உச்சநீதிமன்றம் 5 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடத்தும் படுகொலைகளுக்கு எதிரான பொது நல வழக்கில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யாததற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘பசு காவலர்களால்’ நடத்தப்படும் வன்முறை மற்றும் கொலை கொடூரங்கள் அதிகரித்து வருவதாக மகளிர் கூட்டமைப்பு தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அசாம், சத்தீஸ்கர், தெலங்கானா, மகாராட்டிரா மற்றும் பீகார் ஆகிய 5 மாநிலங்களுக்கு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, அய்ந்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில், தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகி, தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தலைமைச் செயலாளர்களுக்கு இந்த உத்தரவை தெரிவிக்குமாறு பதிவாளருக்கு நீதித்துறை உத்தரவிட்டுள்ளது. வழக்கு 4 வாரங்களுக்குப் பிறகு பட்டியலிடப்படும்.
அதிகரித்துவரும் பசுப்பாதுகாவலர்கள் போர்வை யில் நடக்கும் கொலைகள் குறித்து “தெகசின் பூனாவாலா வழக்கின் உத்தரவுகளின்படி” உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக, பீகாரின் சாரனில் மாட்டிறைச்சி கடத்துவதாக சந் தேகித்து; முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நிகழ்வு – மகாராட்டிராவின் நாசிக்கில் இதே போன்றே நடந்த படுகொலை, பசுக்களை கொண்டு செல்லும் முஸ்லிம் தினக்கூலி தொழிலாளி மீது பஜ்ரங் தள் அமைப்பினர் தாக்கிக் கொலை செய்தது, ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் முஸ்லிம்கள் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட காலித்தனம் மற்றும் ராஜஸ்தானின் கோட்டாவில் ஹஜ் யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்திய நிகழ்வுகள் குறித்தும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிஜேபி ஆளும் மாநிலங்களில் அரசுகள் இந்தப் படுகொலைகளைக் கட்டுப்படுத்த போதுமான தடுப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடர்ந்து தவறி வருவதாக மகளிர் அமைப்பு குற்றம் சாட்டியது. மாநில அரசுகள் தங்கள் குடிமக்களை வன்முறை யாளர்களிடமிருந்து பாதுகாப்பது ‘தலையாய கடமை’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த போதிலும் இந்த நிலை தொடர்ந்து கொண்ேட தானிருக்கிறது.
பொது நிகழ்வுகள் மற்றும் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் மூலம் சிறுபான்மையினருக்கு எதிராக பரப்பப்படும் பொய்யான பிரச்சாரத்தின் விளைவாகவே கூட்டக் கொலை மற்றும் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறை நிகழ்வுகளை பார்க்க வேண்டும் என்று மனுதாரர் மேலும் தெரிவித்துள்ளார்.
தெகசின் பூனாவாலா வழக்கில் நீதிமன்றம் கூறிய வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று கோருவதோடு மட்டுமல்லாமல், நிகழ்வு நடந்த உடனேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது அவர்களது குடும்பங்களுக்கு மொத்த இழப்பீட்டுத் தொகையில் ஒரு பகுதியை ‘இடைக்கால இழப்பீடாக’ வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க விதமாக, 2018ஆம் ஆண்டின் தெகசின் பூனாவாலா தீர்ப்பில், கூட்டக் கொலை மற்றும் கூட்ட வன்முறையைத் தடுப்பது தொடர்பாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு விரிவான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு நடந்தும் பிஜேபி ஆளும் மாநில அரசுகள், வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதில் கூட அலட்சியம் காட்டுகின்றன. உச்சநீதிமன்றம் சினந்து எச்சரிக்கை செய்யும் அளவுக்கு நிலைமை முற்றிப் போயிருக்கிறது என்றால், இதன் பொருள் என்ன?
பசுவைக் ‘கோமாதா’ என்று துதிக்கும் ஹிந்துத்துவா கோட்பாட்டை – அரசு அதிகாரத்தை அத்துமீறி பாது காக்கும் நிலைதான் இன்றைய யதார்த்தமான உண்மை நிலை என்பது விளங்கவில்லையா?
இந்த லட்சணத்தில் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்பதை சட்டப்படி ஆக்குவதற்கு பிஜேபி, சங்பரிவார்க் கூட்டம் துடிக்கிறது என்றால், நாடு நாடாக இருக்காது சுடுகாடாகத்தான் மாறும் – எச்சரிக்கை! எச்சரிக்கை!!