தமிழ்நாடு பா.ஜ.க. பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கடும் கண்டனம்!
சென்னை, நவ. 4- பார்ப்பனர் களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நேற்று (3.11.2024) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய நடிகை கஸ்தூரி, “300 ஆண்டுகளுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்குச் சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம், இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம்… அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களைத் தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள்? அதனால்தான் உங்களால் தமிழர் முன்னேற்றக் கழகம் என வைக்க முடியவில்லை” எனப் பேசினார்.
நடிகை கஸ்தூரியின் இந்த அவதூறுப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி கூறிய சர்ச்சை கருத்துக்கு தமிழ்நாடு பா.ஜ.க. மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் சுதாகர் ரெட்டி தெலுங்கிலேயே பேசி கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மொழியில் பேசிய காட்சிப் பதிவில் அவர் கூறியதாவது:
“தெலுங்கு பேசும் மக்களை நடிகை கஸ்தூரி இழிவுபடுத்தி இருக்கிறார். அவர் பேசிய கருத்துகள் மோசமானவை.
அவர் தனது கருத்தைத் திரும்பப் பெற்று, தெலுங்கு மொழி பேசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.