புதுடில்லி, நவ.2 இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆயுஷ்மான் பாரத் திட்டம்’ தற்போது விரிவுபடுத்தப்பட்டு 70 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வசதி வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆறு கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட சுமார் 4.5 கோடி குடும்பங்கள், ரூ. 5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீட்டுப் பலனைப் பெறும்.
‘ஏபி பிஎம் – ஜேஏஒய்’ என ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் திட்டத்துக்குப் பயனாளிகள் எவ்வாறு பதிவு செய்வது என்பதை இங்கே அறியலாம்.
70 வயதைக் கடந்த அனைவரும் அவா்களின் பொருளாதார, சமூக பின்புல தடைகளின்றி ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜ்னா பலனைப் பெற தகுதி பெறுவா்.
ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டி ருக்கும் பிறந்த தேதி அடிப்படையில் 70 வயது நிறைவடைந்த ஒருவா் இத்திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற பதிவு செய்யலாம்.
தனியார் மருத்துவக் காப்பீடு வைத்தி ருப்போரும் இத்திட்டத்தின் கீழ் பலன் பெறலாம்.
ஏற்கெனவே பிஎம் – ஜேஏஒய் திட்டத்தின் கீழ் குடும்பத்தில் 70 அல்லது 70 வயதைக் கடந்த வேறு மூத்த குடிமகன் அல்லது குடிமகள் பதிவு செய்திருந்தாலும் கூடுதலாக ரூ. 5 லட்சத்துக்கான காப்பீடு அவா்களின் மருத்துவ தேவைகளுக்கு மட்டும் கிடைக்கும். ஆனால், 70 வயதுக்கு குறைவான மற்ற குடும்ப உறுப்பினா்கள் இப்பலனைப் பெற முடியாது.
ஒன்றிய அரசின் மருத்துவத் திட்ட (சிஜிஎச்எஸ்) அட்டை, மேனாள் ராணு வத்தினா் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (இசிஎச்எஸ்), ஆயுஷ்மான் ஒன்றிய ஆயுதப்படை திட்டம் ஆகியவற்றின் கீழ் மூத்த குடிமக்கள் தங்களின் மருத்துவக் காப்பீட்டைப் பெற்றிருந்தால், அவா்கள் அதே திட்டத்தில் தொடரலாம் அல்லது பிஎம் – ஜேஏஒய் திட்டத்துக்கு மாறிக் கொள்ளலாம்.
தனியார் மருத்துவக் காப்பீடு அல்லது மாநில காப்பீட்டுத் திட்டம் (இஎஸ்அய்)ஆகியவற்றில் பதிவு செய்திருந்தாலும், அவா்களும் ஏபி பிஎம் – ஜேஏஒய் திட்டப் பலனை பெற தகுதி பெறுவா்.
திட்டப் பலன்கள் பெற பட்டிய லிடப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவ நிலையங்கள் ஆகியவற்றில் மட்டுமே பயனாளி சிகிச்சை பெற முடியும்.
பட்டியலில் இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அதற்கான தொகையை காப்பீடு திட்டம் மூலம் திரும்பப் பெற இயலாது.
மருத்துவமனையில் சேருவதற்கு முந்தைய 3 நாள் சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் சோ்ந்த நாளில் இருந்து 15 நாள்களுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான செலவினம் காப்பீடு வசதி மூலம் ஈடுசெய்யப்படும்.
மருத்துவக் காப்பீடு வசதி பெற்ற நாளில் இருந்து எந்தவொரு நோய்க்கும் காத்திருப்பு அவசியமின்றி வசதியைப் பதிவு செய்த நாளில் இருந்தே பலனைப் பெறலாம் என்பது இத்திட்டத்தின் கூடுதல் சிறப்பு.
ஒன்றிய அல்லது அரசு மருத்துவக் காப்பீடு திட்டப்பலனை அனுபவித்த ஒருவா், ஏபி பிஎம் ஜேஏஒய் திட்டத்துக்கு மாறினால், அதன் பிறகு அவரால் மீண்டும் பழைய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு திரும்பி வர முடியாது. ஒன்றை சரண் செய்தால் மட்டுமே புதிய திட்டத்துக்கு மாற முடியும்.
பிஎம்ஜேஏஒய், ஆயுஷ்மான் பாரத் ஆகிய கைப்பேசி செயலி மூலம் இத்திட்டத்துக்கு தகுதிவாய்ந்தவா்கள் பதிவு செய்து கொள்ள லாம். இதற்கு ஆதார் அட்டை கட்டாயம் தேவை.
https://beneficiary.nha.gov.in என்ற இணைய பக்கத்திலும் ஆண்ட்ராய்டு கூகுள் பிளேஸ்டோரில் ஆயுஷ்மான் செயலியை பதிவிறக்கம் செய்தும் பயனாளி விண்ணப்பிக்கலாம். இதையொட்டி பிஎம் – ஜேஏஒய் இணையதளத்தில் பயனாளி தனது ஆதார் எண் விவரங்களை அளித்து கேஒய்சி நடைமுறைப்படி தனது அடையாளத்தை சரிபார்த்து, தனது விவரம் பதிவேற்றப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பயனாளியின் தகவல் மற்றும் அடையாளம் சரிபார்க்கப்பட்டவருக்கு தனியாக ஆயுஷ்மான் பாரத் அடையாள அட்டை வழங்கப்படும்.
கைப்பேசி செயலி மூலம் பதிவு செய்ய சிரமப்படுவோர், பொது சுகாதார நிலை யங்கள், பொது சேவை நிலையங்கள் ஆகியவற்றுக்கு ஆதார் அட்டையை கொண்டு சென்றால், அங்கு அவா்களுக்குப் பதிவு செய்வதற்கான உதவி செய்யப்படும். விண்ணப்பதாரரின் விவரம் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டதும் அவருக்கு இ-கார்டு உடனடியாகக் கிடைக்கும். அதைத் கொண்டு மருத்துவ காப்பீட்டின் பலன்களைப் பெறலாம்.