‘டிஜிட்டல் கைது’ மோசடிகள் மூலம் 10 மாதத்தில் ரூ.2,140 கோடி இழப்பு

Viduthalai
1 Min Read

புதுடில்லி, நவ.3 கடந்த 10 மாதங்களில் மோசடி கும்பல்களால் ரூ. 2,140 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையின் சைபர் க்ரைம் பிரிவு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையின் சைபர் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ‘சில மோசடி கும்பல்கள், பொதுமக்களிடம் டிஜிட்டல் கைது என்று கூறி, அவர்களை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 92,334க்கும் மேற்பட்ட டிஜிட்டல் கைது மோசடிகள் நடந்துள்ளன. இந்த மோசடி கும்பல்கள் கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும், குறிப்பாக கம்போடியா நாட்டில் உள்ள சீனாவுக்கு சொந்தமான சூதாட்ட விடுதிகளில் இருந்துதான் அதிகளவிலான மோசடி நடப்பதாகக் கூறுகின்றனர்.

இவர்கள் தங்களை காவல்துறை அதிகாரி, அமலாக்க இயக்குநரகம், சிபிஅய், ரிசர்வ் வங்கி போன்ற உயர்மட்ட இந்திய நிறுவனங்களின் அதிகாரிகளைப் போல காட்டிக் கொண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். மாதத்திற்கு சுமார் ரூ. 214 கோடி மோசடி நடப்பதன் மூலம், கடந்த 10 மாதங்களில் ரூ. 2,140 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற மோசடி அழைப்புகள் வந்தாலோ, சந்தேகத்துக்கிடமான அழைப்புகளைப் பெற்றாலோ, மக்கள் உடனடியாக 1930 அவசரகால ஹெல்ப் லைனை தொடர்புகொள்ள வேண்டும். இதன் மூலம், இழந்த பணத்தினை உடனடியாக பெறுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *