இந்திய ஜனநாயகத்தின் மிகச் சிறந்த வழிகாட்டிகளில் ஒன்றாக நிலைகொண்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) இன்று கடுமையான சவாலுக்கு உள்ளாகியிருக்கிறது. 2005-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இச்சட்டம் மக்களுக்கு அரசின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கும் அரிய வாய்ப்பை வழங்கியது.
மக்கள்.தங்கள் அடிப்படை உரிமைக்காகப் போராடி பெறப்பட்ட இந்தச் சட்டம் இன்று பல் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. தகவல் ஆணையங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டு, நியமனங்கள் நிறுத்தப்பட்டு, தகவல் பெறு வோருக்கு அச்சுறுத்தல்கள் வரும் வகையில் சட்டம் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்றிய பிஜேபி அரசாங்கம் தொடர்ந்து தகவல் ஆணையத்தின் சுயாட்சியைக் குலைக்கும் வகையில் சட்டமாற்றங்களைச் செய்து வருகிறது.
2019-இல் நிறைவேற்றிய சட்டத் திருத்தம் தகவல் ஆணையங்களின் சுயாட்சியைக் கேள்விக் குறியாக்கிய அதே நேரத்தில், 2023-இல் கொண்டு வரப்பட்ட டிஜிட்டல் தரவு பாதுகாப்புச் சட்டம் தனிப்பட்ட தகவல்கள் வெளியீட்டைக் கட்டுப் படுத்தும் வகையில் தகவல் உரிமைச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய பன்னாட்டு வெளிப்படைத் தன்மை (Transparency International India) அமைப்பின் தரவுகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமைப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மீது பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. மகாராட்டிரா தகவல் ஆணையத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் தேங்கிக் கிடக்கின்றன.
ஜார்க்கண்டில் ஆணையம் நான்கு ஆண்டு களாகவும், திரிபுரா மற்றும் தெலங்கானாவில் ஒன்றரை மற்றும் மூன்று ஆண்டுகளாகவும் செயல்படாமல் இருப்பது கவலைக்குரிய நிலைமை. ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் தகவல் உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது, மக்கள் தங்கள் அடிப்படை உரிமைக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
இது ஜனநாயகத்தின் சக்தியையும் எடுத்துக் காட்டுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஜனநாயகத்தின் ஒரு மகத்தான கருவி. இதன் மீதான தாக்குதல்கள் நாட்டின் ஜனநாயக மரபை அடிமட்டமாகச் சீரழிக்கும் அபாயம் கொண்டவை.
* ஆண்டுக்கு 60 லட்சம் தகவல் உரிமை மனுக்கள்.
* 20 தகவல் ஆணையங்களில் 7 முடக்கம்.
* 4 லட்சத்திற்கும் மேல் புகார்கள் தேங்கிக் கிடக்கும் அவலம்.
* 11 மத்திய தகவல் ஆணைய பணியிடங் களில் 8 காலி – இவைதான் இன்றைய நிலை!
காங்கிரஸ் ஆட்சியின் சாதனை மகுடத்தில் –தகவல் அறிவும் உரிமைச் சட்டம் என்பது – அதன் மகுடத்தில் பொறிக்கப்பட்ட வைரக்கல்! ஒரு ஜனநாயக நாடு என்பதற்கான திறந்த புத்தகம் அது!
ஆனால் பாசிச இறுமாப்புக் கொண்ட பிஜேபி ஆட்சியில் இது முடக்கப்பட்டது என்பது ஆச்சரியத்திற்குரியதல்ல!
அண்மைக் காலமாக வேலை வாய்ப்பு இன்மை போன்றவற்றிற்கான புள்ளி விவரங்கள் வெளியிடப் படுவதில்லை.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வில்லை. ஜாதி வாரி கணக்கெடுப்புபற்றி எதிர்க் கட்சிகள் விண்ணதிர குரல் கொடுத்தாலும் கேளாக் காதாகி விட்டது.
உண்மையான புள்ளி விவரங்கள் வெளியே வந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளித்து எழுவார்கள். போர்க் கொடியைத் தூக்குவார்கள். சமூகநீதிக் குரல் ஓங்கி ஒலிக்கும்.
இவை பார்ப்பன ஆதிக்கத்தின் ஆணி வேரை வெட்டி வீழ்த்தும் என்பதால் ஜனநாயகக் காற்று உள்ளே வராமல் பலகணிகளை இழுத்து மூடுகிறார்கள் – எவ்வளவுக் காலம்தான் மக்கள் மவுனம் காப்பார்கள்! ஒரு கட்டத்திலே வெடித்து எழுவார்கள் எச்சரிக்கை!
தகவல் அறியும் உரிமைச் சட்டம் சாகடிப்பு!
Leave a comment