திருச்சி, நவ.9- திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மய்யம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் நூலகம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக கோவையில் பெரியார் நூலகம் அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அண்மையில் அடிக் கல் நாட்டி இருந்தார். இதனிடையே காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மய்யம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜுன் 27ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதையடுத்து, திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மய்யம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது.
நூலகம் மற்றும் அறிவுசார் மய்யம் அமைக்க திருச்சி டிவிஎஸ் டோல் கோட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 7 தளங்கள் கொண்டதாக இதனை அமைக்க பொதுப்பணித்துறை திட்டம் வகுத்துள்ளது. இந்த நிலையில், கட் டட வடிவமைப்பு தயார் செய்யவும், ஆலோசகர்களை தேர்வு செய்யவும் பொதுப் பணித்துறை ஒப்பந்தம் கோரியது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, வரைபடம் பொதுப் பணித்துறையால் தேர்வு செய்யப்பட்ட பிறகு கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.