திருவாளர் சோ ராமசாமியின் ‘ஆத்மார்த்த’ சீடர் திருவாளர் குருமூர்த்தி அய்யர் எதை எடுத்தாலும் தமது இனப் பார்வைதான். எதிர்ப்பு எல்லாம் திராவிட இயக்கத்தை நோக்கித்தான்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி என்றால் நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சி மாதிரிதான்.
2018இல் ஈரோட்டில் தி.மு.க. மாநாடு நடைபெற்றது. திராவிட இயக்கச் சிந்தனையோடு தீர்மானங்கள் வடித்தெடுக்கப்பட்டன.
திருவாளர் குருமூர்த்தி எழுதுகிறார்.
“ஈரோடு திமுக மாநாடு தி.க.வின் நிலையைத் தழுவுவது போல் தோன்றிகிறது” (15.8.2018, ‘துக்ளக்’) என்று எழுதினார்.
தி.க.வும் திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று திமுகவைத் துவக்கிய அண்ணாவே அறுதியிட்டுக் கூறிய பிறகு – இந்த அய்யப்பாடு இந்த அய்யர்வாளுக்கு ஏன் வருகிறது?
6.11.2024 ‘துக்ளக்’கில் வெளிவந்துள்ள சில கேள்வி களுக்குப் பதிலடி இங்கே:
கேள்வி: இல்லற வாழ்க்கை செம்மையாக நடக்க உண்மையான அன்பே தேவை என்று ஆன்மிகம் கூறுகிறது. ஆனால், உலகில் பணம் மட்டுமே முக்கியமாகக் கருதப்படுகிறதே?
பதில்: நீங்கள் வாழ்வது திருவள்ளுவர் கால ஆன்மிகத் தமிழகம் அல்ல. திருவள்ளுவர் பெயரைத் திருடிய தி.மு.க.வின் திராவிட மாடல் காலம். இன்று பணம் மட்டுமே முக்கியம்.
நமது பதிலடி: திருவள்ளுவரை திமுக பயன்படுத்தினால் அதற்குப் பெயர் திருவள்ளுவர் பெயரை திமுக திருடுகிறதாம்.
திருக்குறளை மனுதர்மத்தின் சாரம் என்றவர்கள் ஆயிற்றே!
மகா பெரியவாள் என்று வார்த்தைக்கு வார்த்தை பயன்படுத்தும் குருமூர்த்தி அய்யர், அந்த மகா(?) பெரியவாள் கூறியவற்றைத் திருடினார் என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஆன்மிகம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதே ‘துக்ள’க் (6.10.2016 பக்கம் 23) ஆன்மிக வாதிகள் பற்றி என்ன எழுதிற்று?
“அரசியல்வாதி ஆவதற்குப் பொய் சொல்லத் தெரிய வேண்டும். ஆன்மிகவாதியாவதற்குப் பொய்யை அருள்வாக்காக மாற்றத் தெரிந்திருக்க வேண்டும்” என்று எழுதிற்றே!
‘துக்ளக்’ எழுதிய இன்னொரு பதிலும் உண்டு.
கேள்வி: தமிழக மக்கள் எந்த விதத்தில் தனித்துவம்?
பதில்: ஆன்மிகத்தில் முழுகிய தமிழ் மக்கள் தொடர்ந்து திராவிடர் கழகங்களுக்கு வாக்களிப்பது அவர்களின் தனித்தன்மை (‘துக்ளக்’ 9.2.2020, பக்கம் 29)
ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தனித்தன்மை என்ன என்பதை முழுமையாக ஒப்புக் கொண்ட பிறகு, ‘துக்ளக்’ வியாபாரக் கடையை இழுத்து மூட வேண்டியதுதானே!
இவர்களுடைய பக்தி வியாபாரம் எந்தக் கதியில் இருக்கிறது என்பதை ‘சோ’வை விட்டே பதில் சொல்ல வைப்போம்!
கேள்வி: சென்னை தீவுத் திடலில் திருப்பதி ஏழுமலையான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றுள்ளது பற்றியும், அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றது பற்றியும் தங்கள் கருத்து?
சோவின் பதில்: இவ்வளவு கட்டணம் கொடுத்தால் வெங்கடேஸ்வரப் பெருமாளை உங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து ஒரு நாள் தங்க வைக்கிறோம் என்று ஒரு புதிய திட்டம் வராதது ஒன்றுதான் குறை. (‘துக்ளக்’ 23.4.2006 பக்கம் 17)
இன்றைய ஆன்மிகம் பக்தி என்பது எல்லாம் எந்த அளவு கள்ளமார்க்கெட் ஆகிவிட்டது என்று அக்கிரகார ஏடான ‘துக்ளக்கே’ ஒப்புக் கொண்ட நிலையில் – இதில் தேவையில்லாமல் திமுகவைத் திணிப்பது ஏன்?
பக்தியும், ஆன்மிகமும் எந்த யோக்கியதையில் இருக்கிறது? இதோ மேலும் சில எடுத்துக்காட்டுகள்.
“எங்கள் கடவுள் கிருஷ்ணன் செய்ததை
நானும் செய்தேன்!” – ஆசாராம் சாமியார்
சாமியார் ஆசாராம் நீதிமன்றத்தில் வாதாடிய போது எடுத் துக்கூறிய விவாதம் குறித்த தகவல்களை சாட்சிகள் தரப்பு வழக்குரைஞர் வெளியிட்டு வருகிறார்.
அதில் ஒன்று: நீதிபதியிடம் ஆசாராம் கூறியதாவது எங்களது கடவுள் கிருஷ்ணன் பல பெண்களுடன் ஒரே நேரத்தில் கூடியிருந்தார், அதை இந்துக்கள் தெய்வச் செயலாக பார்க்கிறோம். அதே போல்தான் நாங்களும். பிரம்ம சொரூபமான சாதுக்களாகிய நாங்கள் பெண்களுடன் சேருவது தெய்வீகச் செயலுக்கு ஒப்பானதாகும். மக்கள் என்னை தெய்வமாக பார்க்கின்றனர். நான் மக்களுக்கான பல நல்லசெயல்களைச் செய்துள்ளேன், எனது இந்த செயலுக்கு என்னுடைய ஒவ்வொரு கூட்டத்திலும் கூடும் லட்சக்கணக்கான மக்களே சாட்சிகளாக இருக்கின்றனர்.
என்மீது பாலியல் கொடுமை குற்றச்சாட்டு என்பது உண்மையோ அல்லது புனையப்பட்டதோ என்பது குறித்து எனக்குக் கவலையில்லை, நாங்கள் தெய்வீக சக்திபெற்றவர்கள் எங்கள் மீது குற்றம் சுமத்துவதே அவசியமற்றது மதநூல்களின் படி என்னைப்போன்ற சாதுக்கள் மீது விசாரணை நடத்துவதும், சிறையில் வைப்பதும் இந்துமதத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலே ஆகும், இதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று கூறியதாகவும்..
அதற்கு நீதிபதி இங்கு மதம் தொடர்பான சொற்பொழிவுகள் கேட்க யாரும் வரவில்லை, அரசமைப்புச் சட்டத்தின் படி விசாரணை நடந்து வருகிறது. குற்றம் செய்தவர், யாராக இருந்தாலும் அரசமைப்பு சட்டத்தின் முன்பு சமமே! ஆகவே இது போன்ற கருத்துக்களைக் கூறி நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறினார்.
பா.ஜ.க. அரசில் பாடத் திட்டத்தில் ஆசாரம்!
வசுந்த்ரா ராஜே தலைமையிலான ராஜஸ்தான் அரச கடந்த 2013ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் குறித்து அரசு பாடப் புத்தகத்தில் சேர்த்துள்ளது. அதில் இந்து சாதுக்கள் என்ற தலைப்பில் “மக்களை வழிநடத்த வந்த புனிதர்! இவர் தனது ஆன்மிக பலத்தால் மக்களை ஒருங்கிணைக்கும் வல்லமை பெற்றவர். இவரை குருவாக நினைத்த மக்கள் வாழ்க்கையில் பெரும் புகழை அடைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
மோடி செல்லுமிடம்!
“எனக்கு மன உளைளச்சல் ஏற்படும் பொழு தெல்லாம் நான் தேடிச் செல்லும் இடம் சாமியார் ஆசாராமின் மோட்சக் குடில்தான்!
– பிரதமர் நரேந்திர மோடி
எங்கே இந்த சல்லாபம்?
குஜராத் மாநிலம் தபோயில் உள்ளது வட்தால் சுவாமி நாராயணன் கோயில். அக்கோயிலுக்குள்ளே இருந்த குடிலிலேயே அர்ச்சகப் பார்ப்பனர்கள் சந்த் தேவ் வல்லப் பக்தைகளிடம் ஆடிய சல்லாபம் (சந்தேஷ் பத்திரிகை படத்துடன் வெளியிட்டதுடன் சந்தேஷின் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டது.
கிருபானந்த வாரியார் என்ன சொல்கிறார்?
பக்திக்கும், ஒழுக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை!
கேள்வி: நம் நாட்டில் இறையுணர்வு குறைந்து வருகிறதே?
பதில்: என் அனுபவத்துல சொல்றேன். பக்தி அதிகமாயிட்டிருக்கு. கோயிலுக்குப் போகிறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு?
பழனியில் எம்பெருமான் முருகன் கோயில் உண்டியலில் முன்னாடியெல்லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்திச்சு. இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு மூணு கோடியைத் தாண்டிடுது. பக்தி அதிகமாக இருக்கு… ஆனால், ஒழுக்கம்தான் குறைந்து போயிடுச்சு!
கேள்வி: இறைவனிடத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்றால் ஒழுக்கமும இருக்கிறதென்று கொள்ளலாமே?
பதில்: ஊ. ஹூம். அப்படியில்லை. பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தமேயில்லை.
– கிருபானந்த வாரியார் (‘ஆனந்தவிகடன்’ 22.12.1991)
‘துக்ளக்’ பார்வையில்…
வினா: வேத மந்திரத்தை இந்த மாதிரி விலை பேசி விற்கலாமா?
புரோகிதர் பதில்: எல்லாம் காலக் கோளாறுதான். காலம் ரொம்பத் தப்பாப் போச்சு. நாங்கள்ளாம் இந்த மாதிரி வந்துட்டோம். இப்ப பிராமணனும் இல்லே. பிராமண தர்மமும் இல்லே.
வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா இப்போது?
புரோகிதர் விடை: பக்தியாவது ஒண்ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக, நேரம் இருந்தா சுவாமி அம்பாளை நெனச்சுக்கிறா!
‘துக்ளக்’ 1-6-1981 இதழ் பக்கம் 32