வாசிங்டன், நவ.8- அமெரிக்க அய்க்கிய நாடுகள் எனப்படுகின்ற அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்பின் குடியுரிமை கொள்கையால், அமெரிக்க குடியுரிமைகேட்டு காத்திருக்கும் 10 லட்சம் இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாகிறது.
அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட மேனாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 295 தேர்தல் பிரதிநிதிகள் ஓட்டுகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், தற்போதைய துணைஅதிபருமான கமலா ஹாரிஸ் 226 தேர்தல் பிரதிநிதிகள் ஓட்டுகளை பெற்று தோல்வி அடைந்தார்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். டிரம்பின் முந்தைய ஆட்சி காலத்தில் இந்தியாவுடன் மிக நட்புணர்வுடன் இருந்தார். அதை தனது வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார்.
அதிரடி உத்தரவுகள்
அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, “நான் வெற்றி பெற்றால் அமெரிக்க குடிமக்களுக்கு நன்மை கிடைக்கும் அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன். அமெரிக்கர்கள் எதிர்கால வளமான வாழ்வுக்காக தொடர்ந்து போராடுவேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அவரது முக்கிய கொள்கைகளில் ஒன்று அமெரிக்க குடியுரிமை சட்டத்தை சீர்திருத்துவது. பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள். அதில் அவர் மாற்றம் கொண்டு வருவார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
வருகிற ஜனவரி மாதம் 20ஆம் தேதி வாசிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் நடை பெறும் பதவி ஏற்பு நிகழ்ச்சியில், அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டிரம்ப் பதவி ஏற்கவுள்ளார். இதையடுத்து அவர் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியுரிமை சட்ட சீர்திருத்தம் ஆண்டுதோறும் அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் அமெரிக்கர்களின் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக கருதும் டிரம்ப், குடியுரிமை சட்டத்தை சீர்திருத்தத் திட்டமிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் எச்.1 பி விசா கொள்கையில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு இணையர்களில் யாராவது ஒருவர் அமெரிக்க குடியுரிமை பெற்று இருக்க வேண்டும். அப்படி குடியுரிமை பெற்று இருந்தால் மட்டுமே அவர்களது குழந்தைகள் தானாக குடியுரிமைபெற முடியும் என்று குறிப்பிட்டார்.
10 லட்சம் இந்தியர்களின் நிலை?
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டு கேட்டு வெளிநாட்டவர் ஏராளாமானோர் காத்திருக்கிறார்கள். அதில் இந்தியர்கள் மட்டும் சுமார் 10 லட்சம் பேர், கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.
டிரம்ப் பதவி ஏற்றதும் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தால், நிரந்தர குடியுரிமை கிடைப்பது குதிரைக்கொம்பாகும். கிரீன் கார்டு கேட்டு காத்திருக்கும் 10 லட்சம் பேரின் நிலை கேள்விக்குறியாகும் நிலை ஏற்படலாம்.
இதுதவிர ஏராளமானோர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்று டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களில் உரிய ஆவணங்கள் இல்லா மல் 7.5 லட்சம் இந்தியர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களும் வெளியேற்றப்படும் நிலை உருவாகலாம்.
வேலை மற்றும் கல்விக்காக அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாணவர்களுக்கு குறுகிய கால விசா வழங்கவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதாரம்
இதேபோல் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியை சரிகட்ட, புதிய கொள்கைகளையும் டிரம்ப் அமல்படுத்தவுள்ளார். குறிப்பாக சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உற்பத்தி பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரியை விதிக்கலாம். இதை அவர் தனது பிரச்சாரத்தின்போதே கூறியிருந்தார். அமெரிக்க தயாரிப்புகளுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதிக வரி விதிக்கப்படுகிறது. அதை சரிக்கட்ட வெளி நாட்டுபொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரிப்போம் என்று கூறியிருந்தார்.
இதுபோன்ற காரணிகள் இந்தியாவை நேரடியாக பாதிக்கக்கூடியதாக இருந்தா லும், ராணுவம் மற்றும் வர்த்தக உறவில் இந்தியாவுடன் இணக்கமான போக்கையே டிரம்ப் கடைப்பிடிப்பார். இதை அவரது கடந்த கால நடவடிக்கைகள் மூலம் தெரியவருகிறது.