திருப்பதி, நவ.3 ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் நெருங்கிய உற வினா், 4 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கி கொன்ற நிகழ்வு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எச்சரித்தார்.
இதுதொடா்பாக திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் எல்.சுப்பாராயுடு கூறுகையில், ‘ஏ.எம்.புரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு அருகே அவரின் தாய்மாமன் நாகராஜு (24) வசித்து வருகிறார். சிறுமியுடன் அன்றாடம் விளையாடி வந்த நாகராஜு, 1.11.2024 அன்று மாலை சிறுமியைக் கடைக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டி வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். நாகராஜுவுடன் சிறுமியைக் கண்டதாக அக்கம்பக்கத்தினா் தெரிவித்தனா். காவல்துறையினர் விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நாகராஜு, சிறுமியின் உடலை அடையாளம் காட்டினார்’ என்றார்.
சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மாநில உள்துறை அமைச்சா், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
காங்கிரஸ் குறித்து விமர்சனம்… பதிவை நீக்கிய பிரதமர் மோடி!
புதுடில்லி, நவ.3 காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி அய்ந்து தனித்தனி இழைகளாக (த்ரெட்ஸ்) ட்வீட்களைப் பதிவிட்டிருந்தார்.
அதில், மூன்றாவதாக இருந்த ட்வீட் மட்டும் அழிக்கப்பட்டுள்ளது.அந்தப் பதிவில், “உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவது கடினமானது அல்லது சாத்தியமற்றது என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது. ஒவ்வொரு முறை பிரச்சாரத்திலும் அவர்கள் மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். அவர்களால் ஒருபோதும் அதை நிறைவேற்ற முடியாது என்பதை அவர்கள் அறிவார்கள். இப்போது, மக்களின் முன் அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.
காங்கிரஸ் தற்போது ஆட்சியில் உள்ள இமாச்சலப் பிரதேசம், கருநாடகம் மற்றும் தெலங்கானா வளர்ச்சிப் பாதையில் இருந்து சரிந்து, நிதி நிலைமை மோசமாகி வருகிறது. அவர்களின் உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இது அந்த மாநிலங்களுக்கு செய்யப் படும் வஞ்சகமாகும். இத்தகைய அரசியலால் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்த பிரதமர் மோடி இதற்கு அடுத்ததாக பதிவிடப்பட்ட ட்வீட்டை அழித்துவிட்டார்.
அதில், தவறான தகவலைக் குறிப்பிட்டதால் அந்த ட்வீட் அழிக்கப்பட்டதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.