காற்று மாசு -தீ விபத்துகள்- மரணம்!
சென்னை, நவ.1 தீபாவளியால் காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு நாசங்கள் ஏற்பட்டுள்ளன.
இதன் விவரம் வருமாறு:
டில்லியில் காற்று மாசு உச்சத்தை தொட்டது!
முதியவர்கள், நோயாளிகள் கடும் பாதிப்பு!!
பட்டாசுகளை அதிகளவில் வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு, காற்று மாசு காரணமாக குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். தீபாவளி என்றாலே, காற்றில் மாசு படிவது என்பது தொடர்கதையாகிவிட்டது. பெரும்பாலும் தலைநகர் டில்லியில்தான் இப்படியொரு பிரச்சினை ஏற்படுகிறது.. இதனால், சுவாச பிரச்சினை, தோல் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு அம்மக்கள் ஆளாகி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே, காற்று மாசைக் கட்டுப்படுத்த டில்லி அரசும் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. பெரும்பாலும், பட்டாசு வெடிப்பதற்கு டெல்லி அரசு தடைகளை விதித்தே வருகிறது. இந்த முறையும் பட்டாசு விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையாம்!
ஏற்ெகனவே டில்லியில் மாசு படர்ந்து வரும் நிலையில், தீபாவளியையொட்டி, மாசு அளவு அளவுக்கு அதிகமாக காணப்பட்டது.. காற்றின் தரம் மிகவும் மோசமாக பதிவாகியிருக்கிறது. நேற்று (31.10.2024) கூடுதலாக காற்றின் தரம் மோசமடைந்தது.
பொதுவாக காற்றின் தரம் AQI அளவுகளில் 4 வகையாக மதிப்பிடப்படுகிறது. “மோசமானது” என்றால் (AQI 201-300), “மிகவும் மோசமானது” என்றால் (301-400), “கடுமையானது” என்றால் (401-450), “கடுமையாகத் தீவிரமானது” என்றால் (450க்கு மேல்) என்பது காற்றின் தரத்தின் அளவுகோலாகும்.
காற்றின் தரம்!
அந்தவகையில், காற்றின் தரம் தீபாவளியையொட்டி மோசமாக அதாவது AQI 300 முதல் 400 வரை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு நிறுவனம் ஏற்ெகனவே கணித்திருக்கும் நிலையில், பட்டாசு வெடிப்பதற்கான தடை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பட்டாசுகளுக்குப் பதிலாக தீபங்களை ஏற்றிக் கொண்டாடுங்கள் என்று டில்லியின் மேனாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் 4 இடங்களில்
காற்று மாசு மிகவும் மோசம்!
சென்னையில் தீபாவளியின் பெயரால் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட மாசு காரணமாக, காற்றின் தரம் மிகவும் மோசமடைந்திருக்கிறது.
தீபாவளியின் பெயரால் பட்டாசு பயன்பாடு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் காற்று மாசும் அதிகரித்து வருகிறது. எனவே, பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் என்றும், பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே அரசு தரப்பில், பட்டாசுகளை வெடிப்பதற்கான நேரமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், நேரக்கட்டுப்பாடு இல்லாமல் சிலர் பட்டாசுகளை வெடித்து வருகின்றனர். இதனால் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு சென்னையில் காற்றின் தரம் மிக மோசனமான அளவில் பதிவாகியிருந்தது. 2022 தீபாவளி அன்று மட்டும் சென்னைவாசிகள் சுமார் 32 சிகிரெட்டுகளை புகைக்கும் அளவுக்கு காற்று மாசடைந்திருந்தது. காற்று மாசை அளவிட AQI பயன்படுத்துவார்கள். இந்த அளவீட்டின்படி காற்று மாசு 200அய் கடந்துவிட்டால், அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்று அர்த்தம். 2022 தீபாவளியன்று சென்னையில் பல இடங்களில் காற்று மாசு 700அய் கடந்திருந்தது.
பொதுவாகவே காற்றில் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், சல்பர் ஆக்சைடுகள், ஹைட்ரோ கார்பன் நுண்துகள்கள் இருக்கும். ஆனால், பட்டாசு வெடிக்கும் பொழுது நுண் துகள்களுடன் ஆர்செனிக், லித்தியம், காட்மியம், ஆன்ட்டிமோனி, பாதரசம் போன்ற கன உலோகங்களின் நச்சுக்களும், பேரியம், பொட்டாசியம், கந்தகம், நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டைஆக்சைடு, ஸ்ட்ரோடியம், , க்ளோரைடு, ஓசோன், பெர்க்ளோரைடு, அலுமினியம், தாமிரம் போன்ற உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல்வேறு நச்சு சேர்மங்களும் வெளியேறுகின்றன.
சென்னையில் நேற்று (31.10.2024) மதியம் நிலவரப்படி 4 இடங்களில் காற்று மாசு 200அய் கடந்திருக்கிறது. குறிப்பாக ஆலந்தூரில் 257ஆக காற்று மாசு பதிவாகியுள்ளது. நேரம் ஆக, ஆக காற்றின் தரம் மோசமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஆனால் நேற்று (31.10.2024) காலை திடீரென எதிர்பாராத விதமாக மழை பெய்தது. தொடர்ந்து இதேபோல மழை பெய்தால் காற்றின் தரம் ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றுமாசு அதிகரித்தால் என்ன ஆகும்?
உலகம் முழுவதும் ஏற்படும் இறப்புகளில் 9 இல் ஒரு இறப்புக்கும், 7 கோடி premature இறப்புகளுக்கும் காற்றுமாசு காரணமாக உள்ளது. காற்றில் மாசு அதிகரிக்கும் போது ஆஸ்துமா, புற்றுநோய், ஸ்ட்ரோக், நுரையீரல் பாதிப்புகள் உள்பட பல்வேறு நோய்கள் அதிகரிக்கின்றன. மேலும், மனநிலை பாதிப்பு ஏற்படவும், நீரிழிவு அதிகரிக்கவும் காரணமாகிறது. குழந்தைகளின் வளர்ச்சியை பாதிப்பதாகவும் கூட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வெங்கடாபுரம் ஏரிக்கரையில் கார் கவிழ்ந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த அய்.டி. ஊழியர் உள்பட 3 இளைஞர்கள் காருடன் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீபாவளியையொட்டி வெளியூர் செல்வது, சொந்த ஊர் செல்வது, சுற்றுலா செல்வது என பலரும் பயணத்தை விரும்புகிறார்கள். இந்நிலையில் தீபாவளிக்கு முதல் நாளான அக்டோபர் 30 ஆம் தேதி பெங்களூரு அய்டி ஊழியர்கள், ஓசூர் அருகே காரில் வந்த போது, விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உழவர் சந்தை அருகே உமாசங்கர் நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் மகேஷ்(வயது25). பெங்களூரு அய்.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதுபோல் ஓசூர் ஆவலப்பள்ளி சாலை ஜி.கே.டி. நகரை சேர்ந்த சிவக்குமார் என்பவருடைய மகன் லிண்டோ(25). சின்ன எலசகிரியை சேர்ந்தவர் அங்கப்பா மகன் யோகேஸ்வரன்(25). தனியார் நிறுவன ஊழியராக வேலை செய்து வந்தனர். மகேஷ், லிண்டோ, யோகேஸ்வரன் ஆகிய 3 இளைஞர்களும் நண்பர்களாவர்.
இவர்கள் 3 பேரும் ஒசூர் அருகே வெங்கடாபுரம் ஏரிக்கரையில் கடந்த 30 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்தனர். லிண்டோ காரை ஓட்டிச் சென்றார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் 3 பேரும் காருடன் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் கிரேன் உதவியுடன் ஏரியில் மூழ்கிய காரை மீடடார்கள். அப்போது காருக்குள் பிணமாக கிடந்த மகேஷ் மற்றும் லிண்டோ உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான யோகேஸ்வரன் உடலை தீவிரமாகத் தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று (31.10.2024) யோகேஸ்வரன் உடலை தீயணைப்புப் படையினர் கண்டுபிடித்து மீட்டனர். இது குறித்து பாகலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீபாவளிக்கு முதல் நாள், காரில்சென்ற நண்பர்கள், ஏரியில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு ஓசூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பட்டாசு விபத்துகளால் 304 பேர் பாதிப்பு
தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்ததில் தமிழ்நாடு முழுவதும் சிறிய பட்டாசு விபத்துகளால் 304 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு விபத்து தொடர்பாக தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டறைக்கு பொதுமக்களிடம் இருந்து 128 அழைப்புகள் வந்துள்ளன. பட்டாசு வெடித்ததில் தீ விபத்து தொடர்பாக 97 அழைப்புகள் வந்துள்ளன என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் மட்டும் சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட 17 விபத்துகள் நிகழ்ந்து 54 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளி அன்று தமிழ்நாட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: எண்ணூரில் பயங்கர தீ விபத்து!
எண்ணூர் காமராஜர் நகரில் குடியிருப்புப் பகுதியில் தீபாவளியன்று (31.10.2024) இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காமராஜர் நகர் பகுதியில் மக்கள் பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற எண்ணூர் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள் அங்கு தீயைக் கட்டுக்குள் கொண்டுவர கடுமையாகப் போராடினர்.
இந்த தீ விபத்து குறித்து எண்ணூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்: பனியன் நிறுவனத்தில் தீ விபத்து!
ரூ.40 லட்சம் பொருள் இழப்பு
சேலம் தாதகாப்பட்டி சிறீரங்கன் புதுத் தெருப் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ். இவர் கே.எஸ். தியேட்டர் பின்புறம் பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். தீபாவளி அன்று பனியன் நிறுவனத்துக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், அப்பகுதியில் வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறி ஒன்று பனியன் நிறுவனத்துக்குள் விழுந்துள்ளது. அதில் குடோனுக்குள் இருந்த பொருள்களில் தீப்பற்றியது. மளமளவென தீ பரவி குடோன் முழுவதும் எரிய தொடங்கியது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு அலுவலர் சிவகுமார் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக தெரியவந்துள்ளது.