங்கு என்றால் மந்திரம் சொல்ல ஆசாமி வேண்டாமா? அதுவும் நடந்திருக்கிறது. அவர்கள் வயிற்றில் அறுத்துக் கட்ட எத்தனை ஆயிரம் ரூபாய் அள்ளிக் கொடுத்தாரோ!
அடக்கம் செய்து கருமாதி மந்திரங்களைச் செய்திருப்பதால், அந்தப் பழுதடைந்த கார் சொர்க்கம் போகும் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.
1995 ஆம் ஆண்டில் பிள்ளையார் பால் குடித்தார் என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டனர். ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அண்ணாசாலையில் (25.9.1995) ‘தமுக்கு’ அடித்து, பிள்ளையார் பால் குடிப்பதை நிகழ்த்திக் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு, கொழுக்கட்டை சாப்பிட்டால் ரூ.2 லட்சம் பரிசு என்று சவால் விட்டாரே, யாரும் நிரூபிக்க முன்வரவில்லை என்பதை நினைவூட்டுகிறோம்.
2003 இல் மும்பையில் விநாயகர் சிரித்தார் என்று கரடி விட்டனர்.
மக்களை பக்தி மடமையில் வைத்துக் கொண்டே இருந்தால்தான் தங்களின் சுரண்டல் தொழில் ‘ஜாம் ஜாமென்று‘ நடக்கும் என்ற பார்ப்பனீயத்தின் சூழ்ச்சிதான் இதன் பின்னணியில் முகாமிட்டுள்ளது என்பதை உணர்வீர்!
செவ்வாய்க் கிரகத்தில் குடியேறுவ தற்கு ஒரு பக்கத்தில் பதிவுகள் நடந்து கொண்டுள்ளன. இன்னொரு பக்கத்தில் இந்த மூடக் கூத்துகள்! வாயால் சிரிக்க முடியவில்லையே!
– கருஞ்சட்டை