ராணிகஞ்ச், நவ. 5- வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக பீகார் மாநிலம் பெண் ஒருவர், பெற்ற மகனையே விற்றுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநில அராரியா மாவட்டத் தில் ராணிகஞ்ச் தொகுதியின் பச்சிரா கிராமத்தில் வசித்துவரும் முகமது ஹரூன் – ரெஹானா கட்டூன் இணையர், வறுமை காரணமாக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 50,000 கடன் பெற்றுள்ளனர்.
இந்த கடனின் தவணையை செலுத்த முடியாததால் தனது குழந்தையை வெறும் ரூ. 9,000-க்கு விற்றுள்ளனர்.’தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனின் தவணை, கடந்த மூன்று மாதங்களாக நிலுவையில் இருந்ததால் மிகுந்த அழுத்தத்தில் இருந்தேன். தவணையை செலுத்தக்கூறி நிறுவனத்தின் முகவர்கள் எங்களைத் துன்புறுத்தினார்கள். கடனைத் திருப்பிச் செலுத்ததாததால் எங்கள் மீது வழக்குத் தொடரப்போவதாகக் கூறினர்.
இதன்பின்னர் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக குழந்தையை விற்கும்படி என் சகோதரர் தன்வீர் கூறியதால் நான் குழந்தையை விற்க முடிவு செய்தேன்’ என்று தாய் ரெஹானா கூறியுள்ளார்.
இந்த இணையர்களுக்கு 5 மகன்கள், 3 மகள்கள் என 8 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் குர்ஃபான் என்ற ஒன்றரை வயது குழந்தையை விற்றுள்ளனர்.
ரெஹானாவின் சகோதரர் தன்வீர் இதற்கு ஏற்பாடு செய்துள்ளார். சமீபத்தில் தன்வீரின் வீட்டில் விடப்பட்ட குழந்தை, அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஆரிஃப் என்பவரிடம் ரூ. 9,000க்கு விற்கப்பட்டுள்ளார்.ஆனால், குழந்தைக்கு ரூ. 45,000 கொடுத்ததாக ஆரிஃப்பின் உறவினர் கூறுகின்றனர். ஆரிஃப்பிடம் இருந்து தன்வீர் எவ்வளவு பெற்றார் என தனக்குத் தெரியாது என்று ரெஹானா, காவல்துறையிடம் தெரிவித்தார். மேலும் தனது குழந்தையை விற்க தன்வீரால் கட்டாயப் படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
ஆரிஃப் அந்த குழந்தையை ரூ. 2 லட்சத்துக்கு பெங்களூருவில் உள்ள ஒருவருக்கு விலை பேசியுள்ளார். குழந்தையை பெங்களூருவுக்கு அனுப்புவதற்கு முன்னதாகவே தகவல் அறிந்த காவல்துறையினர், குழந்தையை ஆரிஃப் வீட்டில் இருந்து பத்திரமாக மீட்டு, குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைத்தனர்.
குழந்தையின் பெற்றோர் முகமது ஹரூன், ரெஹானா கட்டூன் இருவரும் காவல் துறையின் கட்டுப் பாட்டில் உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.