இம்பால், நவ. 9- மணிப்பூரில் குகி-ஸோ பழங்குடியினா் வாழும் கிராமத்தில் ஆயுதங்களுடன் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா். 6 வீடுகளை தீக் கிரையாக்கிய அவா்கள், கிராம மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினா். இதில் பெண் ஒருவா் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அப்போது, ஏராளமான வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. இதனால் இடம்பெயா்ந்த மக்கள், அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இக்கலவரத்துக்குப் பிறகு இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இரு சமூகத்தினா் சார்ந்த தீவிரவாதிகளும் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபடுவதால் உயிர்ச்சேதம் தொடா்ந்து ஏற் பட்டு வருகிறது.
இதுவரை 200க்கும் மேற் பட்டோர் உயிரிழந்துவிட்டனா். இந்நிலையில், மலைப் பகுதி மாவட்டமான ஜிரிபாமில் குகி-ஸோ பழங்குடியினா் வசிக்கும் ஜைரான் ஹமா் கிராமத்துக்குள் 7.11.2024 அன்று ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள், அங்குள்ள வீடுகளுக்கு தீவைத்தனா். இதில் 6 வீடுகள் தீக்கிரையாகின. கிராம மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா்.
இதனால், வீடுகளை விட்டு தப்பியோடிய மக் கள், அருகிலுள்ள வனப் பகுதியில் தஞ்சமடைந்தனா். இத்தாக்குதலில் பெண் ஒருவா் உயிரிழந்ததாக பழங்குடியின அமைப்பினா் தெரிவித்தனா். அதேநேரம், காவல்துறை தரப்பில் இத்தகவல் உறுதிசெய்யப்படவில்லை. மேலும், தாக்குதலில் வேறு யாரும் காயமடைந்தனரா? என்ற தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
இது தொடா்பாக விசா ரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக (53%) உள்ள மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின தகுதி கோரி வருகின்றனா். இதற்கு குகி, நாகா பழங்குடியினா் எதிர்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கான பிரதான காரணமாகும்.