கோவையில் தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மய்யம்! 2026 ஜனவரி மாதம் திறக்கப்படும்!
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு!
கோவை, நவ.6 கோவையில் தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மய்யம் அமைக்கப்படும் என்பதோடு, 2026 ஜனவரியில் அது திறக்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை (திறக்கப்படும் தேதி உள்பட) வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (06.11.2024) கோயம்புத்தூர், அனுப்பர்பாளையத்தில் நடைபெற்ற “தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மய்யக் கட்டடம்” அடிக்கல் நாட்டு விழாவில் மேற்கண்ட அறிவிப்பினை செய்தார்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை நாம் சிறப்பாக நடத்தினோம். அதன் நினைவாகதான், மதுரையில் மாபெரும் நூலகத்தை அமைத்தேன். நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் அதைப் பயன்படுத்தி பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்! அதேபோல் கோவையிலும் ஒரு நூலகம் கலைஞர் பெயரால் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வந்தது. கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்று நான் அறிவித்தேன். அடுத்து வந்த ஆலோசனையில் நூலகத்துடன் சேர்த்து, அறிவியல் மய்யமும் அமைக்கலாம் என்று கருத்துகள் வந்தவுடன், எனக்கு நினைவில் வந்தவர் தந்தை பெரியார் அவர்கள். சென்னையில், அண்ணா நூற்றாண்டு நூலகம் இருக்கிறது! மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இருக்கிறது! அதனால் கோவையில், அவர்கள் இரண்டு பேரையும் உருவாக்கிய தந்தை பெரியார் பெயரில் நூலகமும், அறிவியல் மய்யமும் அமைவது தான் பொருத்தமாக இருக்கும்.
80 ஆண்டுகளுக்கு முன்பே
‘இனி வரும் உலகம்பற்றி’ கணித்தவர் தந்தை பெரியார்!
தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியார் அவர்கள்!
80 ஆண்டுகளுக்கு முன்பே, இனி வரும் உலகம் எப்படி இருக்கும் என்று கனவு கண்ட, பகுத்தறிவு ஆசான் அவர்கள்! அறிவும், ஆற்றலும், பகுத்தறிவும் பகுத்துண்டு பல்லுயிர் காக்கும், சமூகத்து மக்களாக இன்றைய இளைய சமுதாயம் வளர-வாழ தந்தை பெரியார் நூலகமும், அறிவியல் மய்யமும் கோவையில் கம்பீரமாக ஏன் மிகச் சிறப்பாக எழ இருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியில் நான் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்.
அதுமட்டுமல்ல, இந்த அடிக்கல் நாட்டு விழாவில், திறப்பு விழா தேதியையும் நான் அறிவிக்கிறேன்; துணிச்சலோடு அறிவிக்கிறேன்; தெம்போடு அறிவிக்கிறேன்; உறுதியோடு அறிவிக்கிறேன். 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இந்த நூலகம் திறக்கப்படும். திராவிட மாடல் அரசை பொறுத்தவரை, சொன்னால், சொன்னதை செய்யும்! நேற்றுகூட, கோவையில் எல்காட் நிறுவனத்தின் சார்பில், 114 கோடியே 16 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தைத் திறந்து வைத்தேன்.
அதுமட்டுமல்ல, இன்று இந்த நிகழ்ச்சிக்கு முன்பு, கோவையின் அடையாளமாக மாற இருக்கும் செம்மொழிப் பூங்கா பணிகளையும் பார்வையிட்டுதான் நான் இங்கு வந்திருக்கிறேன். ரூ.133 கோடி மதிப்பீட்டில் காந்திபுரத்தில் நம்முடைய அரசு உருவாக்கி வருகின்ற அந்த பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு ஜூன் அது திறக்கப்பட இருக்கிறது. நம்முடைய ஆட்சியில் ஒரு திட்டத்தை அறிவித்தோம் என்றால், அதை குறிப்பிட்ட காலத்திற்குள் திறந்து வைப்போம். அதற்கு சில எடுத்துக்காட்டுகளை நான் சொல்ல விரும்புகிறேன்.
உயர்தர சிகிச்சை வழங்கும் சென்னை “கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை!”
உலகத்தரத்திலான மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்!
வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, மாபெரும் அரங்கம்!
உலகத்திற்கு நம்முடைய வரலாற்றை எடுத்துக்காட்டும் கீழடி அருங்காட்சியகம்!
அந்த வரிசையில்தான், இந்த பெரியார் நூலகமும் இடம்பெற போகிறது என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.