புதுடில்லி, நவ.8- கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த முகாம்களுக்கு பாதுகாப்பு வழங்கஅந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இதன்காரணமாக டொரன்டோ, வான்கூவர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற இருந்த 14 சிறப்புமுகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா – கனடா உறவில்இது மேலும் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.
கனடாவை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்தவிவகாரம் தொடர்பாக இரு நாடுகளும் கடந்த மாதம் பரஸ்பரம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றின.
காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக வன்முறையை தூண்ட இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டமிட்டுள்ளார் என்று கனடாஅமைச்சர் டேவிட் மோரிசன் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதற்கு இந்திய ஒன்றிய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
கோயில் மீது தாக்குதல்: கனடாவில் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். ஒன்றிய அரசில் பணியாற்றிய பலர் ஓய்வுக்கு பிறகு கனடாவில் குடியேறி உள்ளனர். அவர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க கனடாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்கள் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம்.இதன்படி கனடாவின் டொரன்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் நகரில் உள்ள இந்து சபா கோயில் வளாகத்தில் சமீபத்தில் இந்திய தூதரகம் சார்பில் ஓய்வூதியர்களுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அப்போது கோயில் மீதும், பக்தர்கள், ஓய்வூதியர்கள் மீதும் காலிஸ்தான் தீவிரவாத குழுவினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த சூழலில் டொரன்டோ, வான்கூவர், பிராம்ப்டன், வின்னிபெக் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஓய்வூதியர்களுக்காக 14 சிறப்பு முகாம்களை நடத்த இந்திய தூதரக அலுவலகங்கள் ஏற்பாடு செய்திருந்தன. நவம்பர் 23ஆம் தேதி வரை இந்த முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
காலிஸ்தான் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்துள்ள முகாம்களுக்கு பாதுகாப்பு வழங்க கனடா அரசிடம் முறைப்படி கோரப்பட்டது. ஆனால், பாதுகாப்பு வழங்க கனடா அரசு மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து ஓய்வூதியர்களுக்கான 14 சிறப்பு முகாம்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொலைக்காட்சி அலைவரிசை முடக்கம்:
இதற்கிடையே வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் அந்த நாட்டுவெளியுறவு அமைச்சர் பென்னிவாங்கை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், ‘‘கனடா அரசியலில் தீவிரவாதிகளுக்கு (காலிஸ்தான் தீவிரவாதிகள்) இடம் அளிக்கப்படுகிறது’’ என்று குற்றம்சாட்டினார்.இதை ‘ஆஸ்திரேலியா டுடே’ சேனல் வெளியிட்டது. இந்த செய்தி, கனடாவில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா டுடே சேனல் மற்றும் அதன் சமூக ஊடகங்களை கனடா அரசு முற்றிலுமாக முடக்கியுள்ளது.
இதுகுறித்து டில்லியில் ஒன்றிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று (7.11.2024) கூறியதாவது:
கனடாவின் இரட்டை வேடம்: பன்னாட்டு அரங்கில் பத்திரிகைசுதந்திரம் குறித்து கனடா அரசுபேசி வருகிறது. ஆனால், உள்நாட்டில் உண்மை செய்திகளை வெளியிடும் ஊடகங்களை முடக்கி வருகிறது. இது வேடிக்கையாக இருக்கிறது. இதன்மூலம் கனடாவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது. கனடாவில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து வேவு பார்க்கப்படுகின்றனர். இது பன்னாட்டு சட்டவிதிகளுக்கு எதிரானது. இத்தகைய அணுகுமுறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவுக்கு எதிரான சக்திகள் கனடாவில் செயல்பட்டு வருகின்றன. அந்த சக்திகளுக்கு கனடாஅரசியலில் பிரதான இடம் அளிக்கிறது. இதையும் கண்டிக்கிறோம்.
புலம் பெயர்ந்த ஒன்றிய அரசு ஓய்வூதியர்கள் ஏராளமானோர் கனடாவில் உள்ளனர். அவர்களுக்கான ஆயுள் சான்று தொடர்பான முகாம்களை கனடாவில் உள்ளஇந்திய தூதரக அலுவலகங்கள் நடத்துகின்றன. பாதுகாப்புக்கான உத்தரவாதம் இல்லாததால்முகாம்கள் ரத்து செய்யப்பட்டுஉள்ளன. இவ்வாறு அவர் கூறினார். டொரன்டோவில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் கூறும்போது, ‘‘குறைந்தபட்ச பாதுகாப்புஇல்லாத சூழலில் ஓய்வூதியர்களுக்கான முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தனர்.