உரிமைகளும் முழுமையாக நமக்கு வரவில்லை; வந்த உரிமைகளும் முழுமையாக நமக்கு நிலைக்கவில்லை – இன்னும் வரவேண்டியவை பாக்கி இருக்கின்றன!
எங்களுடைய அடுத்தகட்ட , தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதே!
ஈரோடு, நவ.4 உரிமைகள் வந்துவிட்டதே என்பதற்காக நாம் அலட்சியமாக இருக்க முடியாது. உரிமைகளும் முழுமையாக நமக்கு வரவில்லை. வந்த உரிமைகளும் முழுமையாக நமக்கு நிலைக்கவில்லை. இன்னும் வரவேண்டியவை பாக்கி இருக்கின்றன. அதனை நோக்கிச் செல்வதற்காகத்தான், இதுபோன்ற மாநாடுகளும், இதுபோன்ற ஆயத்தங்களும், விழிப்புணர்வுகளும், மேடைகளும் தேவை. எங்களுடைய அடுத்தகட்ட போராட்டம் என்னவென்றால், தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை அகில இந்திய அளவில் கொண்டு போய்ச் சேர்க்கப் போகிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின்
31 ஆம் ஆண்டு – 13 ஆம் மாநில மாநாடு!
கடந்த 10.8.2024 அன்று காலை ஈரோட்டில் நடைபெற்ற யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்ப டுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 31 ஆம் ஆண்டில், 13 ஆம் மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
காரணம் என்னவென்றால், 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் ஓர் ‘ஒபிடர் டிக்டா’ இருந்தது. அது ஒரு தனி தீர்ப்பாகக்கூட இல்லை – பாலாஜி என்கிற ஒரு வழக்கில். ஆனால், அதையே மிகப்பெரிய தடைபோல உருவாக்கினார்கள்.
எனவேதான், எங்களைப் போன்றவர்களை மண்டல் அவர்களும், அந்த ஆணையத்தில் உள்ளவர்களும் கலந்தாலோசித்தனர்.
நமக்கு மட்டுமல்ல,கடவுள்களுக்கே மூடப்பட்டது!
மூடப்பட்ட கதவு இதுவரை திறக்கவில்லை. முதலில் கொஞ்சம் திறக்கவேண்டும். எடுத்தவுடனேயே முழு மையாக அந்தக் கதவு திறக்கவேண்டும் என்பதில்லை.
ஏனென்றால், அந்தக் கதவுகள் மூடப்பட்டு நீண்ட காலமாகிறது. நமக்கு மட்டுமல்ல, கடவுள்களுக்கே மூடப்பட்டது என்பதுதான் மிகவும் முக்கியம்.
பைபிளில்கூட ஒரு வாசகம் சொல்லியிருப்பார்கள் – நீங்கள் எல்லோரும் அதைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ‘‘தட்டுங்கள் திறக்கப்படும்” என்பதுதான் அது.
அப்படியென்றால் என்ன அர்த்தம்?
மூடி வைத்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.
திறந்திருக்கும் கதவை யாரும் தட்டிக்கொண்டு இருக்க மாட்டார்கள்.
மூடியிருக்கின்ற கதவுகளைத்தான் தட்டுவார்கள்.
‘‘தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்” என்றார்கள். ஆனால், இங்கே கேட்டும் கொடுக்கவில்லை.
போராடுங்கள், பிறகு கதவு திறக்கும் என்பதுதான் முக்கியம்.
அந்தக் கதவை உடைப்பதற்கும் தயாராகிவிட்டேன்: பெரியார்!
‘‘தட்டித் தட்டிப் பார்த்துவிட்டேன்; திறக்கவில்லை; இனிமேல் அந்தக் கதவை உடைப்பதற்கும் தயாராகி விட்டேன்” என்று பெரியார் சொன்ன பிறகுதான், அந்தக் கதவு திறந்தது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், மண்டல் அவர்களிடம் நாங்கள் என்ன சொன்னோம் என்றால், ‘‘முதலில் கணக்குத் திறங்கள்” என்றோம்.
முதலில் கதவு திறக்கட்டும்; பிறகு பார்த்துக் கொள்ளலாம்!
52 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேண்டும் என்று கேட்டிருந்தால், அது உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்றிருக்கும். ஆகவேதான், 27 சதவிகித இட ஒதுக்கீடு கொடுங்கள்; முதலில் கதவு திறக்கட்டும்; பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னவுடன், 27 சதவிகிதத்திற்கு ஒப்புக்கொண்டார்கள்.
எப்படி 27 சதவிகிதம் வந்தது?
நம்முடைய எஸ்.சி., எஸ்.டி., சகோதரர்கள் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு கீழே இருந்தவர்கள். அவர்களுக்குரிய உரிமை என்பது பாதுகாக்கப்படவேண்டிய உரிமையாகும். அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் முரண்பட்ட நிலை கிடையாது. ஒன்றுபட்ட சூழல்தான்.
அவர்களுக்கு 15 + 7.5 சதவிகிதம். அதாவது, 15 சதவிகிதம் எஸ்.சி., 7.5 சதவிகிதம் எஸ்.டி., ஆக மொத்தம் 22.5 சதவிகிதம். 50 சதவிகிதத்திற்கு மிகக் கூடாது என்பதால் எஞ்சிய 50 சதவிகிதத்தில் 22.5 சதவிகிதத்தைக் கழித்தால், 27 சதவிகிதம்.
27 சதவிகிதம் நடைமுறையில் வந்ததா?
52 சதவிகிதம் என்கிற பரிந்துரையாக இருந்தாலும், இப்படித்தான் 27 சதவிகிதத்திற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், அது நடைமுறையில் வந்ததா என்றால், இல்லை!
கிளாஸ் 1 இல் 27 சதவிகிதம் உண்டா? என்றால், கிடையாது.
கிளாஸ் 2 இல் 27 சதவிகிதம் உண்டா? என்றால், கிடையாது.
கிளாஸ் 3 இல் 27 சதவிகிதம் உண்டா? என்றால், கிடையாது.
கிளாஸ் 4 இல் 27 சதவிகிதம் வந்தது. ஏனென்றால், கிளாஸ் 4-க்கு வேறு ஆட்கள் வரமாட்டார்கள், அதனால்தான்.
அடித்தளத்தில், எங்கள் சகோதரர்கள் அதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
இதுதான் எதார்த்தம்!
மீதி என்னாயிற்று?
சமூகநீதி புரட்சியாளர் வி.பி.சிங்!
27 சதவிகிதத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, காலங்காலமாக நாம் நன்றி செலுத்தவேண்டிய சமூக நீதி புரட்சியாளர் வி.பி.சிங் அவர்கள் அதற்காக அவருடைய ஆட்சியையே இழந்தார்.
‘‘நான், பல முறை பிரதமர் பதவியை இழப்பதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று சொன்னார்.
மண்டல் வந்ததும், கமண்டலைத்தைக் காட்டி, அவருடைய ஆட்சியை பா,ஜ.க. கவிழ்த்தது.
இதையெல்லாம் தாண்டி, 9 நீதிபதிகள் அமர்வில் இந்திரா சகானி வழக்கு வந்தது. அதற்குப் பிறகு, 27 சதவிகிதம் செல்லும் என்று தீர்ப்பு வந்தது. நாமெல்லாம் நினைத்தோம், வேலை வாய்ப்புகளில் 27 சதவிகிதம் வந்துவிட்டது என்று.
ஆனால், கொடுமையான செய்தி என்னவென்றால், வெறும் 11 சதவிகித இட ஒதுக்கீடுதான் – அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்., மற்றும் ரெக்ரூட்மெண்ட்டில் வந்தது.
பழைய நிலைக்கு மறுபடியும் கொண்டு வந்துவிட்டார்கள்!
மீதம் இருப்பது யாருக்குப் போகும்?
ஃகேரி ஃபார்வர்டு என்று சொல்லி இந்த உத்தி யோகம் முழுவதும் திறந்தவெளி போட்டிக்குப் போகும்; அப்படியென்றால், முன்னேறிய ஜாதிக்கா ரர்களுக்குத்தான். பழைய நிலைக்கு மறுபடியும் கொண்டு வந்துவிட்டார்கள்.
ஒரு பக்கம் கொடுப்பது போன்று காட்சி; இன்னொரு பக்கம் காணாமல் போகக்கூடிய ஓர் அபாயம்தான் – இந்த 27 சதவிகித இட ஒதுக்கீட்டில்.
அடுத்தபடியாக, என்னென்ன பரிந்துரைகளைச் செய்தார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம்.
தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு!
அந்த நேரத்தில்தான், 50 சதவிகிதத்தைத் தாண்டி, தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு 9 ஆவது அட்டவணை பாதுகாப்புடன் இருந்தது.
அப்பொழுது பல பேருடைய கருத்துகள் கேட்கப்பட்டன. அப்பொழுது நாங்கள் மண்டல் அவர்களிடம் ஒரு கருத்தைச் சொன்னோம்.
‘‘ஒன்றிய அரசுக்கு நீங்கள் எத்தனை சதவிகித இட ஒதுக்கீட்டைப் பரிந்துரை செய்தாலும், அது நடைமுறைப்படுத்தப்படுமா? என்பது சந்தேகம்தான். நாங்கள் ஒரு வேண்டுகோளை வைக்கின்றோம்” என்று சொன்னோம்.
அதைத் தெளிவுபடுத்தச் சொல்லி, அந்தக் குழுவி னுடைய உறுப்பினரான சுப்பிரமணியம் அவர்களை பெரியார் திடலுக்கு அனுப்பினார்.
அன்று நடந்ததை இன்றைக்கு நான் சொல்கிறேன். இப்பொழுது சொல்வதனால், ரகசியத்தை வெளியிடு கிறேன் என்று அர்த்தமல்ல.
அவர், ‘‘என்ன செய்யவேண்டும் என்று நினைக்கி றீர்கள்?” என்று கேட்டார்.
‘‘நீங்கள் எத்தனை சதவிகிதம் வேண்டுமானாலும் பரிந்துரை செய்யுங்கள். ஆனால், ஒரே ஒரு வேண்டு கோள், ஏற்கெனவே எந்த மாநிலத்தில் அதிக சதவிகிதம் இருக்கிறதோ, இதைக் காரணம் காட்டி, அதைக் குறைக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது” என்றோம்.
‘‘அந்தந்த மாநிலத்தில், அவரவர் சூழ்நிலைக்கேற்ப இருக்கவேண்டும். எங்கள் சட்டப்படிதான் இட ஒதுக்கீடு சதவிகிதம் இருக்கவேண்டும்; அதற்குமேல் தாண்டக்கூடாது என்று நீங்கள் சொல்லக்கூடாது” என்று சொன்னோம்.
“அதை நாங்கள் ஏற்கிறோம்” என்று சொன்னார்கள்.
இன்றுவரையில் 69 சதவிகிதத்தில்
யாராலும் கை வைக்க முடியவில்லை!
அப்படி பாடுபட்டுதான் 69 சதவிகிதம் காப்பாற்றப் பட்டது. இன்றைக்கு அந்த ரகசியத்தைச் சொல்கிறேன்.
States that have already introduced reservations for OBCs exceeding 27% will not be affected by this recommendation. With this general recommendation, the Commission proposed the following overall scheme.அதில் கைவைக்கக் கூடாது என்று மிகத் தெளிவாகச் சொன்னார்கள்.
முதல் வெற்றி அதுதான்!
அதனால்தான், இன்றுவரையில் 69 சதவிகிதத்தில் யாராலும் கை வைக்க முடியவில்லை. ஆனால், இன்றைக்குப் பூச்சாண்டி காட்டிப் பார்க்கிறார்கள் சில பேர்.
நாம் அடையவேண்டியவை நிறைய இருக்கின்றன!
ஒரு பக்கத்தில் 27 சதவிகிதம் என்று கொடுத்துவிட்டு, இன்னொரு பக்கத்தில் கொடுத்ததைவிட அதிகமாக அவர்கள் பின்வாங்கியிருக்கிறார்கள். நாம் இழந்தி ருக்கின்றோம். நாம் அடையவேண்டியவை நிறைய இருக்கின்றன. அந்த அடைய வேண்டியவற்றைத்தான் இப்பொழுது உங்கள் முன்னால் சொல்லியிருக்கின்றோம்.
அதற்கடுத்து அடையவேண்டிய இலக்கை நோக்கி என்ன செய்யவேண்டும் நாம் என்று நினைக்கவேண்டும்.
அப்படி வரும்பொழுது, அவர்களே சொல்கிறார்கள்,
Candidates belonging to reserved categories recruited on the basis of merit in open competition should not be adjusted against reservation quota.
திறந்த போட்டி – பொது போட்டியில் வரும் அளவு திறமையானவர்களை பொதுப் போட்டியிலேயே வைக்கவேண்டும். ஆனால், அவர்களை இட ஒதுக்கீட்டுப் பகுதிக்குள் கொண்டுபோய் வைக்க முயல்கிறார்கள்.
அதற்காக போராட்டம் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றது ஒரு பக்கதத்தில்.
மண்டல் ஆணையப் பரிந்துரையை ஒரு பக்கத்தில் தூக்கிப் போட்டு விட்டார்கள். ஒன்றிய அரசில் இது நடந்து கொண்டிருக்கின்றது.
The above reservation should also be made applicable to promotion quota all levels.
அதாவது, Appointment includes the Promotion also இதுதான் உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பாகும்.
பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு உண்டு என்பதுதான் மண்டல் அறிக்கையின் பரிந்துரை!
ஆகவேதான், நீங்கள் ஒருமுறை அப்பாய்ண்ட் மெண்ட் செய்தால், அதற்கு எப்படி இட ஒதுக்கீடோ, அதேபோன்றுதான் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு உண்டு என்பதுதான் மண்டல் அறிக்கையின் பரிந்துரை.
இரண்டாவதாக,
Reserved quota remaining unfilled should be carried forward for a period of 3 years and deserved thereafter.அதாவது, மூன்றாண்டுகள் வரையில் காத்திருக்கவேண்டும். மூன்றாண்டுகளுக்குப் பிறகும் யாரும் வரவில்லை என்றால், அதை திறந்தவெளிப் போட்டியில் எடுத்துச் செல்லலாம். ஆனால், இப்பொழுது நடைமுறையில் அது இல்லை.
மண்டல் ஆணைய அறிக்கையின் பரிந்துரையை யாரும் படிக்கவில்லை. அதைப் போட்டு மிதித்து விட்டார்கள். அது கீழே போய்விட்டது.
நாம் அடையவேண்டிய இலக்கு எது?
நாம் அடைந்திருப்பது வெறும் 27 சதவிகிதம் என்றும், வெற்றி என்றும் கொண்டாடிக் கொண்டிருப்பதைவிட, நாம் அடையவேண்டிய இலக்கு எது என்பதை நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.
Relaxation in upper age limit for direct recruitment should be extended to the candidate for the OBCs, in the same manner as done in the case SCs and STs. A roaster system for each category of posts should be adopted by the concerned authorities in the same manner as is presently done in respect of SC and ST candidates.
இப்படி வரிசையாக சொல்லிவிட்டு, அதைவிட மிக முக்கியமாக என்ன சொன்னார்கள் என்றால், இந்தப் பகுதி மிகவும் முக்கியமானதாகும்.
The above scheme of reservation in its toto should also be made applicable to all recruitment to public sector undertakings both under the Central and State Governments, as also to Nationalised Banks.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், ஒன்றிய அரசில் இருக்கின்ற எல்லா துறைகளிலும் இந்நிலை வரவேண்டும்.
பொதுத் துறைகளை எல்லாம் தனியார்த் துறைகளாக மாற்றப்படுகின்றன!
அதனால் என்ன செய்கிறார்கள் என்றால், பொதுத் துறைகளை எல்லாம் தனியார்த் துறைகளாக மாற்றப்படு கின்றன.
இந்த அமைப்பு இருப்பதற்கே காரணம் என்னவென்றால், இந்த வங்கி தேசியமயமாக்கப்பட்ட தனால்தான், பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அமைப்புகள் இருக்கின்றன. இது தனியார் துறையாக ஆக்கப்பட்டால், இந்த அமைப்புகளே இருக்காது. அமைப்புகள் இருக்கவேண்டிய அளவிற்கு ஆட்களே இருக்காது. முதலாளிகள் என்ன நினைக்கிறார்களோ, அவர்களுடைய விருப்பப்படிதான் நடக்கும் என்கிற மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது.
அடுத்தது என்னவென்றால்,
All private sector undertaking which have received financial assistance from the government should recruit personnel on the aforesaid basis.
எனவே, இந்த மாநாட்டின் வாயிலாக ஒரு மிக முக்கியமான அறிவிப்பை நாங்கள் எங்கள் இயக்கத்தின் சார்பாக வெளியிடுகிறோம்.
தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும்!
அது என்னவென்றால், எங்களுடைய அடுத்தகட்ட போராட்டம் என்னவென்றால், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை அகில இந்திய அளவில் கொண்டு போய்ச் சேர்க்கப் போகிறோம்.
தனியார்த் துறையாக மாறினால், அதில் மறைந்தி ருக்கின்ற மிகப்பெரிய ஆபத்து, புதைக்கப்பட்டு இருக்கின்ற கண்ணிவெடி என்னவென்றால், இட ஒதுக்கீடு தனியார் துறையில் கிடையாது என்பதுதான்!
தனியார் துறையில் இட ஒதுக்கீடு எப்படி கொடுக்க முடியும் என்று கேட்கிறார்கள்.
அமெரிக்காவைப் பாருங்கள். அமெரிக்காவில் affirmative action என்று சொல்லக்கூடிய இட ஒதுக்கீடு இருக்கிறது. கருப்பர்கள் – வெள்ளையர்கள் என்கிற பேதம் இருந்தாலும். அவர்களுக்கு எல்லா வாய்ப்புகளையும் கொடுத்திருப்பது அஃபெர்மெட்டிவ் ஆக்சன் என்கிற இட ஒதுக்கீடுதான்.
நம்முடைய நாட்டிலும் தனியார்த் துறையில் இடஒதுக்கீடு என்ற நிலையை உருவாக்கவேண்டும்!
எனவே, தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று வந்தாயிற்று.
ஆகவேதான் நண்பர்களே, நம்முடைய நாட்டிலும் தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு என்ற நிலையை உருவாக்கவேண்டும்.
அதற்கு அடுத்துச் சொன்னார்கள்,
All Universities and affiliated colleges should also be covered by the above scheme of reservation
முதல் கட்டமாக வேலை வாய்ப்பில்தான்…
கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், மற்ற மற்ற கல்வி அமைப்புகளிலும் 27 சதவிகிதம் வரவேண்டும் என்பதற்காகப் போராடிப் போராடித்தான், முதல் கட்ட மாக வேலை வாய்ப்பில்தான் அந்த 27 சதவிகித இட ஒதுக்கீட்டை கொடுக்க முடிந்தது பிரதமர் வி.பி.சிங் அவர்களால்.
பிறகு தொடர்ந்து போராடியதின் விளைவாக, கலைஞர் அவர்கள் அய்க்கிய முற்போக்குக் கூட்ட ணியில் பங்கேற்றதனால், 93 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தனால், ஒன்றிய அரசின்கீழ் இருக்கின்ற கல்வி அமைப்புகள், அய்.அய்.டி. அய்.அய்.எம். போன்ற கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது நீண்ட காலத்திற்குப் பிறகு வந்தது. இன்றைக்கும் அதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.
‘Eternal Vigilance is the price for our liberty’ என்ற ஒரு வாக்கியம் உண்டு.
எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும்; எப்பொழுதும் கவனத்துடன் இருக்கவேண்டும். அதன்மூலமாகத்தான் நம்முடைய உரிமைகள் பாதுகாக்கப்படும்.
உரிமைகளும் முழுமையாக நமக்கு வரவில்லை; வந்த உரிமைகளும் முழுமையாக நமக்கு நிலைக்கவில்லை!
உரிமைகள் வந்துவிட்டதே என்பதற்காக நாம் அலட்சியமாக இருக்க முடியாது. உரிமைகளும் முழுமையாக நமக்கு வரவில்லை. வந்த உரிமைகளும் முழுமையாக நமக்கு நிலைக்கவில்லை. இன்னும் வரவேண்டியவை பாக்கி இருக்கின்றன. அதனை நோக்கிச் செல்வதற்காகத்தான், இதுபோன்ற மாநாடுகளும், இதுபோன்ற ஆயத்தங்களும், விழிப்பு ணர்வுகளும், மேடைகளும் தேவை.
அந்த வகையில்தான், நீங்கள் எங்களை அழைத்தி ருக்கின்றீர்கள். உங்கள் முன் இதை வைத்துவிட்டோம்.
‘கிரீமிலேயர்’
இங்கே தாய்மார்கள், சகோதரிகள், நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சமையற்காரர் சமைத்து வைத்து விடுவார். சமைத்தால் மட்டும் போதாது. ஆனால், அதை பரிமாறுவது என்பதுதான் மிகவும் முக்கியம். நிறைய பேர் சாப்பிடக்கூடாது; அதிகமாக சாப்பிடக் கூடாது என்பதற்காக, அந்த உணவில் உப்பை அதிகம் போட்டால் போதும், அதிகம் சாப்பிடமாட்டார்கள் என்பதற்காகத்தான் ‘கிரீமிலேயர்’ வருகிறது.
பந்தியில் அமர்ந்த பிறகுதானே, யார் அதிகமாக சாப்பிட்டார்கள்? யார் குறைவாக சாப்பிட்டார்கள்? யாருக்கு சாப்பாடு கிடைக்கவில்லை? என்று தெரியும்.
ஆனால், பந்தியில் அமருவதற்கு முன்பே கிரீமி லேயர் சொல்லுகிறார்கள்.
அதனுடைய ஆபத்து என்னவென்று, அன்றையி லிருந்து இன்றுவரையில் பாடுபடுகின்ற திராவிடர் கழகத்தோடு, கோ.கருணாநிதி போன்றவர்கள், ‘கிரீமிலேயர்’, ‘கிரீமிலேயர்’ என்று போராடுகிறோம்.
உள்ளபடியே அதனுடைய அர்த்தம் என்னவென்று தமிழில் பாருங்கள். ‘கிருமி’, ‘லேயர்’ – அது கிருமி – உள்ளே (லேயர்) இருக்கிறது.
நண்பர்களே, இந்தப் பிரச்சினையை உங்கள் முன் வைத்திருக்கின்றோம்.
நாம் நிம்மதியாக இருக்க முடியாது; இருக்கக் கூடாது. நாம் மட்டுமல்ல, இப்பொழுது திறந்த கதவு கள், அகலப்படுத்தப்பட வேண்டுமே தவிர, மீண்டும் மூடப்படு வதற்கு விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த மாநாடு.
எச்சரிக்கை செய்வதற்குத்தான் இந்த மாநாடு!
அதைச் சொல்லுகின்ற எச்சரிக்கைதான் இந்த மாநாடு! உங்கள் தொண்டனாக, உங்கள் தோழனாக, உங்களுக்காகப் போராடுபவர்களாக நாங்கள் இருக்கின்றோம். அந்த வாய்ப்பைக் கொடுத்தமைக்காக உங்களுக்கு நன்றி!
தொடர்ந்து குரல் கொடுப்போம்!
‘Eternal Vigilance is the price for our liberty’
நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது.
அடைந்துவிட்டோம் என்று நாம் இருந்துவிடக் கூடாது; அடையவேண்டியவை இன்னும் அதிகமாக இருக்கின்றன. அதற்கு உங்களிடம் நல்ல வேல்களும், வாள்களும் அந்தப் போராட்டக் களத்தில் இருக்கின்றன. அவைதான் கருணாநிதி போன்றவர்கள், உங்களைப் போன்ற பொறுப்பாளர்கள்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஏழு தீர்மானங்கள்!
இங்கே சிறப்பாக ஒன்று கூடி, இந்த மாநாட்டில் ஏழு தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறீர்கள். அவை மிக முக்கியானவையாகும்.
ஒன்று, நிறைவேறவேண்டிய கோரிக்கைகள்.
வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். முதலிலேயே சொல்லிவிட்டேன் நான். அதையே தான் இங்கே தீர்மானமாகக் கொண்டு வரவிருக்கிறீர்கள்.
அந்தத் தீர்மானத்தை நீங்கள் நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே, நான் வழிமொழிந்துவிடுகிறேன்.
ஏனென்றால், அந்தக் கருத்துகள் ஒன்றுதான். இரண்டும் இரண்டும் நான்குதான் என்று எங்கே இருந்து கூட்டினாலும், சரியாகக் கூட்டினால் விடை ஒன்றாகத்தான் இருக்கும். அதிலொன்றும் வித்தியாசம் கிடையாது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும்.
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தர ஏதுவாக அரச மைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம்.
கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்கவேண்டும்!
தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு வழங்கிட, அரசமைப்புச் சட்டம் – மத்திய பணியாளர் நலத்துறை யில், 6.10.2017 தேதியிட்ட ஆணை, வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நலக்கேடாக உள்ளதால், அந்த ஆணையை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.
கிரிமீலேயர் முறையை முற்றிலும் நீக்கவேண்டும். அந்த ஆணை வெளியிடப்படும்வரை தற்போது வழங்கப்படும் ஓபிசி சான்றிதழ், ஓராண்டுவரைதான் செல்லும் என்பதற்குப் பதிலாக, மூன்றாண்டுகள் செல்லுபடியாகும் வகையில் ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்.
அனைவருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்!
மண்டல் குழு பரிந்துரையின்படி, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் நீதிபதி நியமனத்திலும், பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் உள்ளிட்ட அனைவருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்.
கடைசிப் பகுதியில் நாம் வெற்றி பெற்று இருக்கின்றோம். அப்படி வெற்றி பெற்று போனவர்தான், தமிழ்நாட்டிலிருந்து மகாதேவன் என்ற நீதிபதி இன்றைக்குப் போயிருக்கிறார்.
நமக்குக் கிடைத்திருக்கின்ற வெற்றிகளில் மகத்தான வெற்றி!
அதைத்தான் முதல்முறையாக கொலீஜியத்தில் சொல்லியிருக்கிறார்கள்,
For the sake of diversity; he is from Backward Class
என்று சொல்லி, முதல் முறையாக, இந்தக் கொள்கை உச்சநீதிமன்றத்தினுடைய கொலீஜியத்தில் ஏற்பட்டு இருக்கின்றது என்பது, நமக்குக் கிடைத்திருக்கின்ற வெற்றிகளில் மகத்தான வெற்றி – அது தொடரவேண்டும்; உங்களுக்கு வாழ்த்துகள்!
தீர்மானத்தை நானே முன்மொழிந்திருக்கிறேன். நீங்கள் வழிமொழிந்து, பின்னால் விளக்கமாக எடுத்துச் சொல்லுங்கள் என்று சொல்லி விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்! வளர்க சமூகநீதி!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.