புதுடில்லி, நவ.3 பருவநிலை மாற்றத்தால் வரும் 2070-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 24.7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) இழக்கும் எனவும் ஆசியா மற்றும் பசிபிக் பகுதி யும் 16.9 சதவீத இழப்பைச் சந்திக்கும் எனவும் ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) கணித்துள்ளது.
உயரும் கடல் மட்டம் மற்றும் தொழிலாளர் உற்பத்தித் திறன் குறைவு ஆகியவற்றால் ஏற்படும் இழப்புகளால் குறைந்த வருமானம் கொண்ட பலவீனமான பொருளாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அந்த வங்கி வெளியிட்ட ‘ஆசியா-பசிபிக் பருவநிலை’ அறிக்கையின் தொடக்க இதழில் விவரிக்கப்பட்டுள்ளது.
மக்களை பாதிக்கும் அபாயம்
அறிக்கையின்படி, பருவநிலை நெருக்கடி தொடர்ந்து வேகமெடுத்தால், இந்தப் பகுதிகளில் சுமார் 30 கோடி மக்கள் வரை கடலோர வெள்ளத்தில் பாதிக்கும் அபாயம் உள்ளது. 10,000 கோடி டாலா் மதிப்புள்ள கடலோர சொத்துகள் 2070-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் சேதத்தைச் சந்திக்க நேரிடும்.
24.7 சதவீத இழப்பு: 2070-ஆம் ஆண்டுக்குள் பருவநிலை மாற்றத்தால் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16.9 சதவீதம் குறையும். பெரும்பாலான பகுதிகளில் 20 சதவீதத்துக்கும் அதிகமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியா 24.7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) இழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் உமிழ்வு உயர்வு
20-ஆம் நூற்றாண்டு முழுவதும் பசுமை இல்ல வாயுக்கள் (ஜிஎச்ஜி) உமிழ்வுக்கு வளா்ந்த பொருளாதார நாடுகள் முக்கியப் பங்கு வகித்தன. அதேவேளையில், 2000-ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய ஜிஎச்ஜி உமிழ்வுகளின் அதிகரிப் புக்கு வளரும் ஆசிய கண்டம் பிரதான காரண மாக இருக்கிறது. அதாவது உலகளாவிய உமிழ்வில் பிராந்தியத்தின் பங்கு 2000-ஆம் ஆண்டின் 29.4 சதவீதத்திலிருந்து 2021-இல் 45.9 சதவீதமாக உயா்ந்தது. இதில் சீனாவின் பங்கு மட்டும் 30 சதவீதமாகும்.
சிக்கலில் சீனா
உலக மக்கள்தொகையில் 60 சதவீதத்தினா் வசிக்கும் சீனாவில் தனிநபர் உமிழ்வு உலக சராசரியை விட குறைவாகவே உள்ளது. தீவிர புயல்களுடன் பலத்த மற்றும் கணிக்கமுடியாத மழை, நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் அவ்வப்போது இப்பகுதியில் ஏற்படும். குறிப்பாக, இந்தியா-சீனா பன்னாட்டு எல்லை அமைந்த மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் 30 முதல் 70 சதவீதம்வரை அதிகரிக்கும்.புதிய தட்பவெப்ப நிலைகளை சமாளிக்க முடியாமல் அழிந்து வரும் காடுகளின் பரப்பளவு குறைவதன் மூலம் இந்த விளைவுகள் மேலும் மோசமடையும் என்று அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம்
2070-ஆம் ஆண்டு அளவில் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் ஆற்று வெள்ளத்தால் டிரில்லியன் டாலா் மதிப்பீட்டில் ஆண்டுதோறும் மூலதன சேதம் ஏற்படக்கூடும். மேலும் ஆண்டுதோறும் 11 கோடி மக்கள் பாதிப்படைவா். இதனால் பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இழப்பு 2.2 சதவீதமாக இருக்கும்.அதிக டெல்டா பகுதிகள் நிறைந்த வங்கதேசம், தென்கிழக்கு ஆசியாவின் பிற நாடுகள், வியத்நாம் ஆகியவை முறையே 8.2 சதவீதம், 6.6 சதவீதம், 6.5 சதவீதம் என்ற அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைப்புகளை எதிர்கொள்ளும். இந்தோனேசியா மற்றும் இந்தியா சுமார் 4 சதவீத ஜிடிபி இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.அதேபோல், 2070-இல் குறைந்த தொழிலாளா் உற்பத்தித் திறனால் பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இழப்பு 4.9 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா (11.6 சதவீதம்), பாகிஸ்தான் (10.4 சதவீதம்), மற்றும் வியட்நாம் (8.5 சதவீதம்), தென்கிழக்கு ஆசியாவின் மற்ற நாடுகள் (11.9 சதவீதம்) மிகவும் பாதிப்படைய உள்ளன.
பேரழிவுகளால் பொருளாதார சவால்
அறிக்கை வெளியீட்டையொட்டி ஆசிய வளா்ச்சி வங்கி தலைவா் மசட்சுகு அசகாவா கூறுகையில், ‘பிராந்தியத்தில் புயல்கள், வெப்ப அலைகள் மற்றும் வெள்ளம் ஆகிய வழிகளில் பருவநிலை மாற்றம் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இது முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார சவால்களுக்கு பங்களிக்கிறது. பருவநிலை மாற்றப் பாதிப்புகளை பூா்த்தி செய்வதற்கு விரைவான, ஒருங்கிணைந்த பருவநிலை நடவடிக்கை மிகவும் அவசியம். இந்த அவசரத் தேவைக்கு நிதியளிப்பது பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தி, பசுமை இல்ல வாயு உமிழ்வை குறைந்த செலவில் எவ்வாறு குறைப்பது என்பது குறித்த நம்பிக்கைக்குரிய கொள்கை பரிந்துரைகளை உறுப்பு நாடுகளுக்கு இந்த பருவநிலை அறிக்கை வழங்குகிறது’ என்றார். நாடுகள் ஜிடிபி இழப்பு அபாயம் (சதவீதத்தில்) தென்கிழக்கு ஆசியாவின் மற்ற நாடுகள் 23.4 அதிக வருமானம் கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் 22.0.