லிமா, நவ.5- பெரு நாட்டில் நடந்த போட்டி யின்போது மின்னல் தாக்கி 39 வயதான கால்பந்து வீரர் உயிரிழந்தார். மேலும் 5 வீரர்கள் காயமடைந்தனர்.
பெரு நாட்டின் ஹுயாகயா மாகாணத்தில் உள்ள சில்கா மாவட்டத்தில் 3.11.2024 அன்று உள்ளூர் கால்பந்துப் போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் அணிகளான ஜுவன்டெட் பெல்லாவிஸ்டா, ஃபேமிலியா சோக்கா ஆகிய அணிகள் மோதின.போட்டி நடந்து கொண்டிருந்தபோது கருமேகங்கள் சூழ்ந்து மின்னல் வெட்டியது. அப்போது மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வீரர் ஜோஸ் ஹுகோ டி லா குரூஸ் மெஸா என்ற வீரர் மீது மின்னல் தாக்கியது. அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். மின்னல் தாக்கியதால் மேலும் 5 வீரர்கள் காயமடைந்தனர்.
மின்னல் பாய்ந்ததும் கால்பந்து போட்டியாளர்கள் போட்டியை நிறுத்திவிட்டு காயமடைந்த வீரர்களை நோக்கி ஓடினர். அப்போது ஜோஸ் ஹுகோ டி லா அதே இடத்திலேயே உடனடியாக இறந்தது தெரியவந்தது. காயமடைந்த மற்ற 5 வீரர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் கோல்கீப்பர் ஜுவான் சோக்கா (40), கிறிஸ்டியன் சீசசர் பிடுய் காஹுவானா உள்ளிட்டோரும் அடங்குவர். மின்னல் தாக்கியதில் இவர்கள் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மின்னல் பாய்ந்ததால் போட்டி நிறுத்தப்பட்டு ஜுவான்டெட் பெல்லாவிஸ்டா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 22 நிமிடங்கள் மட்டுமே இந்த போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்வால் போட்டியில் கலந்துகொண்ட வீரர்களும், போட்டியைப் பார்க்க வந்த ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
போட்டி நடந்த மைதானமானது கடல் மட்டத்திலிருந்து 10,659 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மழைக்காலத்தின்போது இங்கு அடிக்கடி மின்னல் தாக்கும் நிகழ்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மைதானத்தில் கால்பந்துப்போட்டி நடந்து கொண்டிருக்கும்போது மின்னல் தாக்கியதை மைதானத்தில் இருந்த சில ரசிகர்கள் காட்சிப் பதிவாக எடுத்துள்ளனர். அந்த காட்சிப் பதிவில் மைதானத்தில் தீப்பிழம்பு ஏற்படுவது போல மின்னல் தாக்குகிறது. மின்னல் தாக்கிய அதே விநாடியில் கால்பந்து வீரர் கீழே சுருண்டு விழுவதும் காட்சிப் பதிவில் பதிவாகியுள்ளது. மேலும் மைதானத்தில் அவருடன் விளையாடிய வீரர்கள் 5 பேரும் மின்னல் தாக்கி காயமடைந்து விழுவதும் அந்த காட்சிப் பதிவில் பதிவாகியுள்ளது.
மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி? – மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழந்தது குறித்து அறிவியல் பேராசிரியர்த.வி.வெங்கடேஸ்வரனி டம் பேசினோம். “உலகம் முழுவதும் ஒவ்வொரு நொடியிலும் 50-100 மின்னல்கள் ஏதேனும் ஒருபகுதியில் விழுந்துகொண்டுள்ளன. மின்னலின் வேகம் ஒரு நொடிக்கு 1,56,000 கி.மீ. இதன் நீளம் மேகத்திலிருந்து பூமிக்கு சில கி.மீ இருக்கலாம். ஆனால் மின்னலின் தடிமன் 1 முதல் 2 அங்குலம்தான்.
எனவே ஒருவரைத் தாக்கும் மின்னல், அவருக்கு அருகில் இருப் பவரைத் தாக்காமல் போகலாம். ஒரு பகுதியில் மின்னலின் தீவிரம்,இன்னொரு பகுதியில் வேறுமாதிரியாக இருக்கும். இந்தியாவில் மட்டும் வெப்ப அலை, மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களின்போது மின்னலால் ஆண்டுக்கு 2,500 பேர் இறக்கின்றனர். இவற்றில் 90 சதவீத மரணம், மக்கள் திறந்தவெளியில் நிற்பதால்தான் நிகழ்கிறது. மின்னல் வெட்டும் சூழலில் தண்ணீரோ, ஈரமோ அற்றதரையில் நிற்க வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறது.
ஏனெனில் மரங்களும் ஈரமும் உள்ள பகுதிகளில்தான் மின்னல் இறங்கும். ஏதேனும் கூரைக்குக் கீழ்நிற்பதே மிகவும் பாதுகாப்பானது. திறந்த வெளியில் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை எனில், சம்பந்தப்பட்ட நபர் நிற்பதைத் தவிர்த்து, உலர்ந்த இடமாகத் தேடி உட்காரவும் அறிவுறுத்தப்படுகிறது. உட்கார்ந்த நிலையில் தலையை மின்னல் தாக்குவதற்கான வாய்ப்பு சற்று குறைவு. பெரு நாட்டில் நிகழ்ந்த துயரத்தின் பின்னணியில், வீரர்களை மின்னல் தாக்குவதற்கான எல்லா சாத்தியங்களும் அங்கு இருந்ததைக் கவனிக்க முடிகிறது” என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.