புதுடில்லி, நவ.8 ரூ.6,970 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் இன்னும் வங்கிக்கு திரும்பவில்லை என்றும், இதுவரை 98.04 சதவீதம் வங்கிக்கு திரும்ப வந்துவிட்டது எனவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசு, புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட் டுக்கள் செல்லாது என்று அறிவித்தது. பொருளாதாரத்தில் பணத் தேவையினை பூர்த்தி செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934 பிரிவு 24(1)-இன் கீழ் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத் தப்பட்டன. பின்னர், கடந்த ஆண்டில் (2023)இல், மற்ற ரூபாய் நோட் டுகள் போதுமான அளவில் கிடைப்பதால் ரூ.2,000 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறியுள்ளதால் 2018-2019 ஆண்டில் ரூ.2,000 நோட்டுக்கள் அச்சடிப்பது நிறுத்தப்படுவதாக ஆர்பிஅய் தெரிவித் திருந்தது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இதைத்தொடர்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி புழக்கத்தில் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாகவும் இனி அவை செல்லாது, பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதற்கான நீண்ட கால அவகாசமும் வழங்கப்பட்டது. அப்போது, மொத்தம் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து ஏராளமானோர், தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்றி வருகின்றனர். கடந்த 2023, மே 19 முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களிலும் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் வசதி அமலில் உள்ளது. முதல், தனிநபர்களோ, நிறுவனங்களோ அவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.2000 நோட்டுகளை வைப்புச் செய்யவும் அதிகாரிகள் அனுமதித்து வந்தனர். இதற்கான அனுமதி வழங்கி ஓராண்டை கடந்துள்ளது.
இந்த நிலையில், இன்னும் சுமார் 7ஆயிரம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுக்கள் திரும்பவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. அதாவது, 2024, அக்.31-ஆம் தேதி நிலவரப்ப படி, ரூ.6,970 கோடி மதிப்பிலான ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மக்களிடம் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 8.11.2016ஆம் நாளினை சாமானியர்கள் தொடங்கி மிகப்பெரிய பணக்காரர்கள் வரை அவ்வளவு சீக்கிரம் அந்த மாலை நேரத்தை மறந்து விட முடியாது. அன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.
எந்த புதிய திட்டம் வந்தது?
இந்திய பொருளாதாரத்தை, தேசத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது எனப் பேசினார். இதனால் ஏதேனும் புதிய திட்டத்தை அறிவிக்க போகிறாரா என்று பலரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.
அப்போதுதான் இந்தியா முழுவதுமே பலத்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. நாட்டில் அதுவரை புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும் வெளிநாடுகளில் இருந்து பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என அறிவித்தார். மேலும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பொதுமக்கள் தங்கள் வசம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி விட்டு புதிய 500 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
பதுக்கல்தான் நடந்தது
அடுத்தடுத்து பல நாட்களுக்கு வங்கிகளிலும், ஏடிஎம் வாசல்களிலும் பொதுமக்கள் காத்துக் கிடந்தனர். தங்கள் வசம் இருந்த செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை ஏடிஎம் மய்யங்களிலும், வங்கிகளிலும் செலுத்தி விட்டு புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்கு ஆர்வம் காட்டினர். இதனால் மிகப்பெரிய பொருளாதார தாக்கம் ஏற்பட்டதோடு சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளையும் சந்திக்க நேர்ந்தது
பெரும் பணக்காரர்கள் வங்கி அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி விட்டு புதிய ரூபாய் நோட்டுக்களை மொத்தமாக பதுக்கி வைக்கத் தொடங்கினர். பல இடங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப் பட்டது. பல இடங்களில் பழைய ரூபாய் நோட்டுககளை மாற்றி தருவதாக மோசடி சம்பவங்களும் அரங்கேறின. கையில் வைத்திருந்த 1000 500 ரூபாய் நோட்டுகளோடு கால் கடுக்க வெயிலில் காத்திருந்த பலரும் மயங்கி விழுந்து சரிந்தனர்.
கூலித்தொழிலாளிகள், பொதுமக்கள் வீட்டில் ஆயிரம் ரூபாய் 500 ரூபாய் என சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்தப் பணத்தை பயன்படுத்த முடியாது. மருத்துவச் செலவுகளுக்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும், ஏன் பள்ளி கட்டணம் செலுத்துவதற்கு கூட அங்கும் இங்கும் ஓடி அலைந்த நிகழ்வுகளை காண முடிந்தது. பெரும் வியாபாரிகள் இணைய வழி பரிமாற்றத்தின்படி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்ட நிலையில் கடைநிலை மக்களும் அன்றாடம் அரிசி பருப்பு வாங்கக்கூட முடியாமல் தவித்தனர்.
200 பேர் மரணம்
பணமதிப்பிழப்பு அறிவித்த நவம்பர் 8 முதல் டிசம்பர் 22 வரை இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று மரணித்தனர். ஆனால் இது குறித்த முழுமையான விவரத்தை நீதிமன்றத்தில் மோடி அரசு இன்றுவரை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.