சென்னை, நவ.5- பெண்களுக்கான கட்டுப்பாட்டு மய்யத்தின் அழைப்பு ஏற்பாளர் பணியில் சேர ஹிந்தி மொழியை தகுதியாக குறிப்பிட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக நலன் மற் றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சமூக நல ஆணையரகம் இயங்குகிறது. பாதிப்புக்கு உள்ளாகும் மகளிருக்கு உதவ இந்த ஆணையரகம் மூலம் பெண்களுக்கான கட்டுப்பாட்டு மய்யம், மகளிர் உதவி எண்- 181 என்பது சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த மய்யத்தில் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் பெற முடிவு செய்யப்பட்டது.
எனவே tn.gov.in என்ற இணையதளத்தில் அதற்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை, சமூகநல ஆணையரக இணை இயக்குநரால் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் அழைப்பு ஏற்பாளர் என்ற பணியிடத்திற்கு தேவையான தகுதிகளாக தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை, தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்தவுடன் அதற்கான விளம்பரம் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிக்கை உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது.
பணியிடை நீக்கம்
இணையத்தில் தவறுதலாக பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாய்மொழியாம் தமிழ் மொழியை உயிருக்கும் மேலாய் மதிக்கும் தி.மு.க. தலைவரான முதலமைச்சர் தலைமையில், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. நீதிமன்றங்கள் மற்றும் ஒன்றிய அரசுடனான கடிதப் போக்குவரத்து போன்றவற்றிற்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து, திருவள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டம் மற்றும் 133 அடியில் வானுயர சிலை, உலகத் தமிழ் மாநாடு நடத்தியது, தமிழுக்கு செம்மொழி சிறப்பு பெற்றுத் தந்தது என எண்ணிலடங்கா பெருமைகள் கொண்டதுதான் தி.மு.க.வரலாறு. தமிழர் பெருமை கூறும் கீழடி அருங்காட்சியகம் அமைத்து, உலகத்தின் பார்வையை நம் மீது திருப்பியது அண்மைக்கால வரலாறு.
அலுவலரின் தவறும், அரசியலும்…
மேலும்,அரசுப்பணிகளில் தமிழ் மொழியில் பயின்றவருக்கு முன்னுரிமை அளித்து அரசாணை வெளியிட்ட அரசு தி.மு.க.அரசு. தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்ய, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான இந்த அரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் இருப்பதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இதனால் மக்கள் ஏமாறப்போவதில்லை. முதலமைச்சர் ஆட்சியில், தமிழ்மொழி மென்மேலும் சிறப்புகள் பெற்று வளர்ந்து வருகிறது. அதைக் காண சகிக்காதவர்கள்தான் இப்போது கூக்குரல் இடுகிறார்கள். அதை புறந்தள்ளி தமிழ் வழி பயணத்தை சிறப்புற தொடர்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது