கனடா கோவில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
ஒட்டாவா, நவ.9- கனடாவில் ஹிந்து கோவில் முன் நடந்த மோதலின் போது, வன்முறையைத் துாண்டும் விதமாக நடந்து கொண்ட கோவில் அர்ச்சகரை நீக்கியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவின் பிராம்டன் நகரத்தில் உள்ள ஹிந்து கோவில் முன், காலிஸ் தான் ஆதரவாளர்கள் கடந்த 3 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோவில் முன் கூடியிருந்த ஹிந்துக்களுக்கும், காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
அப்போது, இருதரப்பும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டதுடன், தடியடியிலும் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளி யாகின.
அப்போது, கோவில் அர்ச்சகர் வன்முறையை தூண்டும் விதமாக கூச்சலிட்டதாகக் கூறப்படு கிறது.
இவரது செயலைக் கண்டித்த கோவில் நிர்வாகம், அர்ச்சகரை நீக்கியுள்ளது.
இதுகுறித்து பிராம்டன் நகர மேயர் பேட்ரிக் பிரவுன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கனடாவில் வசிக்கும் சீக்கியர்களும், ஹிந்துக்க ளும் அமைதியை விரும்புகின்றனர். வன்முறையை அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவேதான், கோவில் அர்ச்சகரை நீக்கி ஹிந்து சபா கோவில் தலைவர் மதுசூதன் லாமா உத்தர விட்டுள்ளார்.
கோவிலில் நடந்த வன்முறையை ஆன்டாரியோ சீக்கியர்கள் மற்றும் குருத்வாரா கவுன்சில் கண்டித்துள்ளது. பதற்றமான நேரங்களில், போராட்டக்காரர்கள் பிரிவினைவாத தீயில் குளிர்காய அனுமதிக்கக் கூடாது. எனவே, வன்முறை மற்றும் வெறுப்புக்கு நாம் பலியாகி விடக்கூடாது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.