உயா்நீதிமன்றத்தை அணுக காங்கிரஸ் முடிவு
பானாஜி, நவ.3 கோவாவில் ஆளும் பாஜகவில் இணைந்த 8 காங்கிரஸ் சட்டமன்ற உறுப் பினர்களுக்கு எதிரான தகுதிநீக்க மனுவை பேரவைத் தலைவா் ரமேஷ் தாவத்கா் நிராகரித்தற்கு எதிராக உயா்நீதிமன்றத்தை நாட காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.
கோவா காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் திகம்பா் காமத், அலிக்சோ செகியூரா, சங்கல்ப் அமோங்கா், மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, கேதா் நாயக், ருடால்ஃப் ஃபொ்னாண்டஸ், ராஜேஷ் ஃபல்தேசாய் ஆகிய 8 போ் கடந்த 2022-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தனா். அவா்களை தகுதிநீக்கக் கோரி கோவா பேரவைத் தலைவரிடம் அப்போதைய பிரதேச காங்கிரஸ் தலைவா் கிரிஷ் சோடங்கா் மனு அளித்திருந்தார்.இந்த மனுவை நிராகரித்த பேரவைத் தலைவா் தாவத்கா், ‘தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா் சார்ந்திருக்கும் அரசியல் கட்சி வேறொரு அரசியல் கட்சியுடன் இணைக்கப்பட்டால் அந்த உறுப்பினா் தகுதி நீக்கத்தை எதிர்கொள்ள மாட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சோடங்கா் தனது மனுவில், இந்த வழக்கில் உறுப்பினா்கள் சார்ந்திருந்த அரசியல் கட்சி (காங்கிரஸ்) எந்த மாற்றுக்கட்சியுடனும் முறையாக இணைக்கப்பட வில்லை என்ற வாதத்தை முன்வைத்திருந்தது குறிப்பிடத் தக்கது.
பேரவைத் தலைவரின் முடிவுக்கு அதிருப்தி தெரி வித்து கிரிஷ் சோடங்கா் அளித்த பேட்டியில், ‘ எனது தகுதி நீக்க மனு மீது ஏறக்குறைய கடந்த 2 ஆண்டுகளாக பேரவைத் தலைவா் எந்த முடிவையும் அறிவிக்காமல் இருந்ததால் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டியிருந்தது. மனு மீது விரைவில் முடிவெடுக்குமாறு பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தகுதிநீக்க விவகாரத்தில் பேரவைத் தலைவரிடமிருந்து உத்தரவைப் பெறுவது வெறும் சம்பிரதாயம் மட்டுமே. உயா்நீதிமன் றங்களுக்குச் செல்வதற்கு முன் பேரவைத் தலைவரை அணுகி, அவரிடமிருந்து உத்தரவு பெறும் நடைமுறையை நான் முடித் துள்ளேன்.தொடா்ந்து, பனாஜி யில் உள்ள மும்பை உயா்நீதி மன்றத்தின் கோவா கிளை அல்லது உச்சநீதிமன்றத்தில் முறையிடுவேன். இது குறித்து சட்டபூா்வ ஆலோசனையைக் கேட்டுவருகிறேன்.
அரசமைப்புச் சட்டத்தின் 10-ஆவது அட்டவணையை பேரவைத் தலைவா் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். எனது மனு கட்சித் தாவல் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்படுவதைப் பற்றியது. இந்த எட்டு சட்டமன்ற உறுப்பினர்களால் பாஜகவில் இந்திய தேசிய காங்கிரஸ் இணைக்கப்பட்டதாக ஆகாது.
ஒரு கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளில் நான்கில் மூன்று பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றுக் கட்சியில் இணைய எண்ணி னாலும், சொந்த கட்சியின் அனுமதியின்றி அணி மாற முடியாது என்பதற்கு உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு உதாரணமாக இருக்கிறது’ என்றார்.