புதுடில்லி, நவ.2 தலைநகர் டில்லியின் ஷஹ்தாரா பகுதியில் உள்ள ஃபர்ஷ் பஜாரில் 31.10.2024 அன்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்; 10 வயது குழந்தை காயமடைந்தது. இதுகுறித்து டில்லி காவல்துறையினர் கூறுகையில், ‘ஆகாஷ் சர்மா (40), அவரது உறவினர் ரிஷப் சர்மா (16) ஆகியோர் தங்களது வீட்டில் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவரது வீட்டிற்கு வந்த இருவர், ஆகாஷ் சர்மாவையும், ரிஷ்ப் சர்மாவையும் துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
மேலும் ஆகாஷின் 10 வயது மகன் கிரிஷ் சர்மாவும் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் ஆகாஷ் மற்றும் ரிஷப் ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபின் அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக துப்பாக்கிச் சூடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. குற்றவாளிகளை தேடி வருகிறோம்’ என்றனர்.