ஊசிமிளகாய்
ஆரியம் என்பது ‘விதைக்காது விளைக்காது விளையும் கழனி’ என்றார் அறிஞர் அண்ணா!
அண்ணாவின் ‘ஆரிய மாயை’ இன்றும் பொருந்தக் கூடிய இலக்கணமே என்பதற்குச் சாட்சியாக முப்புரி நூலோருக்கு பாதந்தாங்கியாகவும், கூலிப்படையாகவும் ஒருவர் புதிய வேடம் தரித்துப் புறப்பட்டுள்ளார்.
‘பாரா உஷார்! உஷார்!!’ என்று பார்ப்பனர் புடைசூழ வருகிறார்!
அண்மைக்காலங்களில் கூலிப்படை கிரிமினல்கள் – நல்ல ரேட் பேசியோ, பேசாமலோ அல்லது கிடைத்த வரை லாபம் என்றோ கொலை செய்ய களத்தில் ரெடிமேட் ஆசாமிகளாக இருப்பதுபோல, ‘‘பார்ப்பனர் வல்லாண்மை – மனுதர்மமே மீண்டும் அரியணை ஏறவேண்டும்; அதற்குத் தமிழ்நாட்டு திராவிட மாடல் ஆட்சியும், அதனுடன் கூட்டணியாக உள்ள முற்போக்கு கட்சிகளும் ஒருங்கிணைந்து, தங்களது பிரித்தாளும் தந்திர வலையில் சிக்காதவர்களாக இருக்கிறார்களே’’ என்ற ஏக்கத்தினால், இப்படிப்பட்ட புதிய கூலி ஏஜெண்டுகளை களத்தில் இறக்கி, ‘போர்ப்பரணி’ நடத்தவிருக்கிறார்களாம்! பலே, பலே! பேஷ், பேஷ்!!
‘‘பிராமணர்களை இழிவுபடுத்துகின்றது தி.க.’’ என அதற்காக ஒருவர் தன்னை விற்றுக்கொண்டு, சல்லடம் கட்டி ‘‘சாமி’’ ஆடுகிறார்!
அந்தோ பரிதாபம்! பரிதாபம்!! அவருக்குத் தெரியாது– இந்தத் திராவிடம் ஒரு கற்கோட்டை – அதில் மோதி, ‘‘ஒழிப்போம், அழிப்போம்’’ என்று கொக்கரித்தவர்களின் பழைய பட்டியல்பற்றி!
இது இராமாயண, பாரத, மனு, மாந்தாதா கால மல்ல; ஏகலைவன் கட்டை விரலை வெட்டி துரோ ணாச்சாரியார்களுக்குக் கொடுக்கும் ஏமாந்த காலமும் அல்ல; துரோணாச்சாரிகளின் வில்லை முறித்து, ‘பத்தி ரமாக ஓடிப்போ’ என்று கூறும் துணிவுள்ள பெரியார் காலம்!
சூத்திர சம்பூகன்களின் கழுத்தை ஏதோ மாம்பழம் அறுப்பதுபோல எந்த இராமனும் இன்று வெட்ட முடியாது; அன்றேகூட வாலியை எதிர்க்க சுக்ரீவனைத் தேடி கருவியாகக் கொண்டதோடு, மரத்திற்குப் பின்னால் இருந்துதான் அம்பு எய்தி அயோக்கியத்தனம் செய்து – போர் முறை விதிகளுக்கு மாறாக வென்றதாகத்தான் கதை.
அது இன்று நடக்காது; புதிய சுக்ரீவன், அனுமார் ஆகிய குரங்கு பட்டாளமும் கூடி நின்று எதிர்த்தாலும், ஓடி ஒளிந்து முறிந்த முதுகெலும்போடு தரைக்கு முத்தமிடும் பரிதாபம்தான் அவர்களுக்கு இன்று ஏற்படும்!
‘நவீன விபீஷணர்கள்’, ‘பிரகலாதன்களோ’ கூலி பெற்று வயிற்றைக் கழுவலாமே தவிர, ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்பதைக் காணும் நல் வாய்ப்பை ‘அவாளை’ தேடி வந்து தருகிறார்கள். ‘நண்டு கொழுத்தால் வளையில் தங்காது; வெளியே வந்து தானே சிக்கிக்கொள்ளும்’ என்பது போன்று, வம்பு சண்டைக்கு வருகின்றனர் – கூலிகள், காலிகள், முகக்கவசங்களை முன்வைத்து!
இன்றைய சந்ததியினர் பலருக்கும் தெரியாது; சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தபோது, இப்படித்தான் ஒரு விபீஷணர் கிளம்பி களம் காண முயற்சித்து மூக்கறுப்பட்டு முடங்கிப்போனது. அவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் என்ற புலவரின் மூத்த சகோதரரான கிருஷ்ணசாமிப் பாவலர் என்பவர்! (சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர்).
கொஞ்ச நாள் ஆட்டம் பாட்டம்; பிறகு அட்ரஸ் தெரியாது போனார்!
அதற்கடுத்து 1940–களில் கடலூர் பகுதி
எம்.என்.முத்துக்குமாரசாமி பாவலர்.
அவருக்கும் கொஞ்சம் ஆரியம் தந்த அபார விளம்பரம் – பிறகு எரிகற்கள் விழுவதுபோல் ஆனார்!
அதன் பிறகு, விபூதி வீரமுத்து சாமியார், ‘தார்மீக ஹிந்து’ ஜெகந்நாத் அய்யங்கார், அணுகுண்டு அய்யாவு போன்ற சிலர். பிறகு, விபூதி வீரமுத்து, தஞ்சாவூரில் ஆசிரியருக்கு மாலையோடு வரவேற்பு தந்தார், கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி தொடங்கிய மருந்துக்கடைத் திறப்பு விழாவின்போது!
அய்யம்பேட்டை மாரிமுத்து என்ற ஒருவர்; வலங்கைமான் அப்துல் சத்தார் என்ற ஒருவர். பிறகு, தந்தை பெரியாரிடம் அவர் மன்னிப்புக் கேட்டு, ‘கழுவாய்’ தேடினார்.
‘‘மண்ணெண்ணெய் வீரர்’’ ம.பொ.சி. நாடெங்கும் இன்றைய கூலிப்படைபோல ‘‘திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை’’ பலவிடங்களில் நடத்தி, பிறகு தனது வியாபாரக் கொள்முதலே காணாமற்போய் விட்டதால், கடைசியில் தி.மு.க.விடம், திராவிடத்திடம் அரசியல் சரணாகதி அடைந்து, மேலவைப் பதவியும் பெற்றார். தி.மு.க.வினால்தான் சிலையாக நிற்கிறார்!
இப்படி முளைத்து முடிந்துபோனவர்களின் சில்ல ரைப் பட்டியலோ ஏராளம். எழுதும் அளவுக்குத் தகுதி யற்றவர்கள் – தலையிழந்து தம்மை விற்றுக்கொண்டு காணாமற்போனார்கள்!
‘‘உன்னை விற்காதே’’ என்று கவிதை எழுதினார் நம் புரட்சிக்கவிஞர்.
அந்தக் கவிதை இப்போது புதிதாக தன்னை விற்றுக்கொள்ளும் ஆரிய அடிமைகளுக்கும், பார்ப்பன அடிவருடிகளுக்கும் பொருந்தும்.
இளைய தலைமுறை புரிந்துகொள்வீர்! இது எமக்குப் புதியதல்ல – பழைய கதை.
இதோ அந்த அருமையான கவிதை!
‘‘நெஞ்சிலுற்றது செய்கையில் நாட்டுதல்
நீச மன்று; மறக்குல மாட்சியாம்!
தஞ்சமென்று பிறன்கையில் தாழ்கிலாத்
தன்மை யாவது வீரன் முதற்குணம்!
நெஞ்சி லூறிக் கிடந்த தம் பூமியை
நேரில் மற்றவர் ஆண்டிடப் பார்த்திடும்
பஞ்சை யன்று. துரியன் இராவணன்
பாரதக் குலம் வேண்டிடும் பண்பிதே.
தன் குலத்தினைத் தூக்கிடும் தாம்பெனச்
சகம் சிரிக்கப் பிறந்தவி பீஷணன்
நன் மனத்தவன் ராமனைச் சார்ந்ததை
நல்லதென்பது ராமன் முகத்துக்காம்.
இன்பம் வேண்டிப் பிறன்வச மாவதை
இந்தத் தேசம் இகழ்ந்திடும் மட்டிலும்
துன்ப மன்றிச் சுகம்கிடை யாதென்றே
துரைகள் சேர்ந்த சபைக்குமுன் கூறுவேன்.’’
முன்பு, நீதிக்கட்சியை வீழ்த்தி விட்டோம் என்று இறுமாந்த (அ)சத்தியமூர்த்தி அய்யர்களின் காலம் வேறு; ஏமாறமாட்டோம் என்பதை திராவிடம் 1967 முதல்… ஏன் அதற்குமுன் 1954 காமராசர் காலம்முதல் நிரூபித்துக் காட்டியுள்ளது – வரலாறு பேசும் என்றும்.
பார்ப்பனர்களின் பொய்யழுகை, போலிக் குற்றச் சாட்டுகள், பொல்லாங்குப் பரப்புரைகள், திட்டமிட்ட பழிதூற்றல் இன்றைய தலைமுறையினரிடம் எடுபடாது, எடுபடவே எடுபடாது. காரணம், அவர்களின் கைகளில் ஒரு போராயுதம் உள்ளது!
அதுதான் பெரியார்! பெரியார்!! பெரியார்!! என்ற தத்துவம்!
எதிரிகளின் மூலபலம் அறிந்து, அதனை முறி யடிப்பதே பெரியாரின் போர் முறை என்பதைப் புரிந்துகொள்வீர், புல்லர்களே!
இறுதியில் புழுதிதான் மிஞ்சும்!!
இது திராவிட ‘‘சம்பூகன்கள்’’, ‘‘ஏகலைவன்கள்’’ ஆளும் காலம்; குற்றம் சுமத்தியோ, பழி சுமத்தியோ ஆட்சியை அழிக்க நினைக்கும் கூலிப்படைகள் தோற்றோடிப் போவது உறுதி! உறுதி!!