ராமேசுவரம், நவ.2- இலங்கை ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் பலாலி – அச்சுவேலி பிரதான சாலையை 34 ஆண்டுகள் கழித்து இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்க நேற்று (2.11.2024)உத்தரவிட்டார்.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் பலாலி – அச்சுவேலி இடையேயான பிரதான சாலை கடந்த 1990ம் ஆண்டி லிருந்து இலங்கை ராணுவத்தின் கட்டுப் பாட்டில் இருந்து வருகிறது. 2009ஆம் ஆண்டில் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர், இராணுவம் கையகப்படுத்திய இந்த சாலையை பொது மக்களின் உபயோகத்திற்காக மீண்டும் திறக்க வேண்டும் என்பது யாழ்ப்பாணம் மக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் 34 ஆண்டுகள் கழித்து யாழ்ப்பாணம் பலாலி – அச்சுவேலி பிரதான சாலை இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.
இது குறித்து இலங்கையின் அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த மூன்று தலைமுறைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் பலாலி – அச்சுவேலி பிரதான சாலை வெள்ளிக்கிழமை திறப்படுகிறது. உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இந்த பிரதான சாலை மூடப்பட்டதுடன், யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை இந்த சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை. இந்த சாலையை திறப்பது தொடர்பாக வடமாகாண மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் 22 அன்று அதிபர் அநுர குமார திசாநாயக்கவுடன், இலங்கை ஆளுநர்கள் சந்திப்பின்போது, வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் இந்த சாலையை திறக்க அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, இந்த சாலையை திறப்பது தொடர்பாக பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த சாலையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திறக்கப்பட்ட பலாலி – அச்சுவேலி சாலை பிரதான சாலையின் இரு பக்கங்களிலும், மக்கள் மீள் குடியேற்றப்பட வேண்டும், அந்த சாலையோரங்களில் உள்ள ஆலயங்களில் வழிபாடு செய்யவும் அனுமதி வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.