“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்று முழங்கிய புரட்சிக் கவிஞரின் கருத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் வீரமாமுனிவர்.
வீரமாமுனிவர் 08.11.1680 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தார். தன்னுடைய குடும்பத்தாரின் விருப்பப்படி கிறிஸ்தவ மத போதகராக மாறிய வீரமா முனிவரின் இயற்பெயர் கான்ஸ் டன்டைன் ஜோசப் பெஸ்கி .
சமயப்பரப்புரை நோக்கில் தென் ஆப்பிரிக்க நாட்டிற்குச் செல்லும் குழுவோடு சென்ற அவரது கப்பல் வழி தவறியதால் தான்சானியாவில் சிலகாலம் தங்கி விட்டு பின்னர் இந்தியாவிற்குச் செல்லும் குழுவோடு இணைந்து கி.பி.1710இல் இந்தியாவுக்கு வந்தார். கோவா, கொச்சி, அம்பலக்காடு வழியாக, மதுரை மாவட்டத்தில் உள்ள காமநாயக்கன் பட்டியை வந்தடைந்தார். தமிழ்நாட்டிற்கு வந்து தமிழராகவே மாறி, தம் பெயரையும் தைரியநாதர் என்று மாற்றிக் கொண்டார். பின்னாளில் மக்கள் இவரை வீரமாமுனிவர் என்றே அழைத்தனர்.
தத்தம் தாய்மொழியிலே புலவர்கள் பல்வேறு இலக்கியங்களைப் படைப்பது பொதுவழக்கு. தமது தாய்மொழியல்லாத பிறமொழிகளை அறிஞர்கள் கற்று அதில் ஆழ்ந்த புலமை பெறுவதும் உலகில் காணக்கூடியதே. எனினும் ஒருவருக்குத் தம் தாய்மொழியல்லாத பிறமொழியில் இலக்கியம், இலக்கணம், அகராதி முதலிய அனைத்துத் துறைகளிலும் அரிய நூல்கள் பல படைக்கும் அளவுக்கு ஆற்றலும் அரும் புலமையும் அடைவது மிக மிக அரிய செயலாகும். செயற்கரிய அச்செயலைச் செய்து, உலக வரலாற்றிலேயே தனித்து நிற்பவருள் ஒருவராக வீரமாமுனிவர் திகழ்கிறார்.
இத்தாலி நாட்டில் பிறந்து, தமது முப்பதாம் வயதிலேயே தமிழ்நாடு வந்த அவர், தமிழில் சிற்றிலக்கியங்கள், இலக் கணம், உரைநடை, அகராதி, இசைப் பாடல்கள் முதலிய பல துறைகளில் நூல்களைப் படைத்தார்.
அதோடு மட்டுமல்லாமல் இலக்கியப் படைப்புகளுள் மிக அரியதாகக் கருதப்படும் தேம்பாவணி எனப்படும் காப்பியம் ஒன்றையும் இயற்றி வெற்றி கண்டுள்ளார்.
மேலும் அவர், திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களையும், சதுரகராதி எனப்படும் அகராதியையும், தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலையும் எழுதியுள்ளார். இவற்றுள் தொன்னூல் விளக்கம், குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படும் பெருமையுடையது. சமயப்பணிக்காக தமிழ்நாடு வந்து தமிழ் மீது உள்ள பற்றால் செம்மொழித்தமிழுக்காக தொண்டாற்றி தமிழ் மண்ணிலேயே உயிர் நீத்தார்.