சென்னை, நவ.1- பெயர் பதிவு செய்யாமல் உள்ள பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க டிசம்பர் மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுரு பரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ குடியுரிமைக்கான சான்று. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்ய வேண்டும். ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின், அந்தக் குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்துக்குள், குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு-இறப்பு பதிவாளரிடம் அளித்து எந்தவித கட்டணமும் இன்றி பெயரை பதிவு செய்திடலாம்.
12 மாதங்களுக்கு பின்னர் குழந்தையின் பெயரை பதிவு செய்திட வேண்டுமெனில் கால தாமத கட்டணம் ரூ.200 செலுத்தி பதிவு செய்திட முடியும். தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகளின்படி, 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு முன் பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கு பதிவு செய்ய வழிவகை செய் யப்பட்டுள்ளது. அதன்படி, 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை பெயர் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்த கால அளவு 2019ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த கால அளவு முடிந்த நிலையில் பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்திட பொது மக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
டிசம்பர் 31-ஆம் தேதிக்குள்…
எனவே, பெயர் பதிவு செய்யாமல் உள்ள அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும், பெயர் பதிவு செய்திட மேலும் 5 ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசம் வரும் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.எனவே, சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண் டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பின், பிறப்பு சான்றிதழ் நகல், பள்ளி சான்றிதழ், ஆதர் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள மண்டல அலுவலகங்களில் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகத்தில் பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்று பயன்பெறலாம்.இனி வரும் காலங்களில் கால அவகாசம் நீட்டிப்பு வழங்கிட இயலாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.