அகமதாபாத், நவ. 5- குஜராத்திலுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் புகுந்த கொள்ளையர்கள் முக்கிய ஆவணங்களைத் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அகமபாத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் கொள்ளை போன ஆவணங்கள் குறித்து காவல்துறையில் புகாரளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த கொள்ளை நிகழ்வு தொடர்பாக ஆம் ஆத்மி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ’தீபாவளிக்கு பெரும்பாலான ஊழியர்கள் விடுமுறையில் இருந்தனர். அலுவலக மேற்பார்வையாளர் உறவினரைப் பார்க்க மதியநேரம் அலுவலகத்தைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். அவர் நேற்று (நவ. 3) மாலை 7 மணியளவில் அலுவலகத்திற்கு வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக கட்சி ஊழியர்களுக்குத் தகவல் சொன்ன அவர், காவல்துறையில் புகாரளித்துள்ளார். அலுவலகத்தில் எவையெல்லாம் திருடுபோயுள்ளன என்பதை மதிப்பிட்டு வருகிறோம். கட்சித் தலைமையகத்தில் வெறும் பணத்திற்காக மட்டுமே இந்தத் திருட்டு நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை’ என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான முதற்கட்ட விசாரணை நேற்று (நவ. 4) இரவு நடைபெற்றது. மேலும், மாநிலத் தலைவர் இசுதன் காத்வியின் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநிலத் தலைவர் இஷுதன் காத்வி கூறுகையில், “குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியினரின் வீடுகளுக்கு மட்டுமல்ல. கட்சி அலுவலகத்துக்கும் பாதுகாப்பில்லை. நேற்று எங்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து கொள்ளை நிகழ்வு குறித்த தகவலைச் சொன்னார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது
ஆம் ஆத்மி அலுவலகத்தில் பணமோ நகையோ இல்லை. எனவே, கொள்ளைச் நிகழ்வின் நோக்கம் குறித்து சந்தேகம் எழுகிறது. கூட்டம் நடத்தப்படும் அரங்கு மற்றும் மற்றொரு அறையுடன் சேர்த்து முக்கிய வாயில் கதவு, உள்கதவு ஆகியவை உடைக்கப்பட்டு ஒரு டிவி மற்றும் முக்கியமான ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. சில முக்கிய திட்டங்கள் தொடர்பான ஆவணங்கள் காணவில்லை. இது தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்