ராஞ்சி, நவ. 6- பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை, அவர் உண்மைக்கு எதிரானவர்களின் தலைவர் என ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் – ஆர்ஜேடி, இடதுசாரி கட்சிகள் கூட்டணியாக போட்டியிடுகின்றன. பாஜக அங்குள்ள மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
இரு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று (நவ. 5) ஜார்க்கண்டில் கான்கே பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது, ‘சாதாரண குடிமக்களின் நலனைவிட பணக்காரர்களின் நலனுக்குத்தான் பிரதமர் மோடியும் அவரது அரசும் முன்னுரிமை அளிக்கிறது. அவர் உண்மைக்கு மாறானவர்களின் தலைவர். ஏனெனில், பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம், கறுப்புப் பணத்தை ஒழிப்பது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை.
மற்றவர்கள் வைத்திருக்கும் நல்ல விஷயங்களை பிரதமர் மோடி கண்டுகொள்வதில்லை. அவர் 2 முக்கிய பிரமுகர்களையும் அமித் ஷாவையும் மட்டுமே கவனிக்கிறார். அமைச்சரவையில் யாரும் பேச முடியாது. பிரதமர் மோடியால் மட்டுமே பேச முடியும், அமித்ஷா பேசுவார். எல்லா அதிகாரங்களும் அவரிடமே உள்ளன. ஜார்க்கண்டின் கனிம வளங்களை பாஜக கொள்ளையடிக்க முயல்கிறது. அவர்களின் நோக்கம் மக்களின் நலன் அல்ல, ஒரு சில பணக்காரர்களின் நலன்களுக்காக சேவை செய்வதாகும்.
ஹேமந்த் சோரனை யாராலும் ஆட்சியில் இருந்து நீக்க முடியாது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக அவர் மீண்டும் பதவியேற்பார்’ என்று பேசினார்.